கல்லெண்ணெய் அல்லது பெட்ரோல் (Petrol, gasoline) என்பது பெட்ரோலியம் எனப்படும் பாறை எண்ணெயில் இருந்து பெறப்படும் ஒரு ஒளியூடுபுகவிடும் திரவமாகும். இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சேதனச் சேர்வைகளாலேயே ஆக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. இதிலிருந்து பகுதிபடக் காய்ச்சி வடித்தல் செயன்முறை மூலம் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இவற்றில் மாற்று எரிபொருளாக எதனோலும் சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும்.

கல்லெண்ணையைக் கொண்ட சாடியொன்று

பண்புகள் தொகு

அடர்த்தி தொகு

பெட்ரோலின் அடர்த்தி ஒரு லிட்டருக்கு 0.71-0.77 கிலோ வரை உள்ளது.மேலும் இது நறுமண தொகுதி ஹைட்ரோகார்பன்களில் உயர்ந்த அடர்த்தி உடையதாக உள்ளது.பெட்ரோல் தண்ணீரினை விட அடர்த்தி குறைந்தது எனவே இது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.எனவே பெட்ரோல் மூலம் உருவாகும் தீயை அணைக்க பொதுவாக தண்ணீர் பயன்படுத்தபடுவதில்லை.

ஆவிப்பறப்பு தொகு

டீசல், விமான எரிபொருள் அல்லது மண்ணெய் ஆகியவற்றிலும் பார்க்க பெட்ரோல் ஆவிப்பறப்புக் கூடியதாகும். இதற்குக் காரணம் பெற்றோலின் அமைப்புப் பொருட்கள் மட்டுமல்ல. அதனுடன் சேர்ந்துள்ள கூட்டுப் பொருட்களும் இதற்குக் காரணமாகும். இதன் ஆவிப்பறப்பைக் கட்டுப்படுத்த, ―0.5°C கொதிநிலையைக் கொண்ட பியூற்றேன் கலக்கப்படும். கல்லெண்ணையின் ஆவிப்பறப்பு, ரைட் ஆவியமுக்க (RVP) சோதனை மூலம் அளவிடப்படும். பயன்பாட்டுக்குத் தேவையான ஆவிப்பறப்பு வீதம் வெப்பநிலையில் தங்கியிருக்கும். சூடான காலநிலையில், உயர் மூலக்கூற்று நிறையுடைய, அதாவது தாழ்ந்த ஆவிப்பறப்பு வீதமுடைய பெட்ரோல் பயன்படுத்தப்படும். குளிரான காலநிலையில், ஆவிப்பறப்புக் குறைந்த பெற்றோலைப் பாவிப்பதால், வாகனங்களை இயக்குதல் கடினமாகலாம்.

சூடான காலநிலையில், மிதமிஞ்சிய ஆவிப்பறப்புடைய கல்லெண்ணை பயன்பாட்டால் "ஆவிப் பூட்டு" எனும் நிலை ஏற்படும். இதன்போது, எரிபொருள் கொண்டு செல்லும் பாதையில், திரவ எரிபொருள் ஆவிநிலைக்கு மாறுவதால் எரிபொருள் பம்பி செயலிழக்கும். இதனால் இயந்திரத்துக்கு எரிபொருள் கிடைக்காது. இப் பாதிப்பு பெரும்பாலும் இயக்குதண்டினால்(camshaft) இயங்கும் எரிபொருள் பம்பிகளிலேயே நடைபெறும். இங்கு தகனிக்கப்பட்ட எரிபொருள் வெளியேறுதல் தடைப்படும். எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில், எரிபொருள் ஒரு குறித்த பெறுமானத்துக்கு அமுக்கப்படவேண்டும். இயந்திரம் ஆரம்பிப்பதற்கு முன் இயக்கு தண்டின் கதி அண்ணளவாக பூச்சியம் என்பதால், மின் பம்பி பயன்படுத்தப்படும். இது எரிபொருள் தாங்கியிலேயே அமைந்திருப்பதால், எரிபொருள் உயர் அமுக்க பம்பியையும் குளிர்விக்கலாம். பயன்படுத்தப்படாத எரிபொருளை தாங்கிக்கு அனுப்புவதால், சீரான அமுக்கம் பேணப்படும். இதனால், எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில் ஆவிப் பூட்டு பிரச்சினையாக அமையாது.

ஐக்கிய அமெரிக்காவில், எரிக்கப்படாத ஐதரோகாபன்களின் வெளியீட்டைக் குறைக்க ஆவிப்பறப்புக் கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்காக ஆவியாதலுக்கு தடை செய்யும் மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியாவில், மாநில அரசாங்கங்களால், கோடைகால பெட்ரோல் ஆவிப்பறப்பு எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இவை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகின்றன. பெரும்பாலான நாடுகள் கோடைகால, குளிர்கால மற்றும் இடைநிலை எல்லைகளைக் கொண்டுள்ளன.

கல்லெண்ணை தட்டுப்பாட்டின் போது ஆவிப்பறப்பு விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன (இதனால், அதிக பெட்ரோல் பகுதிகள் வளிமண்டலத்துக்கு விடப்படுகின்றன). உதாரணமாக, ஆகஸ்ட் 31, 2005ல், கத்தரினா புயலின் காரணமாக, சில நகரப்பகுதிகளில் மாற்றியமைக்கப்படாத பெட்ரோல் விற்பனைக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது. இதன்மூலம், கோடைகால பெட்ரோல் வகைக்குப் பதிலாக குளிர்கால பெட்ரோல் உடனடியாக பாவனைக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் சுற்றாடல் பாதுகாப்பு முகவரகத்தின் நிர்வாகியான ஸ்டீபன் L. ஜோன்சனின் ஆணைப்படி இச் செயன்முறை செப்டெம்பர் 15, 2005 வரை நடைமுறையிலிருந்தது.[1]

நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன. இயந்திரம் நிறுத்தப்படும்போது, இது எரிபொருள் தாங்கியிலிருந்து ஆவியான எரிபொருளை நிலக்கரி நிரப்பப்பட்ட பெட்டகமொன்றில் சேகரிக்கும். பின்பு, இயந்திரம் இயங்கும்போது சேகரிக்கப்பட்ட ஆவியை பயன்பாட்டுக்காக இயந்திரத்துக்கு வழங்கும் (பெரும்பாலும் இயந்திரம் அதன் சாதாரண இயங்கு வெப்பநிலையை அடைந்தபின்). ஆவிப்பறப்புக் கட்டுப்பாட்டு முறைமை ஒரு மூடப்பட்ட வாயு மூடியையும் கொண்டிருக்கும். இதன்மூலம் எரிபொருள் மீள்நிரப்பு குழாயினூடாக ஆவி வெளியாவது தடுக்கப்படும்.[2]

பாதுகாப்பு தொகு

சுற்றுச்சூழல் பரிசீலனைகள் தொகு

1 அமெரிக்க கேலன் (3.8 லி) பெட்ரோலை எரிக்கும் போது பசுமையில்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடை 8788 கிராம் (19.374 பவுண்டு) (2.3 கிலோ/லிட்டர்) அளவில் வெளியேற்றுகிறது. சுற்றுசூழலில் அதன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு சிக்கல்களை தவிர்த்து ஏற்படும் மற்றொரு விளைவு எரிக்கப்படாத பெட்ரோல் காற்றில் ஆவியாகும் போது சூரிய ஒளியுடன் ஒளிவேதியியல் வினைபுரிந்து வளிமண்டலத்தில் பனிப்புகையை உற்பத்தி செய்கிறது. எத்தனாலை இதனுடன் சேர்க்கும்போது அதன் நிலைப்பு தன்மை பாதிக்கப்பட்டு இப்பிரச்சனையை தீவிரப்படுத்துகிறது.

எனினும் இந்த அபாயங்கள் வாகனங்களில் இருந்து அதிகமாக ஏற்படுவதில்லை. இது பெட்ரோல் விநியோகம் செய்யும் வாகனங்களின் விபத்துக்கள் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து ஏற்படும் கசிவுகள் முதலியவையே முக்கிய காரணியாக விளங்குகின்றது. எனவே தற்போது இந்த அபாயத்தை கண்டறியும் கருவிகள் நிலத்தடி சேமிப்பு கிடங்குகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நச்சுத்தன்மை தொகு

காரீயமில்லா பெட்ரோலுக்கான பொருள் பாதுகாப்பு தரவு தாளின் படி பெட்ரோலில் குறைந்தபட்சம் 15 நச்சு பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கின்றது. அவற்றில் பென்சீன் (5%), டொலீன் (35%), நாப்தலீன் (1%), ட்ரைமீதில்பென்சீன் (தொகுதி வரை 7%), மெத்தில் டிரை பியுடைல் ஈதர் (18% வரை) மற்றும் 10 நச்சுபொருட்கள் உள்ளது. மேலும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட எளிய நறுமண சேர்மங்கள் ஒரு கிலோகிராமுக்கு 2700 மிகி வரை உள்ளது. மேலும் பென்சீன் மற்றும் பல இடி எதிர்ப்பு பொருள் சேர்மங்கள் புற்றுநோயினை உண்டாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது.

உட்கொள்ளுதல் தொகு

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, மற்றும் பல பசிபிக் தீவுகளில் சில ஏழை சமூகங்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் பெட்ரோலை வாயு வடிவில் உள்ளித்து போதைப்பொருளாக பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் 5% மட்டுமே நறுமணப்பொருட்களை கொண்டிருக்கும் வகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுகிறது.

தீப்பற்றும் திறன் தொகு

பெட்ரோல் மிக அதிக தீப்பற்றும் திறனை கொண்டதாக உள்ளதால், அது விரிவடைந்த நிலையில் இருக்கும்போது எளிதில் ஆவியாகிறது இதனால் காற்றுடன் கலந்து எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பெட்ரோல் ஆவியை உற்பத்தி செய்கிறது. எரிதலை துவக்கும் ஒரு காரணி கிடைக்கும்போது, இது மிக அபாயகரமான எரிதல் அல்லது வெடிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Week 1: Nationwide fuel waiver issued to bolster fuel supplies". Response to 2005 Hurricanes (U.S. Environmental Protection Agency). 31 August 2005. http://www.epa.gov/katrina/activities/week1.html#aug31johnson. 
  2. "EVAP Evaporative Emission Control System". AA1Car. http://www.aa1car.com/library/evap_system.htm. பார்த்த நாள்: 2013-14-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரோல்&oldid=3579208" இருந்து மீள்விக்கப்பட்டது