பேச்சு:ஒட்சிசன்

(பேச்சு:ஆக்சிசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


செல்வா, நிலவுலகு என்றால் என்ன?--Kanags 10:58, 6 மார்ச் 2007 (UTC)

கட்டுரையை படித்ததில் பூமியை தான் செல்வா அப்படி சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். பூமி, தமிழ்நாட்டு அறிவியல் பாடப் புத்தகங்களிலும் பெரிதும் புழங்கும் சொல். மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன். அது தமிழ்ச்சொல்லா என்றும் தெளிவில்லாத போதும். நிலம் + உலகு = நிலவுலகு என்றால் அது கருத்துப் பிழையாகலாம். ஏனெனில், எல்லா கோள்களிலும் நிலம் உண்டு தானே. தவிர, ஆக்சிஜன் என்றே எழுதலாம் தானே? ஸி தேவையா?--Ravidreams 11:08, 6 மார்ச் 2007 (UTC)

நிலவுலகு, மண்ணுலகு, நிலவுருண்டை, பூவுலகு முதலிய சொற்கள் விளங்கவில்லை என்றால் நான் என்ன சொல்ல இயலும்! பூமி, புவி, புவனம் என்று சொன்னால்தான் புரியும் என்றால் அதில் ஏதேனும் ஒன்றை இட்டுக்கொள்ளலாம். நிலம், நில நடுக்கம் வேண்டாம் என்றும் பூமி, பூகம்பம் தான் வேண்டும் என்றும் விரும்பும் தமிழர்கள் இருக்கிறார்கள், அதில் நீங்களும் ஒருவரோ அறியேன். நான் நிலவுலகு என்று எழுதியதற்குக் கரணியம், நிலம், நிலம்சார்ந்த வளிமண்டலம், நிலத்தில் வாழும் உயிரிங்கள் (நுண்ணுயிர், செடிகொடிகள் முதல் மாந்தன் வரை) அனைத்தையும் சூழச் சுட்டுமாறு நிலவுலகம் என்றேன்.--செல்வா 13:07, 6 மார்ச் 2007 (UTC)

எனக்கு உண்மையில் விளங்கவில்லை. பூமி என்றால் அனைவர்க்கும் விளங்கும். அதனை ஏன் நிலவுலகு என்று எழுத வேண்டும்? --கோபி 13:16, 6 மார்ச் 2007 (UTC)

கோபி, நான் ஏன் நிலவுலகு என்று எழுதினேன் என்று விளக்கியுள்ளேன். பூமி என்பது சரியென்று உங்களுக்குப் பட்டால், பூமி என்றே மாற்றலாம். poomi என்று சொன்னால் பொருத்துக்கொள்ளலாம் ஆனால் அதனை boomi என்று சொல்வதால் தமிழின் ஒலிப்பாங்கு குன்றுகின்றது. இதனை நான் பொருட்படுத்துபவன். poomi என்று சொன்னாலும் இளக்காரமாக நகைப்பவர்களும் உள்ளனர். நிலவுலகம், நிலவுலகு என்றால் என்வென்று விளங்கவில்லை என்று கூறியுளீர்கள். அது எனக்கு பெரும் வியப்பாக உள்ளது!--செல்வா 13:42, 6 மார்ச் 2007 (UTC)

செல்வா, நிலவுலகு என்பதை விளங்கிக் கொள்வதில் சிக்கலில்லை. ஆனால் எளிமையான பூமி இருக்கையில் நிலவுலகு என்பதனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே விளங்கவில்லை. பூமி எனக்குத் தெரிந்த வரையில் poomi தான். லோகம்-உலகம்-உலகு என்பது தமிழ் அடியிலிருந்து வந்த சொல்போலில்லை. ஆதலாற்றான் நீங்கள் நிலவுலகு என்று பயன்படுத்த வலியுறுத்தியது விளங்கவில்லை என்றேன். கோபி 13:47, 6 மார்ச் 2007 (UTC)

