பிரேம்சந்த் ரங்கசாலை
பிரேம்சந்த் ரங்கசாலை என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவில் அமைந்துள்ள ஒரு நாடக அரங்கம் ஆகும். இது ராஜேந்திர நகரில் அமைந்துள்ளது. [1]
வரலாறு
தொகுபீகார் அரசாங்கத்தால் 1971 ஆம் ஆண்டில் பிரேம்சந்த் ரங்கசாலை அரங்கம் அமைக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நாடக அரங்குகளில் ஒன்றாக இவ்வரங்கம் கருதப்படுகிறது. 1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இங்குள்ள கலையரங்கத்தில் எந்த நாடகமும் நடத்தப்படவில்லை. [2]
பீகாரின் சேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நாடகக்கலைஞர் பீகார் மாநிலம் நாடகத்தில் தேசிய அளவிலான முக்கியத்துவம் பெற பெரிதும் பாடுபட்டார். ஆனால் பீகாரில் உள்ள இரு நாடக நிறுவனங்கள் கவனிப்பாரற்று சில காலம் இருந்தன. அவற்றுள் ஒன்று காளிதாஸ் ரங்கசாலை ஆகும். அக்காலகட்டம் வரை ரூ.5 இலட்சமே அது பெற்றதோடு, அடிப்படை வசதிகள் இல்லாமல் சில காலம் இருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கேதார்நாத் பாண்டே அவர்களால் நன்கொடையாகத் தரப்பட்ட நிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ரங்கசாலையில் திவ்யா பட்டா, ஹீபா ஷா, ஷ்யாம் ஷர்மா, சஞ்சய் கபூர் ஆகியோரின் நாடகங்கள் நடைபெற்றன. ஆரம்பத்தில் அரசிடம் இருந்து எவ்வித நிதியும் பெறப்படவில்லை. [3]
1974 ஆம் ஆண்டில் பிரேம்சந்த் ரங்கசாலையானது மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பண்பாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் பின்னர் அரங்கமானது மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன்பிறகு, நாடகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. [2]
2010 இல் நாடகசாலையானது மோசமான நிலையில் இருந்தது. இந்திய உருக்கு ஆணையம் ரூ.10 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியது. அப்போது ரங்கசாலையில் ரூ.40 இலட்சத்திற்கான உபகரணங்கள் இருந்தன. பலவற்றை மாற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டும் எவ்வித நிதி உதவியும் பெறப்படாமல் இருந்தது. [3]
2011 ஆம் ஆண்டில், அரங்கின் பகுதியில் ஒரு பெரிய புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டுப்பணி நடைபெற்றது. அப்போது அதன் ஒட்டுமொத்த சீரமைப்பு செலவு ரூ. 5.91 கோடி என மதிப்பிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டளவில் மேலும் 100 இருக்கைகள் சேர்க்கப்பட்டு, அப்போது உள்ள இருக்கைத் திறனைக் காட்டிலும் உயர்ந்து 600 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. மேலும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டபோது அரங்கின் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டது. [4] புதுப்பித்தலுக்குப் பிறகு, அதிநவீன அரங்கை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் 2012 பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். [5] அனைத்து நிலைகளிலும் தரம் மேம்படுத்தப்பட்ட நிலையில் அது அமைந்தது. இந்த பணியினை பீகார் மாநிலத்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை மேற்கொண்டது. இப்பணியை மேற்கொள்வதற்கு முன்பாக ரங்கசாலை மோசமான நிலையில் இருந்தது. பின்னரே இந்த சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் செயலர் இதனை மாநிலத்தின் மிகப்பெரிய பண்பாட்டு மையமாக மாற்றும் வகையில் இத்தகு பணிகள் நடைபெற்றதாகக் கூறினார். நடனம், இசை, பாடல் உள்ளிட்ட பலவகையான பண்பாட்டு நிகழ்வுகளை நடத்த ஆயத்தப்படும் வகையில் பணிகள் நடைபெற்றன. புதுப்பித்தலுக்குப் பின் நவீன ரகத்தைச் சேர்ந்த ஒளி அமைப்புகள், சிறப்பாக அமைந்த திரைகள், சுவர்கள் போன்றவை அமையும் வகையில் மேற்கொள்ளப்பட்டன என்ற அப்பணியோடு தொடர்பு கொண்ட பொறியாளர் கூறினார். பொது மற்றும் தனியார் பங்களிப்பு என்ற நிலையில் இதன் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். [6]
சிறப்பு
தொகுநகரில் அமைந்துள்ள முதன்மையான உள் அரங்கமாக இது கருதப்படுகிறது. மாநிலத்தில் உள்ள நாடகக் கலைஞர்கள் அறிந்த புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. தொடர்ந்து பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வரும் இந்த இடமானது முற்றிலும் குளிர் பதன வசதி செய்யப்பட்ட அரங்கமாக உள்ளது. அரங்கத்தின் உள் அமைப்பு நன்கு அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. கலை ரசிகர்கள் ஒன்று சேருகின்ற இடமாகவும் தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்ற இடமாகவும் அமைந்துள்ளது. உரிய கட்டணத்தை செலுத்தி இந்த இடத்தை பண்பாட்டு நிகழ்வுகளுக்காக அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வசதி இங்கு உள்ளது. [7]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Amit Bhelari (2012-04-23). "New road to ease Ashok Rajpath snarls". Telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ 2.0 2.1 Correspondent, Our (2012-01-13). "Return of arclight on new-look rangshala - Yahoo News India". In.news.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ 3.0 3.1 Glory of theatre at stake - Venues reel from govt neglect and lack of maintenance, The Telegraph, 28 March 2015
- ↑ "Premchand Rangshala set to get a fresh look - The Times of India". Timesofindia.indiatimes.com. 2011-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ Our Correspondent (2012-01-13). "Return of arclight on new-look rangshala". Telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ Patna’s Premchand Rangshala to be facelifted
- ↑ "Go4Patna". Archived from the original on 2020-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.