பென்னெலோங் முனை

பென்னெலோங் முனை ஆஸ்திரேலியா, சிட்னியில் சிட்னி ஒப்பேரா மாளிகையின் அமைவிடமாகும்.(33°51′28″S 151°12′56″E / 33.85778°S 151.21556°E / -33.85778; 151.21556). இதனை டுபௌகூல் என்று பழங்குடியினர் அழைத்து வந்தனர்.[1]

பென்னெலோங் முனையில் சிட்னி ஒப்பேரா மாளிகை.

இம்முனை ஓர் சிறிய தீவுத்திடலாக பென்னெலோங் தீவு எனப் பாறைகளுடன், மேற்குப் பகுதியில் ஓர் சிறு கடற்கரையுடன் இருந்தது. சிட்னி கோவ் பகுதியின் கிழக்கு முனையில் தரைப் பகுதியிலிருந்து கடலலை எழும்போதெல்லாம் பிரிக்கப்பட்டிருந்தது. 1788ஆம் ஆண்டு சிலகாலம் இதனை கால்நடை முனை என்றும் அழைத்தனர்;கேப் டவுனிலிருந்து கொணரப்பட்ட ஆடுகளும் குதிரைகளும் இங்கு அடைக்கப்பட்டிருந்தன.

பலகாலமாகப் பழங்குடிப் பெண்கள் தூக்கியெறிந்த சிப்பி ஓடுகள் இங்கு சிதறிக் கிடந்தன. குற்றத்திற்காக இங்கு நாடுகடத்தப்பட்ட பெண்களால் இவை சேகரிக்கப்பட்டு அவற்றிலிருந்து சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டது. கிடைத்த சுண்ணாம்பு மூலம் இரண்டு தளமுள்ள அரசுக் கட்டிடம் மட்டுமே கட்ட முடிந்தாலும், அந்தக் காரணத்திற்காக அப்போது சுண்ணாம்பு காளவாய் முனை (Limeburners' Point) என்று அழைக்கப்பட்டது.[2]

1790களில் பிரித்தானியர்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அவர்களது பண்பாட்டு அறிவுரையாளராக இருந்த பழங்குடி பென்னெலோங் என்பவருக்கு நியூ சவுத் வேல்ஸ் ஆளுநரால் இங்கு செங்கல் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அவரது நினைவாகவே இன்று பென்னெலோங் முனை என்றழைக்கப்படுகிறது.

1818 முதல் 1821 ஆண்டுகளில் பென்னெலோங் தீவினைப் பிரித்த கடற்பகுதி அத்தீவிலிருந்து வெட்டப்பட்ட பாறைகளால் நிரப்பப் பட்டது. மாக்குயர் கோட்டை அமைக்க அப்பகுதி முழுவதும் சமநிலை ஆக்கப்பட்டது. கோட்டை கட்டும்போதே சிட்னி கோவிலிருந்து பார்ம் கோவ் வரை சாலை போடப்பட்டது. இது டார்பெயின் வே என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு கடலலை ஏற்றத்தால் பிரிக்கப்பட்ட தீவாக இருந்ததும் பின்னர் பாறை நிரப்பப்பட்டு இணைக்கப்பட்டதும் முழுவதும் மறக்கப்பட்டிருந்தது;1950களில் சிட்னி ஒப்பேரா மாளிகை கட்டும்போதுதான் அகழ்வுகளின்போது வரலாறு மீண்டும் அறியப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னெலோங்_முனை&oldid=3254756" இலிருந்து மீள்விக்கப்பட்டது