தேவநேயப் பாவாணர் உல், சுல் என்று தொடங்கி 300க்கும் அதிகமான சொற்களை ஐயம் திரிபற காட்டியுள்ளார். உல், உலா, உலவு, உலகம் எல்லாம் 100% தமிழ். வடமொழி லோகம், திராவிடத்தில் இருந்து பெற்றது. உலகு என்றாலே சுழலுவது, உலாவருவது - பொருள் செறிந்த சொல். --செல்வா 14:00, 6 மார்ச் 2007 (UTC)
பூமி என்பது எளிய சொல் என்கிறீர்கள். ஒரு 3-4 தொடர்புடைய தமிழ்ச்சொற்களைக் கூறுங்கள். பூமாதேவி, பூமத்தியரேகை (100% வடமொழி). பூமி+மத்யம்+ரேகை அனைத்தும் வடமொழி. மாறாக நிலநடுக்கோடு என்னும்பொழுது பல தமிழ்ச் சொற்கள் வலுப்படுவது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளில் உள்ளவர்களும் விளங்கிக்கொள்ள முடியும். வடமொழி தடித்த சொல்லாட்சிகள், மேல் மட்ட 5-10% மக்களுக்கே "எளிதானது" (= பழகியது) ஆனால் அவை புதுச்சொற்கள் ஆக்கத்திற்குத் தடையாகவும், நுட்பக் கருத்தாழம் பெற தடையாகவும் இருப்பன. மீண்டும் கேட்கிறேன், பூமி என்பதோடு தொடர்புடைய 3-4 சொற்கள் கூறுங்கள் --செல்வா 14:09, 6 மார்ச் 2007 (UTC)

செல்வா, தமிழ் வேர்ச் சொற்களை ஆள்வதே என் விருப்பமும். ஆனால், எல்லா கோள்களிலும் நிலம் உண்டு தானே? earth என்பதை மட்டும் நிலம் என்று கூறுவது கருத்துப்பிழை ஆகாதா? தவிர, தமிழில் நிலம் என்பதை land உடன் பெரிதும் பொருத்திப் பார்க்கிறோம். கடல், நீர் நிலைகள் உள்ள இதை நிலம் என்று கூறுவது சரியாகுமா? என்றாலும், நில மகள் என்று பூமித் தாயை குறிப்பிடும் இலக்கிய வழக்கும் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். earth quake என்பதை நில நடுக்கம் என்று ஒப்புக் கொள்ளும் நாம் earth என்பதற்கு நிலம் என்பதை அனைத்து இடங்களிலும் வலியுற்றுத்தாமல் விட்டு விட்டோம். கோள்கள் வரிசையில் வெள்ளி, சனி, வியாழன் என்று சொல்வது போல் earthக்கும் ஒற்றைச் சொல்லாக ஒன்று இருந்தால் நல்லது தானே? பூ என்றே சொல்ல இயலுமா? உலகம் (world) பல பொருள்களில் பல இடங்களில் வருகிறது. அதை நிலம் என்பதுடன் இணைக்கவேண்டுமா? இவற்றை ஐயங்களாகவே, தெளிவு பெறும் நோக்குடனே முன்வைக்கிறேன். நன்றி--Ravidreams 14:22, 6 மார்ச் 2007 (UTC)

செல்வா, உங்கள் விளக்கத்துக்கு நன்றி. பணிவன்புடன் ஒரு கருத்தையும் சொல்ல விரும்புகிறேன். நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஓரளவு பழக்கமான நல்ல தமிழ்ச் சொற்களெனின் அவற்றை மிகவும் பழக்கமான பிறமொழி அடியிலிருந்து வந்த சொற்களுக்குப் பயன்படுத்துவதும் எனக்கு உடன்பாடே. பூமி என்பது என் நினைவு தெரிந்த நாளிலிருந்து பயன்படுத்தும் சொல். அவ்வளவுதான். எனக்கு பூமி, உலகம் என்ற இரண்டும் வடமொழி அடியிலிருந்து வந்த சொற்கள் போலிருந்தன. அவற்றில் நன்கு பயன்படுவதாக எனக்குத் தெரிந்த பூமி என்பதை நாளாந்த பயன்பாட்டில் எபொழுதும் கேள்விப்பட்டிருக்காத (பொருள் விளங்குகிறது என்பது வேறு விடயம்) நிலவுலகு என்று ஏன் சொல்ல வேண்டும் என்பதே என் கேள்வியாக இருந்தது. கனகுவுக்கு அதன் பொருள் உடனடியாக விளங்கவில்லை என்பதையும் கவனிக்கவும். தேவநேயப் பாவாணரை எல்லாம் படித்து விட்டுத் தான் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க வர வேண்டுமென்றால் எனக்கு இன்னும் பத்தாண்டுகளாவது ஆகும். தொடர்புடைய சொற்களை நீங்கள் கேட்பது Vij இனது உரையாடல்களையே நினைவூட்டுகின்றது. அவருக்கு நேரெதிரான திசையில் அவரைப் போன்றதாகவே நீங்கள் கேட்பதும் இருக்கிறது. நன்றி. கோபி 14:27, 6 மார்ச் 2007 (UTC)

ரவி, உங்களுக்குப் பின்னர் மறுமொழி தருகின்றேன். தவறினால், நினைப்பூட்டவும். கோபி, உங்கள் கேளிவிகளுக்கு என் விடைகளை. மறுமொழிகளை முன்னரே கொடுத்துள்ளேன். பூமி, புவி என்பதை இடலாம் என்றும் என் முதல் மறுமொழியிலேயே கூறியுள்ளேன். ஏன் நிலவுலகு என்று எழுதினேன் என்றும் கூறியுள்ளேன். நானும் பூமி, புவி என்பதனைப் பயன்படுத்துபவன் தான். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல. சில இடங்களில் தரணி என்பேன், சில இடங்களில் மண்ணுலகு என்பேன், சில இடங்களில் நிலவுலகு என்பேன், சில இடங்களில் நிலம் என்பேன். தேவநேயப்பாவானரைப் படித்துவிட்டுத்தான் விக்கிக்குப் பணியாற்ற வரவேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை, உங்கள் மறுமொழியின் போக்கு எனக்கு விளங்கவில்லை. நீங்கள் லோகம் என்பதில் இருந்து உலகம், உலகு வந்தது போல் உள்ளது என்று கூறியதால் ("லோகம்-உலகம்-உலகு என்பது தமிழ் அடியிலிருந்து வந்த சொல்போலில்லை.") தேவநேயப்பாவாணரின் கணிப்புகளைச் சுட்டினேன். நீங்கள் என் மறுமொழியைத் தவறான கோணத்தில் பார்க்கின்றீர்கள் என எண்ணுகிறேன். --செல்வா 15:05, 6 மார்ச் 2007 (UTC) மேலும், நான் கொடுத்துள்ள மறுமொழிகளில் உள்ள கருத்துக்களை அறிவடிப்படையாக ஒரு சிறிது விருப்பு-வெறுப்பின்றி ஊன்றி எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 15:13, 6 மார்ச் 2007 (UTC)

//வடமொழி தடித்த சொல்லாட்சிகள், மேல் மட்ட// //மீண்டும் கேட்கிறேன், பூமி என்பதோடு தொடர்புடைய 3-4 சொற்கள் கூறுங்கள்// போன்றவை மனதைப் புண்படுத்துவதாக உணர்ந்ததால்தான் அவ்வாறு பதிலளித்தேன். அவற்றை நான் தனிப்பட எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லைதான். மற்றும்படி உங்கள் வழிகாட்டுதல் மீது மதிப்பையே வைத்துள்ளேன். பூமி, உலகம் இரண்டும் வடசொற்களென நான் எண்ணியதால் பழக்கமான ஒன்றைவிட்டுவிட்டுப் (பூமி) பழக்கமில்லாத வடமொழியுடன் கலந்த இன்னொரு சொல்லை (நிலவுலகு) ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே எனக்கு விளங்காதிருந்தது. உலகம் தமிழ்ச் சொற்றான் எனவுணர்த்தியமைக்கு நன்றி. கோபி 15:18, 6 மார்ச் 2007 (UTC)

கோபிக்கு மறுமொழி தொகு

கோபி, நான் வடமொழி மிகுந்த சொல்லாட்சி என்பதனையே வடமொழி தடித்த சொல்லாட்சி என்று கூறினேன். மிகுந்த சொல்லாட்சி என்று கூறியிருப்பதே சிறந்தது, எனினும் நான் தடித்த என்று பயன்படுத்தியதற்கான கரணியம் வடமொழியை வலிந்து புகுத்தியும் தமிழின் இனிமையான வழக்குகளை வலிந்து அழித்தும் வருவோர்களின் வழிமுறையைச் சாடும் குறிப்பு இருக்குமாறே அதனை ஆண்டேன். நான் உங்களைத் தனிப்பட்ட முறையிலோ அல்லது பூமி என்று ஒருவர் ஆள்வதையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை. என் கூற்று பொதுக்கூற்று (பொதுவான கருத்து). மற்றபடி நான் கூறிய மேல் மட்ட 5-10% என்பதின் உண்மை உணர்வது மிக முக்கியம். பரவலாக பொதுமக்கள் படித்து அறிந்து எண்ணுவதற்கு எளிய தமிழ்ச்சொற்களே சிறந்தது. நான் மீண்டும் கேட்கிறேன் என்று வலியுறுத்திக் கேட்பதற்கான கரணியம், தொடர்பற்று நிற்கும் சொல் என்று நீங்கள் உணர்வதற்கே. கருத்தாடும் பொழுது கேள்விகள் கேட்பது மிகவும் தேவையானது. அவைகள் மனதைப் புண்படுத்துவதற்காகவோ, அல்லது ஒருவரை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகவோ கேட்க்கபடுவதல்ல. கருத்து வளர்ச்சிக்குத் தேர்ந்த கேள்விகளே மிகச்சிறந்த வழி. நீங்கள் மிகக்குறிப்பாக “பூமி என்றால் அனைவர்க்கும் விளங்கும். அதனை ஏன் நிலவுலகு என்று எழுத வேண்டும்? “ என்று நீங்கள் என்னிடம் சற்று காட்டமாகவே/கோபமாகவே கேட்டதுபோல் நான் உணர்ந்த பொழுதும், என் மறுமொழியை நீங்கள் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன். கருத்தாடல்களில், கவனம் கருத்தில் இருத்தல் வேண்டும். சில நேரங்களில், உணர்வு மூட்டங்களும், பூச்சுகளும் , கலப்புகளும் இருந்தாலும், கருத்துக்கு முதலிடம் தருவதே, உரையாடல், கருத்தாடல்களில் பயன் மிகுக்கும். நான் முதலில் இட்ட மறுமொழியில் இருந்து படிப்படியாய் எப்படி பிற எண்ணங்களும், கருத்துக்களும் விரவின என்று பார்த்தால் உரையாடலின் போக்கு விளங்கும் என நினைக்கிறேன். மேலும் ஒன்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்: நான் யாருக்கும் வழிகாட்டவில்லை. நான் இங்கு என் கருத்துக்களை, நானறிந்தவாறு பகிர்ந்துகொள்ளுகிறேன். நான் கூறுவதில் ஏதும் தவறு இருந்தால் தயங்காமல் எடுத்துச்சொல்லுங்கள், நான் நன்றியுடன் திருத்திக்கொள்ளுவேன்.--செல்வா 19:25, 6 மார்ச் 2007 (UTC)

ரவிக்கு மறுமொழி தொகு

நில், நிற்பது, நிலைத்து இருப்பது நிலம். பிறகோள்களின் நிலங்களும் அப்படியே. வெள்ளியின் நிலம், வெள்ளிநிலம், செவ்வாயின் நிலம், செவ்வாய்நிலம் என்றவாறு. அடைமொழி இல்லாமல் நிலம் என்றால், மண்ணுலகம் தான். நீரின்றி அமையாது உலகம், ஆனால் நிலம் இருப்பதால்தான் சிறப்புப்பொருளில் நிலவுருண்டை என்று கூறப்படுகின்றது. மாமரமாக நிறைந்திருக்கும் ஒரு தோப்பைப் பொதுமை பற்றி மாந்தோப்பு என்போம், பல மரங்கள் உள்ள ஒரு தோப்பில் சிறப்பாக ஒரு மாமரம் இருந்தால் அதனையும் மாந்தோப்பு என்னும் வழக்கு சிறப்பு நோக்கி உண்டு (மாமரம் இருக்கும் தோப்பு). அதுபோலவே உலர்ந்த நிலம் இருப்பதால் சிறப்பு கருதி நிலம் என்றாகியது. அன்றியும் நீரும் எங்கும் ஓடிவிடவில்லை நிலவுருண்டையோடு அணைந்தே உள்ளது – நிலவுருண்டையைப் பார்க்க அதுவும் நிற்பதே, நிலைப்பதே. பூமிப் பந்து என்பது போல நிலவுருண்டை, நிலவுலகு என்று கூறுவதும் வழக்குதான், ஆனால் ஏனோ நீங்கள் கேள்விப்படாதது போல் தெரிகின்றது. நான் உலகு என்று சேர்த்தெழுதியதற்குக் கரணியம் முன்பே காட்டியுள்ளேன். ஆங்கிலத்திலும் earth movers என்று கூறும் பொழுது மண்ணைத் தோண்டி அள்ளும் ஒரு வகை உந்தைத்தான் குறிப்பிடுகின்றனர். உலக உருண்டையையே நகர்த்துவதல்ல. Earth என்பது எப்படி மண்ணைப் பல இடங்களில் குறிக்குமோ அதே போல நிலம், மண் என்பதும் நிலவுருண்டையையும் நிலம் தரை என்பனவற்றையும் குறிக்கும். ஆங்கிலத்திலும் Land-based என்பது earth-based என்னும் பொருளில் ஆளப்படும். எனவே நிலவுலகம், மண்ணுலகம், பூவுலகு (பூ என்பதும் பூக்கள் இருப்பது பற்றி சிறப்பு பற்றி எழுந்த பெயர்). முதல் திருக்குறளே முதற்றே உலகு என்று இருக்கும் பொழுது உலகு என்றால் விலங்கவில்லை என்று சொன்னால் எனக்குப் பெருவியப்பாக உள்ளது. --செல்வா 20:01, 6 மார்ச் 2007 (UTC)

