பி. போக்கர்

பி. போக்கர் (B. Pocker - ‍பிறப்பு ‍1890 - 29 ஜூலை 1965), படேக்கண்டி, போக்கர், சாஹிப் பகதூர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஒரு இந்திய அரசியல்வாதியாகவும், பிரபல‌ வழக்கறிஞருமாகவும் அறியப்பட்டவர். சுதந்திர இந்தியாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் (1952) ஆவார்.[1] அவர் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், 1952 மற்றும் 1962 க்கு இடையில் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]

பிறப்பு

தொகு

போக்கர் அப்போதைய சென்னை மாகாணத்தின், தற்போதைய வடக்கு கேரளாவின் தலச்சேரியில் பீடிகாயில் குட்டிவத சாஹிப் மற்றும் படேக்கண்டி மரியம்மா ஆகியோருக்கு மகனாக‌ 1890 இல் பிறந்தார்.

கல்வி

தொகு

போக்கர் தலச்சேரி அரசு பிரென்னன் கல்லூரி மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் படித்தார். சென்னையில் 1915ல், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1917 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். மலபார் மாவட்டத்தின் மாப்பிளா முஸ்லீம்களின் ஆரம்பகால பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் இவரும் ஒருவர்.[3]

உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்த போக்கர், 1910 களின் பிற்பகுதியில் மலபார் மாவட்டத்தில் சிறப்பு முஸ்லீம் தொகுதிகளுக்காக வாதிட்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார்.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், இந்திய அரசுச் சட்டம், 1919 என நிறைவேற்றப்பட்டபோது ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்த‌தின் மூலம் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.

போக்கர் மலபார் மாவட்டத்தில் கிலாபத் இயக்கத்தின் தலைவராக இருந்தார், அவர் மலபார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, சென்னையில் மௌலானா ஷௌகத் அலியை ஆதரித்தார். மாப்பிளா எழுச்சியால் (1921-22) பாதிக்கப்பட்ட மாப்பிளாக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கினார், சென்னையில் "மாப்பிளா சீரமைப்புக் குழுவை" உருவாக்கினார். பாதிக்கப்பட்ட மாப்பிளாக்களுக்காக‌ 200,000. ரூபாய்க்கு மேல் வசூலித்து விநியோகம் செய்தார்.

போக்கர் தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்கம் மற்றும் கேரள முஸ்லிம் கல்விச் சங்கம் ஆகியவற்றை நிறுவியதில் பங்கு வகித்தார். 1930 முதல் 1936 வரை சென்னை சட்டமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் செயலாளராகப் பணியாற்றினார்.

முஸ்லிம் லீக்குடன்

தொகு

போக்கர் சென்னை மாகாணத்தின், முஸ்லீம் லீக்கின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர் (கே. எம். சீதி சாஹிப், கே. உப்பி சாஹிப் மற்றும் முகம்மது இசுமாயில் சாகிப் ஆகியோருடன் பயணித்தவர்). அவர் குரும்பிரநாடு-கோழிக்கோடு தொகுதியில் (முஸ்லிம் லீக்) சார்பாக‌ போட்டியிட்டார், பாஃபக்கி தங்கல் ஆதரித்த வேட்பாளரிடம் அவர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், கே.எம்.சீதி சாஹிப் தலைமையிலான தேர்தல் பிரச்சாரம் மலபாரில் முஸ்லிம் லீக்கை வலுப்படுத்தியது. இறுதியில், பாஃபக்கி தங்கலும் முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார், இது மாப்பிளாக்களிடையே முஸ்லீம் லீக்கின் அங்கீகாரத்தைப் பரப்பியது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் முஸ்லீம் லீக் கேரள மாநிலக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

அரசியலமைப்பு சபையில்

தொகு

போக்கர் 1946 இல் (மலபார் - நகர்ப்புற முஸ்லிம்) மதராஸ் சட்டமன்றத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][4]

இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து (1947), அகில இந்திய முசுலிம் லீக் கிட்டத்தட்ட கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சுதந்திர இந்தியாவில் ஆட்சியில் பங்களித்தது. பிரிவினைக்குப் பிறகும், போக்கர் மற்றும் அவரது தென்னிந்திய லீக் சகாக்கள் லீக்கிலேயே இருந்தனர் ஒரு மாதத்திற்குள், அரசியல் நிர்ணய சபை முஸ்லிம்களுக்கான தனித் தொகுதிகளை ஒழிக்க வாக்களித்தது. போக்கர் மற்றும் கே.டி.எம். அகமது இப்ராஹிம் ஆகியோர் முஸ்லிம் தனித் தொகுதிகளைத் தக்கவைக்க ஒரு திருத்தத்தை முன்வைத்தனர். இந்த பிரேரணை அரசியல் நிர்ணய சபையில் தோற்கடிக்கப்பட்டது. [1][5]

பாராளுமன்ற உறுப்பினராக

தொகு

போக்கர் 1952 இல் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து கீழ் சபைக்கு (லோக்சபா) முஸ்லீம் லீக் சார்பாக‌ தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவர் 1957 இல் மஞ்சேரி தொகுதியில் இருந்து சுயேச்சையாக‌ (முஸ்லிம் லீக்) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]

அவரது முயற்சியில் சிறப்புத் திருமணச் சட்டம், 1954 மூலம், இந்திய முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க உதவியது.

இறப்பு

தொகு

போக்கர் 29 ஜூலை 1965 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் இறப்பெய்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Wright, Theodore P. (1966). "The Muslim League in South India since Independence". American Political Science Review 60 (3): 579–599. doi:10.2307/1952972. https://www.cambridge.org/core/journals/american-political-science-review/article/muslim-league-in-south-india-since-independence-a-study-in-minority-group-political-strategies/2EBA3F25D373A0D9BA1DBAA6B9D25C30. 
  2. Thottappuzha, Varghese John (27 November 2019). "Bharanaghadanayile 'Malayalam'". Malayala Manorama. https://www.manoramaonline.com/news/editorial/2019/11/26/13-politicians-from-kerala-who-signed-up-in-Constitution-of-India.html. 
  3. Kakkad, Haroon (24 February 2022). "B. Pocker Sahib: Samudayathinte Vakeel". Shabab Weekly. Kozhikode.
  4. "Constituent Assembly Debates (Proceedings) Volume VII" (PDF). Lok Sabha. Government of India.
  5. "Constituent Assembly Proceedings". Lok Sabha. Government of India. Archived from the original on 2017-07-16.
  6. "History of Muslim League in Kerala and India". The Indian Express. 2019-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._போக்கர்&oldid=4015437" இலிருந்து மீள்விக்கப்பட்டது