பேச்சு:இயக்கி

விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

"உட்கொதிப்பு இயந்திரம்" ( internal combustion engine) என்று நீங்கள் கூறுவதை உள் எரி பொறி என்று நெடுங்காலமாக வழங்குகிறோம். பார்க்கவும் --செல்வா 00:42, 14 ஆகஸ்ட் 2009 (UTC)

முகட்டி என்ற சொல்லை எந்தப்பொருளில் எப்படி ஆளுகின்றீர்கள் என்று விளங்கவில்லை. முகடு என்றால் உச்சி. முகட்டு என்றால் வீட்டின் உச்சி விட்டம் அல்லது உள்கூரை உச்சி என்று பொருள்படும். மோட்டுவளை என்பது முகட்டுவளை - இது கூரையின் கைகள் கோத்து நிற்கும் உச்சிமரம். முகட்டு என்னும் வினைச்சொல் உள்ளதா? முகட்டி என்றால் என்ன பொருள்?--செல்வா 00:49, 14 ஆகஸ்ட் 2009 (UTC)

முகட்டி என்பது முயத்தர் , முயத்தி என்பதின் திரிபு என்று எண்ணுகிறேன் . www.tamildict.com என்ற இணையத் தளத்திலும் , செந்தமிழ் அகராதி ( dictionary.senthmil.org ) என்ற இணையத்திலும் இது நடைமுறை படுத்த பட்டுள்ளது. முகடு என்ற சொல் குறடு என்ற பொருளிலும் வரும் . முகடு - உச்சி.( முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண். 246) என்றும் பொருள் ) , முகட்டு வளை - வீட்டின் மேற்கூரை ( அண்டமுகடு. வானெடு முகட்டை யுற்றனன் (கம்பரா. மருத்து. 30 ) என்றும் பொருள் கொள்ளலாம் . முகடு - குறடு ( பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது பிதற்றிடும் பெருமூடரும் (அறப். சத. 35) என்றும் பொருள் கொள்ளலாம் ) . இது சபைக்குறடு என்ற பொருளில் வந்துள்ளது . குறடு என்ற சொல்லின் பொருள் கொத்தும் பட்டடை. (ஊனமர் குறடு போல (சீவக. 2281)) - கொத்துவதற்கு பயன்படும் ஒரு கருவி . இவ்வாறு இந்த சொல்லை பயன் படுத்தி வந்திருக்கிறார்கள்.

இவ்வகையில் பார்த்தால் முகடு - குறடு - கொத்தும் கருவி - திருகும் கருவி . முகட்டு - கருவியால் திருகு ; கருவியால் சுழற்று என்று பொருள் கொள்ளலாம். முகட்டு + இயந்திரம் = திருகு / சுழற்று + இயந்திரம் . சுழற்றுவதற்கு அல்லது திருகுவதற்கு பயன்படும் இயந்திரம் . இதைதான் முகட்டி என்று பொருள் சுருக்கப்பட்டுள்ளது .இந்த சொல் பல இணைய தளத்திலும் பல அகராதியிலும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது . ஆகையால் தான் நான் இதை பயன்படுத்தினேன் . -- இராஜ்குமார்.

முயத்தர், முயத்தி என்னும் சொற்கள் இருப்பதாகவோ, அதற்கு நீங்கள் வழங்கும் பொருள்கள் இருப்பதாகவோ நான் ஒப்புக்கொள்ளவில்லை. என் நண்பர் நா.கணேசன் அவர்கள் முயத்தர், முயத்தி என்று கூறியிருப்பதை இணைய-வழி கண்டேன். ஆனால் அது ஏற்புடையதல்ல, அதில் அவர் தந்துள்ள விளக்கங்களும் சரியென்று நான் ஏறக்க இயலாதவனாக உள்ளேன். முகத்தல் என்று ஒரு சொல் உண்டு அள்ளுதல், கவ்வுதல், கொள்ளுதல் (நீர் முகத்தல், முகத்தல் அளவை நோக்குக). அதன் வழி முகத்தல் என்பது ஒருவாறு கொத்துதல் என்னும் பொருள்நீட்சி பெறக்கூடும். ஆனால் திருகுதல், சுழற்றுதல் எனபன கொள்ளா. முகட்டு என்னும் சொல்வடிவம் பெறுவதற்கும் காட்டுகள் வேண்டும். நீங்கள் மேலே சுட்டிய அகராதிகளை அடிப்படையாகக் கொள்வது ஏற்புடையதல்ல. இன்றைய சூழலில் யாரும் இது போன்ற தொகுப்புகள் செய்யலாம், அதில் செல்லாதன பலவற்றை ஏற்றலாம். தமிழ் லெக்ஃசிக்கனையே நேர்மையுடன் குறை கூறுபவர்கள் உள்ளனர். திருகுதல் என்னும் வேண்டும் எனில் முறுக்கி என்றே சொல்லலாம். முறுக்குதல் என்பதற்கும், சுழலுதல், சுழற்றுதல் என்பதற்கும் பொருள் வேறுபாடுகள் உண்டு முகட்டி = motor என்பது ஏற்க இயலாத இணை. motor= மின்சுழற்றி, மின்னியக்கி, மின்னுருட்டி என்பன ஏற்ற சொற்கள். மின்முறுக்கி பொருந்தாத சொல், மின்திருகி பொருந்தாத சொல். மின்முகட்டி என்று சொல் எப்பொருளும் தாராத சொல் என்பது என் நேர்மையான கருத்து.--செல்வா 15:02, 14 ஆகஸ்ட் 2009 (UTC)