செல்வா, முதலில் இக்கட்டுரையின் முதல் வரியில் நிலவுலகு என்பாதைப் படிக்கும் போது அதனை நிலவு+உலகு என்றே பிரித்தேன். நிலா (அல்லது சந்திரன்)-ஐயே குறிப்பதாக யோசித்தேன். நிலவு என்பது பொதுவாக சந்திரனையே குறிக்கும். ஆனால் நீங்கள் அதனை நிலம்+உலகு எனப் பிரித்திருக்கிறீர்கள். இந்தக் குழப்பம் இதனை வாசிக்கும் சாதாரணமானவர்களுக்கு (என்னைப்போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்) எழ வாய்ப்புண்டு. அதனைத் தெளிவு படுத்தவே அக்கேள்வியைக் கேட்டேன். மற்றும் நிலம், உலகம் இரண்டுமே ஒரு கருத்தையே சொல்லுகின்றன.--Kanags 20:15, 6 மார்ச் 2007 (UTC)

செல்வா, மறுமொழிக்கு நன்றி. உலகு என்பதின் பொருளையும் அது தமிழ் தான் என்பதையும் நன்கு அறிந்தே இருக்கிறேன். இந்த உரையாடலின் தொக்கத்தில் கனக்சுக்கும் நானே முதலில் சரியான பொருளை விளக்கி உள்ளேன். சனி, வெள்ளி போன்ற கிழமை பெயர்களுக்கு தனித்தமிழ்ப் பெயர்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். (காரி என்று ஏதோ எங்கோ பார்த்த நினைவு..) சனிவார் என்று சனிக்கிழமையை இந்தியிலும் சொல்கிறார்கள். சனி போன்ற கோள் பெயர்கள் வடக்கிலிருந்து தெற்கு வந்ததா தெற்கிலிருந்து வடக்கு சென்றதா எனத் தெளிவில்லை. எனவே, சனிக்கிழமை, சனிக்கோள் போன்ற பெயர்களுக்கு முன்னர் சனி உள்ளிட்ட பூமி வரையிலான கோள்கள் அனைத்துக்கும் தனித்தமிழ் பெயர் ஏதும் இருந்தததா என அறிய ஆவல். வெள்ளி, சனி, புதன் என்றும் ஒற்றைச் சொல் இடுகுறிப் பெயர்கள் ஏதும் பூமிக்கு முன்னர் தமிழில் இருந்ததா என்றும் அறிய ஆவல். அப்படி சுருக்கமாகவும் ஒற்றைச் சொல்லாகவும் இருப்பது எடுத்தாள வசதியாய் இருக்கும். ஏனோ +உருண்டை, +உலகு என்று மற்ற கோள்களைப் போல் அன்றி பூமிக்கு மட்டும் பின்னொட்டு இட்டு சொல்வது நெருடலாய் இருக்கிறது. --Ravidreams 20:16, 6 மார்ச் 2007 (UTC)

நிலம் என்றே அழகாகச் சொல்லலாமே! நிலவுருண்டை, நிலவுலகு என்று சொல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆக்ஸிஜன் நிலத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமம் என்றால் தெளிவாகவே இருக்கும். --செல்வா 20:23, 6 மார்ச் 2007 (UTC)
செல்வா, //ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல. சில இடங்களில் தரணி என்பேன், சில இடங்களில் மண்ணுலகு என்பேன், சில இடங்களில் நிலவுலகு என்பேன், சில இடங்களில் நிலம் என்பேன்.// இது வேண்டுமானால் தமிழ் இலக்கிய வர்ணனைக் கட்டுரைகளுக்குப் பொருந்தும். ஆனால் ஒரு அறிவியல் கட்டுரைக்கு (அதுவும் விக்கிபீடியா கட்டுரைக்கு) இப்படியான வர்ணனைகள் பொருந்தாது என்பது எனது கருத்து. மீண்டும், நிலவுலகு = நிலவு + உலகு.--Kanags 08:51, 7 மார்ச் 2007 (UTC)
கனகு, மண்ணுலகு, தரணி, நிலம், நில உலகு என்பதெல்லாம் இலக்கிய வருணனை அல்ல. தெளிவாகப் பொருள் உணர்த்தும் எளிய ஈடான சொற்கள். சில இடங்களில் சில கரணியங்களுக்காக ஒரு சொல்லோ மற்ற சொல்லோ சற்று கூடிய அளவு பொருந்துவதாக இருக்கும். இது ஆங்கிலத்திலும் உள்ள வழக்கம் தான். ஆங்கிலத்தையே எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்று நான் சொலவில்லை. தமிழில் சில நேரங்களில் புணர்ச்சி விதிகள் குழப்பம் ஏற்படுத்தும். பல சிலேடைகள் இதனால் அமைப்பதுண்டு. நிலவுலகு என்பது நாம் வாழும் நில உலகத்தைக் குறிக்க பல இடங்களில் ஆளப்பட்டுள்ளன. நிலவு உலகைக் குறிக்க கேட்டதில்லை. (நிலவு ஒளி = நிலவொளி கேட்டிருக்கின்றேன்). ஆனால் வருங்காலத்தில் அப்படியும் குறிக்க வழி உள்ளதால். நில உலகில் என கட்டுரையில் பிரித்தே இப்பொழுது எழுதியுள்ளேன். --செல்வா 13:55, 7 மார்ச் 2007 (UTC)

கனக்சின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். அறிவியல் கட்டுரைகளில் ஒரே சொல் அனைத்து இடங்களிலும் வருதல் வேண்டும். ஆக்சிஜன் நிலத்தில் அதிகமாக கிடைக்கிறது என்றால் மண்ணை சொல்கிறீர்களா இல்லை earth (planet)ஐ குறிப்பிடுகிறீர்களா என்று குழப்பம் வரும். நிலத்தில் பெரும்பகுதி நீராகவும் பிற பகுதி நிலமாகவும் (மண்ணாகவும்) இருக்கிறது போன்ற சொற்றொடர்கள் குழப்பம் விளைவிக்கும். நிலம், மண் போன்று பொதுவாக குழப்பிக் கொள்ளக் கூடிய சொற்களும் இல்லாமல், பின்னொட்டு சேர்த்து வரும் சொற்களும் இல்லாமல், மறைந்து போன நல்ல தமிழ்ச் சொல் எதையும் அறிவியல் பெயராகத் தர இயலுமானால் மகிழ்வேன். --Ravidreams 09:17, 7 மார்ச் 2007 (UTC)

ஆங்கிலத்திலும் land-based, earth-based என்று சொல்வதில்லையா? Earth mover என்னும் பொழுது என்ன பொருள் கொள்லுகிறீர்கள் ரவி? Earth worm என்னும் பொழுது என்ன பொருள் கொள்ளுகிறீர்கள் ரவி? Earth என்பது மண்தான் (மண்ணுலகைக் குறிக்கும் பொழுது அதில் உள்ள நீர்நிலைகளையும் சேர்த்தேக் குறிக்கும்). ஆங்கிலத்தில் accident, blade என்றால் இடத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளும், ஜெர்மன் போன்ற பிற மொழிகளில் traffic accident, fan blade என்று இணைத்தே சொல்வது வழக்கம். மொழி வழக்கங்கள் வேறுபடுவதில் தவறில்லை. நாம் சோறு என்பதை ஆங்கிலத்தில் cooked rice என்றுதான் சொல்லுகிறோம். நாம் காய், பிஞ்சு , துளிர் என்பதை unriped fruit, baby fruit (?), baby leaf என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். நில உலகம், மண்ணுலகம், நில உருண்டை என்பதெல்லாம் நன்றாக வழங்கக்கூடிய சொற்கள்தாம். ஆங்கிலத்திலும் சில இடங்களில் வெறும் Earth என்று சொல்லாமல் Planet earth என்று சொல்வதுண்டு. நீங்கள் எண்ணும் போக்கில் சென்றால் ஆங்கிலத்திலும் Earth என்றால் மண்ணைக் குறிக்கின்றதா மண்ணுலகைக் குறிக்கின்றதா என குழப்பம் நேரும். Earth mover என்பதை எப்படிப் பொருள் கொள்ளுவீர்கள்? நாமும் நில உருண்டை, நிலக் கோளம் என்றெல்லாம் சொல்வதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை. --செல்வா 13:55, 7 மார்ச் 2007 (UTC)

