புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்

மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் மடத்துவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இது உள்ளூர் மக்களால் சின்ன நல்லூர் என அழைக்கப்படுகிறது.

அமைவிடம் தொகு

புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் உள்ள நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

இளந்தாரி நாச்சிமார் கோவில் என்ற தொன்மைப் பெயரைக் கொண்ட இக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார். மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில் மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார். மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் "நீர் புகுந்த வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது," என்று ஏளனம் செய்தார். இதனைக் கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலியைக் கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டுத் தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார். அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப்படுகின்றது.

மடத்துவெளி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது. அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த அரச மரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆன மடப்பள்ளி அடிப்பக்கம் வரை ஒரு மனித கை கால் உருவில் படர்ந்திருந்ததகவும் வரலாறு கூறுகிறது.

இவ்வாலயம் 1960களில் புனரமைக்கப்பட்டு அதன் உரிமையாளராக வேலுப்பிள்ளை சபாபதி என்பவர் இருந்து வந்தார். இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாசலம் பொறுப்பேற்ற பின்னர் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது. கருவறையின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிட்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்ரமணியர் கோவில் என்றும் மாற்றப்பட்டது. அருணாசலத்தைத் தொடர்ந்து வர்த்தகர் வி. இராமநாதன் பொறுப்பேற்றார். இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் 1970களின் ஆரம்பத்தில் புங்குடுதீவிலேயே முதன் முதலாக முறையான முற்றிலும் சித்திர வேலைப்பாட்டில் முடி வரை அமையப்பெற்ற சித்திரத் தேர் கட்டப்பட்டு வீதியுலா வந்தது. அத்தோடு அழகான தேர்முட்டியும் அமைக்கப்பட்டது. மடத்துவெளி வர்ததகர் அண்ணாமலை மாணிக்கம் தனது மனைவி நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்து கொடுத்துள்ளார். திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும்.

திருவிழாக்கள் தொகு

இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப்பாட்டுடன் முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம். திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்கே முற்றாக முடிவுறும். அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத திரைப்படப் பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் கேளிக்கை, வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும்.

கொடியேற்றம், எட்டாம் திருவிழா, பூங்காவனம், தீர்த்தம் உட்படச் சிறப்பான சித்திரத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பச்சை சாத்தும் நிகழ்ச்சியும் இடம்பெறும். மேலும் சூரன் போர் வாழை வெட்டு, கந்தசட்டி, திருவெம்பாவை போன்ற விழாக்களும் சிறப்பாக இடம்பெறும்.

அண்மை காலநிலை தொகு

1991 காலப் பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது. பின்னர் புதிய பரிபாலன சபையும் உருவாகியது. 2002 முதல் மீண்டும் தினசரி நைவேத்தியக் கிரியைகள் நடைபெற்று வருகின்றன.

வெளி இணைப்புகள் தொகு