இங்கே இராம.கி அவர்கள் கூறியுள்ள கருத்தையும் பாருங்கள். அங்கு அவர் முகட்டி = motor என்று கூறுவது பொருந்தாது என்பது என் கருத்து. அவருடைய சிந்தனைகளை பலரைப்போல நானும் பாராட்டுபவன், மதிப்பவன், ஆனால் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாதவனாக உள்ளேன். --செல்வா 15:48, 14 ஆகஸ்ட் 2009 (UTC) மேலும், முகட்டி, மோட்டி, மோட்டார் என்று தொடர்பு வருமாறு அவர் அச்சொற்களை ஆக்கியிருப்பாரோ என நினைக்கிறேன். --செல்வா 15:50, 14 ஆகஸ்ட் 2009 (UTC)

முயத்தி , முயத்துதல் , முயற்சித்தல் , முகவுதல் , முகவு , என்று அவர் விளக்கம் அளித்துள்ளார் . முகடு , முகட்டு , முகட்டி என்று நான் விளக்கம் கொடுத்திருந்தேன் . இத்தகைய சான்றுகளில் இருந்து முகட்டி என்ற சொல் ஒரு இயந்திரத்தை குறிக்கும் என்பது உறுதி . motor என்ற சொல்லிற்கு தாங்கள் electrical motor என்று பொருள் கொண்டுள்ளீர்கள் . electrical motor என்பது மின்னுருட்டி , மின்னியக்கி , மின்சுருட்டி , என்று பொருள் கொண்டால் , motor என்பதற்கு சுழற்றி , உருட்டி , இயக்கி என்றுதான் பொருள் . சுழற்றி , உருட்டி , இயக்கி என்று மேம்போக்கான வார்த்தைகளால் மட்டும் எத்தனை பெயர் வைக்க முடியும் . actuator - இயக்கி , motor - இயக்கி , இப்படி எல்லா இயந்திரங்களுக்கும் ஒரு சில தமிழ் வார்த்தைகளை கொண்டு பெயர் வைத்து கொண்டு இருப்பது நல்லதல்ல .motor - இயக்கி , generator - ஆக்கி. இப்படி இருப்பது பொருந்தாதது . முயத்தி என்ற சொல்லை நான் தேர்ந்தெடுக்க வில்லை . ஏன் என்றால் அது ஒரு இயந்திரத்திற்கு ஏற்புடையது இல்லை என்பதை நானும் அறிவேன் . முகட்டி , சுழற்றி , உருட்டி , இயக்கி என்று எல்லா சொற்களுமே தனக்கென்று ஒரு பண்புகளை உணர்த்துகின்றன . எல்லா இயந்திரமும் இயக்கிகள் தான் . machine , engine , device என்ற ஆங்கில சொற்கள் பொதுவான ஒரு சொல். இந்த சொல்லை எல்லா இயந்திரம் , கருவிகளையும் குறிக்கும். அதுபோல் தான் இயக்கி , இயந்திரம் என்ற சொற்களும் . முகட்டி என்பது ஒரு இயக்கி அல்லது இயந்திரம் என்று சொல்லலாம் ( motor is a machine என்பது போல ) ஆனால் இயக்கி என்பது ஒரு இயந்திரம் என்று சொன்னால் சிரிப்பார்கள் . மேலே நான் குறிப்பிட்ட இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள முகடு என்பதற்கு நேரான பொருள் இயக்கத்தை குறிப்பது . ஆனால் பெரும்பாலும் அவ்விலக்கியங்களில் உச்சி , ஒரு வகை மரத்தை குறிப்பதாகவே பயன்படுத்தி வந்துள்ளனர் . அது அக்காலத்தில் இயந்திரங்கள் அவ்வளவாக இல்லாத காரணங்களாக குட இருக்கலாம் . motor என்ற சொல்லுக்கு சுழற்றி , உருட்டி என்பதை விட முகட்டி என்ற சொல் நன்கு பொருத்தமானது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இயக்கி என்ற சொல்லுக்கு பதிலாக இயக்கத்தை குறிக்கும் வேறு சொல்லை தேடினால் நல்லது எனக்கு தோன்றியது . அதனால் தான் இயக்கி என்ற சொல்லையும் முகட்டி என்ற சொல்லுக்கு பக்கத்தில் வைத்திருந்தேன் . இயந்திரம் சார்ந்த கூற்றுக்கு முகட்டி என்ற சொல் சில நேரங்களில் பொருந்தினாலும் , சில விடயங்களுக்கு அது பொருந்துமா என்பதில் சந்தேகிக்கிறேன் . நான் எழுத நினைத்த கட்டுரைக்கு இப்போது பொருத்தமாக இருப்பது முகட்டி என்ற சொல்.