விளக்கங்களுக்கு நன்றி, செல்வா. எல்லா மொழிகளிலும் எல்லா இடங்களிலும் ஒற்றைச் சொல்லில் சொல்ல இயலாது, அவசியம் இல்லை என்கிறீர்கள். ஏற்றுக் கொள்கிறேன்.--Ravidreams 14:11, 7 மார்ச் 2007 (UTC)

ரவி, கனகு, மேலும் ஒன்று. ஆங்கிலத்தில், sun, solar, helios போன்ற பல சொற்களில் அடிப்படையில் கலைச்சொற்கள் ஆக்கபட்டுள்ளன. அவை இலக்கிய வழக்குகள் என்று கூற இயலாது (அறிவியல் இலக்கியம் என்பதைத்தவிர). அறிவியலில் ஒரே சொல்லால் குறிக்கப்படவேண்டும் எஎன்பது எல்லா இடங்களிலும் பொருந்தி வருவதல்ல. அறிவியல் வகைப்பாட்டுக் கலைச்சொற்களும் கூட பலவிதமாக கூறப்படும். எடுத்துக்காட்டாக ஓமவல்லி என்று தமிழ்நாட்டில் வழங்கும் சற்று தடிப்பாக மெதுமெது என்றும் மணமிக்க இலைகளைக் கொண்டதுமாகியச் செடியை அறிவியலிலும் பொது வழக்கிலும் பலவிதமாகக் குறிப்பர். : Plectranthus amboinicus (Cuban oregano, Spanish thyme, Indian Borage or Mexican mint; syn. Coleus amboinicus Lour.) இதனை Coleus aromaticus ன்றும் சொல்வர். எனவே ஒரே சொல் இருக்க வேணும் என்பதில்லை. --செல்வா 14:45, 7 மார்ச் 2007 (UTC)--செல்வா 17:39, 7 மார்ச் 2007 (UTC)

உயிர்வாயு எதிர் ஆக்சியன் தொகு

பல தனிமங்களுக்கும் நன்கு அறியப்பட்ட தமிழ் பெயர்கள் உண்டு. எ.கா இரும்பு, பொன். அவற்றை கட்டுரைகளில் எடுத்தாள்வதே நன்று. உயிர்வாயு என்பது இலங்கைப் நூல்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. இது தொடர்பாக தீர்க்கமான கருத்துக்கள் இல்லை, இருப்பினும் கட்டுரையாளரின் கருத்தை அறிய ஆவல். --Natkeeran 16:17, 7 மார்ச் 2007 (UTC)

//உயிர்வாயு என்பது இலங்கைப் நூல்களில் பயன்படுத்தப்படுவதுண்டு// நான் கண்டதில்லை.... இலங்கைப் பாடநூல்களில் ஒட்சிசன் என்றே பயன்படுகிறத்ரு. --கோபி 16:20, 7 மார்ச் 2007 (UTC)

கட்டுரையில் ஏற்கனவே உயிர்வளி என்றும் ஆண்டுள்ளேன். மேலும் 16ஆவது நெடுங்குழுவிற்கு உயிர்வளிக்குழு என்றும் குறித்துள்ளேன். உயிர்வளி என்பது ஓரளவு பயன்பாட்டில் உள்ள சொல். எனினும் ஆக்ஸிஜன் (ஆக்சிசன், ஆக்சிஜன், ஒட்சியன், ஒட்சிசன்) என்னும் சொல்லை முன்ன்னிலைப்படுத்துவது நல்லதென்று நினைக்கின்றேன். --செல்வா 17:49, 7 மார்ச் 2007 (UTC)

