மத்திய சேமக் காவல் படை

மத்திய பின்னிருப்பு காவல் படை(ஆங்கிலம்:Central Reserve Police Force அல்லது சி.ஆர்.பி.எஃப். என்பது இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 1939 ஜூலை 27ல் பிரித்தானிய அரச பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்தக் காவல் படை இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1949 டிசம்பர் 28 சி.ஆர்.பி.எஃப். சட்டப்படி மத்திய சேமக் காவல் படையானது. சமீப காலங்களில், சட்டஒழுங்கு பாதுகாப்பிற்கு அடுத்ததாக நாட்டின் பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக பிரச்சனைக்குரிய பகுதிகளான சம்மு காசுமீர், பீகார் மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படை இதுவேயாகும்.[2]

தொகுப்பு மத்திய சேமக் காவல் படை
உருவாக்கம்ஜூலை 27 1939
தலைமையகம்டெல்லி
தலைமை இயக்குநர்
ராஜிவ் ராய் பட்னாகர்[1]
வலைத்தளம்http://www.crpf.gov.in/

வரலாறு தொகு

  • அரச பிரதிநிதிக் காவலர் (Crown Representative's Police) என்ற படையை 1939 ஜூலை 27ல் இரண்டு பட்டாலியன்களுடன் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டது. இதன் முக்கியப் பணியாதெனில் அரச குடும்ப சொத்துக்களை போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதாகும்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்தப்பிறகு, 1949ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு மத்திய சேமக் காவல் படை என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960களில் இதர மாநிலப்படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.
  • ஒரு கோடைக்காலத்தில், 1959 அக்டோபர் 21ல் இப்படையைச் சேர்ந்த எஸ்.பி. கரம் சிங் மற்றும் அவரது 20 படைவீரர்களும் சீன இராணுவத்தால் லடாக் பகுதியில் சுடப்பட்டனர். அதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு கம்பெனி கொண்ட 150 வீரர்கள், 1600 படைவீரர்கள் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தை குசராத், கங்ஜர் காட் என்ற இடத்தில் வீழ்த்தினர்[சான்று தேவை].
  • 1965ல் எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கும் வரை இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியை இப்படையே பாதுகாத்துவந்தது.
  • 2001ம் ஆண்டு புது தில்லியில் தீவிரவாதிகளின் இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் போது ஐந்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தினர்.
  • சமீப காலங்களில் இந்திய அமைச்சர்களுக்கு இப்படையின் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
  • 2008ல் நக்சலைட் தீவிரவாதி தாக்குதலை சமாளிக்க இப்படையிலிருந்து கோப்ரா என்ற தனி படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
  • 2009 செப்டம்பர் 2 அன்று, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தின் போது நல்லமணி காடுகள் முழுதும் இப்படையினரால் மீட்டுப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5000 வீரர்கள் கொண்ட இந்தத் திட்டப்பணியே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பெரிய தேடல் பணியாகும்.

பணிகள் தொகு

  • கூட்டத்தைக் கட்டுப்படுத்தல்
  • கலகத்தைக் கட்டுப்படுத்தல்
  • இராணுவ அல்லது கலக தாக்குதலுக்கு பதிலடி அளித்தல்
  • இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாளுதல்
  • பிரச்சனைக்குரிய பகுதிகளில் இணைந்து ஒட்டுமொத்த தேர்தல் பாதுகாப்பு வழங்குதல்
  • முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பளித்தல்
  • தீயவர்களிடமிருந்து தவர விலங்கினங்களை பாதுகாத்தல்
  • போர்காலத்தில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சண்டையிடல்
  • ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பங்குகொள்தல்
  • இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிபுரிதல்[3]

அமைப்பு தொகு

பிற காவல் அமைப்புகளைப் போலவே மத்திய பின்னிருப்பு காவல் படையிலும் இ.கா.பவை முதன்மையாகக் கொண்டு தரவரிசைப் பதவிகளுண்டு. இதன் தலைமை இயக்குநர் இ.கா.ப அதிகாரியாவார். 181 நிர்வாக பட்டாலியன்கள், 2 மகளிர் பட்டாலியன்கள், 10 விரைவு அதிரடிப் படை பட்டாலியன்கள், 6 கோப்ரா பட்டாலியன்கள், 2 டி.எம். பட்டலியன்கள், 5 சமிக்கை பட்டாலியன்கள் மற்றும் 1 சிறப்பு பணிப் பிரிவும் உட்பட மொத்தம் 207 பட்டாலியன்கள் உள்ளன.[3]

விரைவு அதிரடிப் படை தொகு

மத்திய பின்னிருப்பு காவல் படையின் சிறப்புப்பிரிவாக 10 பட்டாலியன்கள் கொண்ட விரைவு அதிரடிப் படை (RAF) 1992 அக்டோப்ரில் உருவாக்கப்பட்டது. வகுப்புக் கலவரஙகள் மற்றும் உள்நாட்டு தொடர் கலவரங்கள் ஆகியவற்றை சந்திக்க இப்படை பயன்படுத்தப்படுகிறது. மத்திய பின்னிருப்பு காவல் படையின் எண் 99 முதல் 108 வரை விரைவு அதிரடிப் படையைச் சேர்ந்தவைகளாகும்.

மகளிர் படை தொகு

மத்திய பின்னிருப்பு காவல் படையில் இரண்டு மகளிர் பட்டாலியன்கள் உள்ளன. 1986ல் முதல் மகளிர் பட்டாலியன் எண் 88 புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டுவுருவாக்கப்பட்டது; பிறகு குசராத், காந்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு இரண்டாவது பட்டாலியன் எண் 135 உருவாக்கப்பட்டது.

பசுமைப் படை தொகு

பசுமைப் படை என்பது மத்திய பின்னிருப்பு காவல் படையின் மற்றொரு சிறப்புப்பிரிவாகும். இப்படையின் தொடர் கண்காணிப்பில் சுற்றுசூழல் நாசவேலைகள் தடுக்கப்பட்டு, வன தாவரங்களும் விலங்குகளும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் மரங்கள் இப்படையினரால் நடப்படுகிறது.

இதனையும் காண்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு