புதியகற்காலக் கட்டிடக்கலை

புதிய கற்காலக் கட்டிடக்கலை என்பது, புதிய கற்காலச் சமுதாயத்தில் உருவான கட்டிடக்கலையாகும். புதியகற்காலப் பண்பாடு உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலப் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தென்மேற்கு ஆசியாவில், இது கி.மு 10,000 ஆண்டுகளுக்குச் சற்றுப் பின்னர் உருவானது. இங்கிருந்து இப் பண்பாடு கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் பரவியதாகக் கருதப்படுகின்றது. கி.மு 8000 அளவில், தொடக்கப் புதிய கற்காலப் பண்பாடு, தென்கிழக்கு அனதோலியா, சிரியா, ஈராக் ஆகிய பகுதிகளில் நிலவியது. உணவு உற்பத்திச் சமூகங்கள் தென்கிழக்கு ஐரோப்பாவில் கி. மு. 7000 அளவிலும், மத்திய ஐரோப்பாவில் கி.மு. 5500 அளவிலும் காணப்பட்டன. அமெரிக்கப் பகுதிகள், ஐரோப்பியத் தொடர்புகள் ஏற்படும்வரை புதிய கற்காலத் தொழில்நுட்ப மட்டத்திலேயே இருந்து வந்தன.

ஸ்காரா பிரே என்னுமிடத்தில் கண்டறியப்பட்ட புதிய கற்கால வீடுகள்
பிரிட்டனியில் உள்ள மேன் பிராஸ் (Mane Braz) எனப்படும் இறந்தோருக்கான பெருங்கல் நினைவுச் சின்னம்.

லேவண்ட் (Levant), அனதோலியா, சிரியா, வட மெசொப்பொத்தேமியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் கட்டிடம் அமைப்பதில் சிறந்து விளங்கினர். இவர்கள் சேற்றுமண் செங்கற்களைப் பயன்படுத்தி வீடுகளையும், ஊர்களையும் அமைத்தனர். தெற்கு அனதோலியாவில் இருந்த புதிய கற்காலக் குடியிருப்பான கட்டல் ஹூயுக் (Çatalhöyük) என்னுமிடத்தில், வீடுகள் சாந்து பூசப்பட்டு, மனித மற்றும் விலங்குகளின் ஓவியங்களால் அழகூட்டப்பட்டு இருந்தன. ஐரோப்பாவில், நீள வீடுகள் (long houses), மரக்கொம்புகள், மண் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்ததுடன், இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் கட்டப்பட்டன. அயர்லாந்தில் பெருமளவில் கட்டப்பட்ட இத்தகைய சின்னங்கள் இன்னும் பெருமளவில் காணப்படுகின்றன. பிரித்தானியத் தீவுகளிலும், நீள அகழ், ஹெஞ்கள் போன்ற பல இறந்தோர் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன.

மேற்கு ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பெருங்கல் அமைப்புக்கள், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையே. இவ்வகையான பெருங்கல் அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பரந்து காணப்பட்டாலும், இங்கிலாந்திலுள்ள ஸ்டோன் ஹெஞ் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இத் தகைய கட்டிடச்சின்னங்கள், பெரும்பாலும், இறந்தோர் நினைவுச் சின்னங்கள், கோயில்கள், சமய மற்றும் வானியல் தொடர்புள்ளவையாகக் கருதப்படும் வேறு பல கட்டிடங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. இன்று அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையானதாகக் கருதப்படும் கோயில், கோசோத் தீவிலுள்ள கன்டிஜா எனப்படும் கோயிலாகும்.[1][2][3]

புதிய கற்காலப் கால் வீடுகள் (pile dwellings), அல்லது பரண் வீடுகள் (stilt houses) சுவீடன் நாட்டிலும், வேறிடங்களிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேல் ஆஸ்திரியாவிலுள்ள மொண்ட்சீ (Mondsee) மற்றும் அட்டர்சீ (Attersee) ஏரிப் பகுதிகளிலும் இத்தகைய வீடுகளின் தடயங்கள் காணப்பட்டுள்ளன. மீளுருவாக்கம் செய்யப்பட்ட பரண்வீடுகள், சூரிச், உண்டெருஹுள்டிங்கென் (Unteruhldingen) ஆகிய இடங்களிலுள்ள திறந்த வெளி அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பின்வருவன உலகிலுள்ள முக்கியமான புதிய கற்காலக் குடியேற்றங்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Richard Rogers, Philip Gumuchdjian, Denna Jones, and other people (2014). Architecture The Whole Story (in ஆங்கிலம்). Thames & Hudson. p. 148 & 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-29148-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Gheorghiu, D. (2010). The technology of building in Chalcolithic southeastern Europe, pp. 95–100. In Gheorghiu, D. (ed.), Neolithic and Chalcolithic Architecture in Eurasia: Building Techniques and Spatial Organisation. Proceedings of the XV UISPP World Congress (Lisbon, 4–9 September 2006) / Actes du XV Congrès Mondial (Lisbonne, 4–9 Septembre 2006), Vol 48, Session C35, BAR International Series 2097, Archaeopress, Oxford.
  3. Early Neolithic Water Wells Reveal the World's Oldest Wood Architecture Tegel W, Elburg R, Hakelberg D, Stäuble H, Büntgen U (2012) Early Neolithic Water Wells Reveal the World's Oldest Wood Architecture. PLoS ONE 7(12): e51374. doi:10.1371/journal.pone.0051374