நில உலகுக்கான சொற்கள் தொகு

தமிழில் வழங்கும் சொற்கள் பல. அவற்றுள் சில வேற்றுமொழியில் இருந்து வருபவை. உல் > உலகம் என்பது போல் உகம் என்றாலும் உலகம்தான். குவலயம், குவவு, ஞாலம், பார், பொழில், புடவி, பூழில், பொறை, நீரகம், கூ, கோ, கிடக்கை, மண்ணுலகு, மண்ணகம், இருநிலம் (இரு = பெரிய, பெருமை உடைய - இரண்டு என்பதல்ல இங்கு பொருள்), வையம், மேதினி, அகிலம், அவனி, தரணி, தரை, காசினி, புவி, புவனம், பூவுலகு பூமி நிலம், உலகம். ஆக மொத்தம் 29க்கும் குறையாமல் உள்ளன--செல்வா 17:59, 7 மார்ச் 2007 (UTC)--செல்வா 18:13, 7 மார்ச் 2007 (UTC)

ஒட்சிசன், ஆக்சிசன் தொகு

--Natkeeran 23:26, 3 ஜனவரி 2009 (UTC)

ஒட்சிசன், அல்லது ஒக்சிசன் நல்லா இருக்கு தொகு

--Natkeeran 17:13, 14 மார்ச் 2009 (UTC)


உயிர்வாயு மிகத் தவறான பக்கவழி மாற்று தொகு

உயிர்வாயு என்பது ஆக்சிசன் வாயுவைக் குறிப்பதன்று. அது மெதேன் வாயுவைக் குறிக்கும் en:Biogas. //உயிர்வாயு என்பது இலங்கைப் நூல்களில் பயன்படுத்தப்படுவதுண்டு// என்ற கருத்து Biogas என்பதன் பொருளுடனேயே இலங்கைப் பாடப்புத்தகங்களில் பயன்படுகிறது. தாவர விலங்கு உயிர்ப் பொருட்கள் அழுகுவதால் தோன்றும் வாயு என்று பொருள். தயவு செய்து திருத்துவதுடன் உயிர் வாயு கட்டுரையையும் தொடங்க வேண்டும். தமிழ் நாட்டில் Bio gas க்கு எத்தகைய தமிழ்ச் சொல் பயன்படுத்தப்படுகிறது. --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:15, 22 சனவரி 2011 (UTC)Reply

Biogas - உயிரிவளிமம் (உயிரிவாயு). பார்க்க: உயிரி எரிபொருள்.--Kanags \உரையாடுக 03:02, 22 சனவரி 2011 (UTC)Reply
கருத்துக்கு நன்றி.ஆனால் இலங்கை பாட நூல்களில் இற்றைவரை bio gas என்பதை உயிர்வாயு என்ற சொல்லினால் வழங்கும் நிலையில் இந்த பக்க வழிமாற்றம் குழப்பத்தைத் தருமல்லவா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:01, 22 சனவரி 2011 (UTC)Reply
உயிர்வளி என்றே நான் தமிழகத்தில் கற்றேன். en:Biogas என்பதற்கு உயிர்வாயு என்று பயன்படுத்தியிருப்பது தவறே.உயிரிவாயு என்பதே எனக்கும் மிகப்பொருத்தமாகப் படுகிறது.வாயு என்பது வடச்சொல். அதனைத் தமிழில், வளி என்பர்.இங்கு ஆக்சிஜன்/ஆக்சிசன் என்பதை முதன்மைப் பெயராக வைத்திருத்தல் ஒலிப்பெயர்ப்பே. மொழிபெயர்ப்பான, உயிர்வளி இருத்தலே சிறப்பு.-- உழவன் +உரை.. 19:29, 12 அக்டோபர் 2012 (UTC)Reply

இலக்கணப் பிழை தொகு

ஆக்சிசன் என்றெழுதுவது தமிழ் இலக்கணப்படி குற்றம்.--பாஹிம் (பேச்சு) 15:08, 21 அக்டோபர் 2020 (UTC)Reply

ஆம்

ஆக்சிசன் என்று எழுதுவது பிழையே ககர மெய் எழுத்துக்குப் பின் ககர உயிர்மெய் எழுத்து மட்டுமே வரும்

தவிர ஒலிபெயர்த்து எழுதுவதை விட மொழிபெயர்த்து எழுதுவதே சிறப்பானது

உயிர்வளி அல்லது தீயதை என்று எழுதலாம்

தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 18:36, 13 செப்டம்பர் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒட்சிசன்&oldid=3514069" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒட்சிசன்" page.