பூர்ச்சு
பூர்ச்சு (மொங்கோலியம்: Боорчи, பூர்ச்சி) என்பவர் செங்கிஸ் கானின் முதல் மற்றும் மிக விசுவாசமான நண்பர் மற்றும் கூட்டாளிகளுள் ஒருவர் ஆவார். இவர் செங்கிஸ் கான் இளம் வயதில் இருக்கும்போது சந்தித்தார். அந்நேரத்தில், செங்கிஸ் கான் (தெமுசின்) தன் தொலைந்துபோன குதிரைகளைத் தேடிக் கொண்டிருந்தார். பூர்ச்சு அக்குதிரைகளை மீட்பதற்கு உதவி புரிந்தார். தெமுசினுடன் தன் தந்தையைப் பார்க்கத் திரும்பினார். இவரது தந்தை, நகு பயன், இவர் இறந்திருப்பாரோ என்று பயந்திருந்த காரணத்தால் இவரை உலுக்கினார். பிறகு தெமுசின் கசரை அனுப்பி பூர்ச்சுவைத் தன் கூடாரத்திற்கு அழைத்து வந்தார்.
தெமுசினின் மனைவி போர்த்தை மெர்கிடுகள் கைதியாகப் பிடித்தபோது தெமுசின் தப்பிக்க வேண்டிய கட்டயத்திற்குத் தள்ளப்பட்டார், பூர்ச்சு பெலகுதை மற்றும் செல்மேயுடன் சென்று மெர்கிடுகளை வேவு பார்த்தார். தெமுசின் செங்கிஸ் கான் மற்றும் மங்கோலியர்களின் பெரிய கானாகப் பட்டம் பெற்ற பிறகு, பூர்ச்சு செல்மேயுடன் கானைப் பின்பற்றுவோர்களின் தலைவர் ஆக்கப்பட்டார்.
தெமுசின் தலன்னமுருகேசில் தாதர்களுடன் போர்புரிய இருந்தபோது, பெரும் மழை கொட்டியது, பூர்ச்சு ஒரு தோல் போர்வையை வைத்துப் பிடித்து தெமுசின் மேல் மழை விழுகாமல் பார்த்துக் கொண்டார். செங்கிஸ் கான் பின்னாளில் பூர்ச்சுவின் இந்த செயலுக்காகப் பரிசளித்தார், பூர்ச்சு அந்த இரவில் ஒரே ஒரு முறை மட்டுமே தன் பாதத்தை நகர்த்தியதாகக் கூறினார். காலகல்சித் மணலில் சமுக்காவிற்கு எதிராக நடந்த போரின்போது அம்பு எய்யப்பட்டு பூர்ச்சு தன் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். எதிரிகளின் குதிரையைத் திருடி மறுநாள் திரும்பி வந்து எதிரிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவினார். பூர்ச்சு ஒகோடியின் மிக நம்பகமான நண்பர்களுள் ஒருவரும் ஆவார்.