புனித உடற்போர்வை

புனித உடற்போர்வை, தூரின் நகர உடற்போர்வை (Shroud of Turin) (இத்தாலியம்: Sindone di Torino, Sacra Sindone) என்னும் பெயர்களால் அழைக்கப்படும் நார்மடி இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்கத் துணித் துண்டு ஆகும்.

புனித உடற்போர்வையில் தோன்றும் முகத்தின் எதிர்மறை (வலது) மற்றும் நேர்முறை (இடது) தோற்றம். எதிர்மறைத் தோற்றம் அழுத்திக்காட்டப்பட்டுள்ளது

இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருச்சாயல் அம்மனிதன் சிலுவையில் அறையப்பட்டு, வேதனையுற்ற தோற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது.[1]

இந்த அடக்கத் துணி இத்தாலியின் தூரின் நகரில் புனித திருமுழுக்கு யோவான் பெருங்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். இந்த உருச்சாயல் இயல்பான தோற்றத்தைவிட கருப்பு-வெள்ளை ஒளிப்படத்தின் எதிர்மறை வடிவத்தில் அதிகத் தெளிவாகத் தெரிகிறது.

உருச்சாயலின் எதிர்மறை வடிவம்

தொகு

இந்த உருச்சாயலின் எதிர்மறை வடிவத்தை (negative) முதன்முதலில் கவனித்துத் தெரிவித்தவர் பொழுதுபோக்கு ஒளிப்படம் எடுத்தவரான செக்கோந்தோ பீயா (Secondo Pia) என்பவர் ஆவார். இவர் 1898இல் இந்த உடற்போர்வை தூரின் பேராலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டபோது அதனை ஒளிப்படம் எடுக்க அனுமதி பெற்றிருந்தார்.

உடற்போர்வை பற்றிய சர்ச்சை

தொகு

அறிவியலார், இறையியலார், வரலாற்றாளர், ஆய்வாளர் போன்ற பலதுறை வல்லுநர்கள் நடுவே இந்த உடற்போர்வை இன்றும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.

இந்த உடற்போர்வை இயேசு வாழ்ந்து இறந்த கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறுவோர் ஒருபக்கம், இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறுவோர் மறுபக்கம் என்று சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.

அறிவியல் முறையில் இந்த உடற்போர்வையை ஆய்ந்தவர்கள் பல கொள்கை அணுகுமுறைகளை முன்வைக்கின்றனர். அவற்றுள் கீழ்வருவன அடங்கும்:

  • வேதியியல் ஆய்வு
  • உயிரியல் ஆய்வு
  • மருத்துவத் தடவியல் ஆய்வு
  • ஒளியியல் ஆய்வு

கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

தொகு

இந்த உடற்போர்வை உண்மையிலேயே இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தபோது அவருடைய உடலைப் பொதிந்த போர்வைத் துணிதானா என்பது குறித்து கத்தோலிக்க திருச்சபை இதுவரை அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எடுக்கவில்லை. அதாவது திருச்சபை இந்தப் போர்வை இயேசுவின் உடலை அடக்கம் செய்தபோது அந்த உடலை மூடிய துணியே என்று சாதிக்கவோ, அதை மறுக்கவோ இல்லை.

ஆயினும், 1958இல் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இந்த உடற்போர்வையில் தோன்றுகின்ற முகச்சாயலைக் காட்டுகின்ற உருப்படத்தை இயேசுவின் முகச்சாயலாகக் கொண்டு வணக்கம் செலுத்துவதற்கு இசைவு அளித்தார்.[2]

 
செக்கோந்தீ பீயா என்பவர் 1898இல் எடுத்த ஒளிப்படத்தில் தெரிகின்ற, புனித உடற்போர்வையில் காணப்படும் உருவத்தின் எதிர்மறை வடிவம்; இது நேர்முறை வடிவத்தைச் சுட்டுகிறது. இம்முகத்தை இயேசுவின் முகமாகக் கொண்டு வணக்கம் செலுத்த திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இசைவு அளித்தார். இந்த ஒளிப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரக் காட்சியகத்தில் உள்ளது (Musée de l'Élysée, Lausanne)

புனித உடற்போர்வையின் ஆட்கூறுகள்

தொகு

தூரின் நகர புனித உடற்போர்வை 4.4 × 1.1 மீட்டர் அளவுடையது (14.3 × 3.7 ft). இத்துணி மென்மையான சணல் நார் கொண்டு, மீன்முள் நெய்தல் பாணியில் நெய்யப்பட்டுள்ளது. இத்துணியின் சிறப்புக் கூறு அதில் தெரிகின்ற மனித உருவம் ஆகும். நிர்வாண நிலையில் உள்ள ஒரு மனிதனின் உடலைத் தலையிலிருந்து காலடிவரை முன்புறமும் பின்புறமும் போர்த்தி, அந்த உடலின் சாயல் இத்துணியில் பதிந்ததுபோல் தோற்றம் உள்ளது. அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் அம்மனிதன் தன் கைகளை ஒன்றன்மேன் ஒன்றாக வைத்திருக்கும் தோற்றம் தெரிகிறது. தலையின் முன்பார்வையும் பின்பார்வையும் துணியின் நடுப் புள்ளியில் எதிரெதிராக [3]

