பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்

பெரியாழ்வார், ஆழ்வார்கள்களில் ஒருவர். கி.பி. 6 நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வைணவர். இவரது பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் [1] நூலில் முதல் 5 திருமொழிகளாக அமைந்துள்ளன. அவற்றில் 474 பாடல்கள் உள்ளன. இவற்றில் இவர் கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடிய பாடல்களும் உள்ளன. பாட்டியல் இலக்கண நூல்கள் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கண நெறியை வகுப்பதற்கு முன்னர் தோன்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் இவை. தொல்காப்பியம் கடவுளைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் பகுதியைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடுகிறது. [2]

பெரியாழ்வாரின் குழந்தைக் கண்ணன்

தொகு

பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய பாடல்களின் வரிசை (+1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள பாடல் பாடலைப் பாடுபவர் இன்ன பயன் பெறுவார் எனக் கூறுகிறது):

  • திருத்தாலாட்டு (பாடல் 9+1) [3]
  • அம்புலிப் பருவம் (பாடல் 9+1) [4]
  • செங்கீரைப் பருவம் (பாடல் 10+1) [5]
  • சப்பாணிப் பருவம் (பாடல் 10+1) [6]
  • தளர்நடைப் பருவம் (பாடல் 10+1) [7]
  • அச்சோப் பருவம் (பாடல் 10+1) [8]
  • புறம் புல்கல் (பாடல் 9+1) [9]
  • பூச்சி காட்டுதல் (பாடல் 9+1) [10]
  • முலை உண்ணல் (பாடல் 10+1) [11]
  • காது குத்தல் (பாடல் 12+1) [12]
  • நீராட்டம் (பாடல் 9+1) [13]
  • குழல் வாரக் காக்கையை அழைத்தல் (பாடல் 9+1) [14]
  • கண்ணன் ஆநிரை மேய்க்கக் கோல் கொண்டு வா எனல் (பாடல் 9+1) [15]
  • பூச் சூட்டல் (பாடல் 9+1) [16]
  • காப்பிடல் (பாடல் 9+1) [17]
  • பால கிரீடை (பாடல் 10+1) [18]

இது மேலும் தொடர்கிறது. கண்ணனைப்பற்றி அயலகத்தார் யசோதையிடம் முறையிடல், கண்ணனுக்கு முலைப்பால் தராதே எனல், முதலானவை இதன் தொடர்ச்சி.

அடிக்குறிப்பு

தொகு
  1. மூலம் முழுமையும்
  2. தொல்காப்பியம், புறத்திணையியல், 23 & 24
  3. மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
    ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
    பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
    மாணிக்குறளனே. தாலேலோ
    வையமளந்தானே. தாலேலோ (1)

  4. தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
    பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
    என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
    நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (1)

  5. உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
    ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
    பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
    பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
    செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
    செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
    ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (1)

  6. மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
    ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
    பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
    காணிகொண்டகைகளால்சப்பாணி
    கருங்குழல்குட்டனே. சப்பாணி. (1)

  7. தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
    படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
    உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
    தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ (1)

  8. பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
    தன்னியலோசை சலஞ்சலனென்றிட
    மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
    என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
    எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (1)

  9. வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
    மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
    சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
    குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
    கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (1)

  10. மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
    பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
    பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
    அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
    அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (1)

  11. அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே
    இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
    வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
    திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (1)

  12. போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
    பொருதிறல்கஞ்சன்கடியன்
    காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத்
    தனியேபோய்எங்கும்திரிதி
    பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
    கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த
    ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
    அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (1)

  13. வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
    திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
    எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
    நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (1)

  14. பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை
    முன்னையமரர் முதல்தனிவித்தினை
    என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
    மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
    மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (1)

  15. வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
    தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு
    பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு
    காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
    கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (1)

  16. ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
    கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
    பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
    தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (1)

  17. இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
    மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
    சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
    அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (1)

  18. வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
    வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
    கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
    காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
    புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
    புரைபுரையால்இவைசெய்யவல்ல
    அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
    அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (1)