புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்
புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே புங்குடுதீவு கிழக்கு, வல்லன் மாவுதிடல் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை.
வரலாறு
தொகுஇந்த பகுதி பெரியவரும் சைவத் தொண்டருமான மார்க்கண்டு சோதிநாதர் தனது சொந்த காணியில் இந்த பாடசாலையை 1925 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். தொடர்ந்து யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தினால் நடத்தப்பட்டது. 1970 இல் பெற்றோர் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு இடப் பற்றாகுறையப் போக்குமுகமாக புதிய கட்டிடம் ஒன்றை கோரி இருந்தனர். அதற்கிணங்க புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. இங்கு அறிவியல் கூடம் தொடங்கப்பட்டது.
1972 இல் ஆரம்பப் பாடசாலையாக இருந்து வந்த இது தரம் உயர்த்தப்பட்டு உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பின்னர் சண்முகநாதன் கனிட்ட மகா வித்தியாலயமாகப் பெயர் மாற்றம் பெற்றது. 1991 அக்டோபரில் புங்குடுதீவு மக்களின் இடப்பெயர்ச்சி காரணமாக இப்பாடசாலை தொடர்ந்து இயங்காமல் இருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் கல்வி தேவை கருதி தென்மராட்சியில் இந்த பாடசாலை தற்காலிகமாக இயங்கியது. அங்கே அதிபராகப் பணியாற்றிய செ.சண்முகவடிவு கிழாலிக் கடலில் அகால மரணமாக இப்பாடசாலை மேற்கொண்டு அங்கேயும் இயங்காமல் போனது. புங்குடுதீவின் ஐந்து பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கினாலும் இந்த பாடசாலை இன்னும் திறக்கப் படவில்லை.
1973இல் நடைபெற்ற யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சங்கீத நடன நாடகப் போட்டிகளில் சாம்ராட் அசோகன் என்னும் நாடகம் இரண்டாம் இடத்தை பெற்றது. அதே ஆண்டில் காவலூர் பாடசாலைகளின் மெய் வல்லுநர் போட்டிகளில் 13 வயது பிரிவில் பெண்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றது.
இப்பாடசாலையின் அதிபர்களாக லோரன்ஸ் சேதுபதி செல்லையா, வை. கந்தையா, த. கனகரத்தினம் பொன்னுத்துரை, க. சீவரத்தினம், மூ. நடராசா, நாகரத்தினம், இ. நடராசா, சண்முகவடிவு ஆகியோர் பணியாற்றினர்.