இளஞ்சிவப்பு நிறம்கொண்ட கறைகள் துணியில் தெரிவது அத்துணியால் போர்த்தப்பட்ட மனிதனின் உடல் சிலுவையில் அறையப்பட்டு, பல காயங்கள் ஏற்பட்டு அவர் இரத்தம் சிந்தியதைக் காட்டுகின்றன. இது விவிலியத்தின் நற்செய்தி நூல்களில் இயேசு துன்பங்கள் அனுபவித்து, கசையடி பட்டு, முண்முடி சூடப்பட்டு, சிலுவையைச் சுமந்து சென்று, அச்சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததையும் அவருடைய உடலின் வலது பக்கத்தில் ஈட்டி ஊடுருவியதையும் காட்டுகின்ற காட்சியை அப்படியே சித்தரிப்பதாகப் பலர் கருதுகின்றனர். எனவே, இந்த உடற்போர்வை இயேசுவின் உடலைக் கல்லறையில் மூடியிருந்த போர்வையே என்று அவர்கள் கருதுகின்றனர்.[4]

 
புனித உடற்போர்வையில் தெரிகின்ற உருவத்தின் நேர்முறைத் தோற்றம். அதில் தெரியும் முகத்தின் எதிர்மறைத் தோற்றம் வலது பக்கப் படத்தில் தரப்பட்டுள்ளது.

புனித உடற்போர்வையில் தெரிகின்ற உடற்கூறுகளும் கறைகளும்

தொகு

புனித உடற்போர்வையில் கீழ்வரும் கறைகளும் உடற்கூறுகளும் தெரிகின்றன:[5]

  • ஒரு கையின் மணிக்கட்டில் வட்டவடிவத்தில் பெரியதொரு காயம் தெரிகிறது. ஆணியால் துளைக்கப்பட்டதுபோல் உள்ளது. மறுகையின் மணிக்கட்டு காயம் தெரியும் கையின் கீழ் உள்ளதால் அதன் காயம் தெரியவில்லை.
  • தொண்டைப் பகுதி புடைத்திருக்கிறது. அது, சிலுவையில் தொங்கிய மனிதன் இறந்தபின் காயத்திலிருந்து வெளியான இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் நிணநீர் தேங்கியதால் ஏற்பட்டிருக்கலாம்.
  • நெற்றி மற்றும் உச்சந்தலைப் பகுதியில் முண்முடியால் ஏற்பட்டதுபோன்ற சிறு காயங்களின் அடையாளங்கள் உள்ளன.
  • கசை நார்களின் நுனியில் சிறு உலோகத்துண்டுகள் இருந்து, அக்கசையால் அடித்தபோது ஏற்பட்ட காயங்கள் உடலின் மேல் பகுதி மற்றும் கால் பகுதிகளில் காணப்படும் காயங்களின் அடையாளங்களாக உள்ளன.
  • கடுமையாகத் தாக்கப்பட்டதால் முமம் வீங்கியிருத்தல்.
  • மேற்கைகளிலும் முழங்கைகளிலும் இரத்தம் வழிந்தோடியதற்கான அடையாளங்கள் உள்ளன. இது சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.
  • காலடிகளில் ஆணிகொண்டு அறைந்ததால் ஏற்பட்ட காயங்கள்.

2013 பெரிய சனிக்கிழமை புனித உடற்போர்வை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுதல்

தொகு

சுற்றுச்சூழலால் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 40 ஆண்டுகளாக புனித உடற்போர்வை மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப்படவில்லை.

ஆனால், 2013ஆம் ஆண்டு, மார்ச்சு 30ஆம் நாள் புனித சனிக்கிழமையன்று புனித உடற்போர்வை மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[6][7]

அந்த ஒளிக்காட்சியின்போது வழங்கிய செய்தியில் திருத்தந்தை பிரான்சிசு இவ்வாறு கூறினார்:

குறிப்புகள்

தொகு
  1. Robert Bucklin "The Shroud of Turin: a Pathologist's Viewpoint", Legal Medicine Annual, 1982 ; Frederick Zugibe, The Crucifixion of Jesus: A Forensic Inquiry, 2nd edition, M. Evans Publ., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59077-070-6
  2. Joan Carroll Cruz, Saintly Men of Modern Times, Our Sunday Visitor, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931709-77-7, page 200.
  3. Alan D. Adler (2002). The orphaned manuscript: a gathering of publications on the Shroud of Turin. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-7402-003-1.
  4. John H. Heller (1983). Report on the Shroud of Turin. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-33967-7.
  5. Bernard Ruffin (1999). The Shroud of Turin. Our Sunday Visitor. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87973-617-8.
  6. Povoledo, Elisabetta (29 March 2013). "Turin Shroud Going on TV, With Video From Pope". New York Times. http://www.nytimes.com/2013/03/30/world/europe/shroud-of-turin-going-on-tv-with-a-word-from-the-pope.html?_r=0. பார்த்த நாள்: 29 March 2013. 
  7. புனித உடற்போர்வை - இத்தாலியத்தில் ஒளிக்காட்சி
  8. புனித உடற்போர்வையின் தோன்றும் முகம் பற்றி திருத்தந்தை பிரான்சிசு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shroud of Turin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

புனித உடற்போர்வையின் வரலாற்று உண்மையை ஏற்கும் தளங்கள்

தொகு

புனித உடற்போர்வை குறித்து ஐயுறும் தளங்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_உடற்போர்வை&oldid=3582844" இலிருந்து மீள்விக்கப்பட்டது