motor nerve , motor system , molecular motor , motorcycle , motor language . இவை எல்லாவற்றிற்கும் பொருந்தும் வகையில் ஒரு சொல்லை தேடுகிறேன் . தங்களிடமும் பரிந்துரைகள் வேண்டுகிறேன் . ஆங்கிலத்தில் motor , generator என்ற சொற்கள் பல துறைகளுக்கு பொதுவான சொல். முகட்டி , இயக்கி , அல்லது வேறு எந்த சொல்லாக இருந்தாலும் சரி science , computer ( code generator ) , biology (motor neuron ) . என்று எல்லா துறைகளுக்கும் பொதுவான ஒரு சொல் வேண்டும் . -- இராஜ்குமார்.


மேலே நான் குறிப்பிட்ட இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள முகடு என்பதற்கு நேரான பொருள் இயக்கத்தை குறிப்பது என்னும் உங்கள் கூற்றுக்கு என்ன சான்றுகோள்? முகடு என்பதற்கு உச்சி, மேல், முன்னிருப்பது என்று வேண்டுமானால் பொருள் வருமே அன்றி இயக்கம் என்று பொருள் கட்டாயம் வாராது. முகட்டி என்று ஒரு சொல் இல்லாதது மட்டுமல்ல அது ஒரு முறையற்ற, பொருளற்ற சொல்லாக்கம். அதற்கு மோட்டார் என்றே கூறலாமே. ஆனால் இயக்கி என்பது ஒரு இயந்திரம் என்று சொன்னால் சிரிப்பார்கள் என்கிறீர்கள். ஏன், இயக்கி என்பது ஓர் இயந்திரம் என்பதில் என்ன இடர்ப்பாடு? இயக்குவது இயக்கி, தூக்குவது தூக்கி, வெட்டுவது வெட்டி என்பது போல இயக்குவது இயக்கி என்பது ஓர் இயந்திரம். அது பொதுச்சொல்லாக உள்ளது, அவ்வளவுதான். நீங்களே கூட முகட்டி என்பது ஒரு இயக்கி அல்லது இயந்திரம் என்று சொல்லலாம் என்றுதானே மேலே கூறுகின்றீர்கள்?! அப்பொழுது உங்களுக்கு ஏன் சிரிப்பு வரவில்லை?! அங்கும் நீங்கள் இயக்கி என்பதைத்தானே கூறுகின்றீர்கள்? நீங்கள் உறுதியாக இருங்கள், ஆனால் முகட்டி என்னும் சொல் பொருளற்ற, பொருந்தாத சொல் என்பது என் நேர்மையான கருத்து. நான் கூறுவது தவறு என்றால் என்னைத்திருத்திக்கொள்ள அணியமாய் இருக்கின்றேன். மின்னியக்கி, மின்சுழற்றி, மின்னுருட்டி என்பன electrical motor என்பதற்குத்தான். உள்ளெரி பொறி போன்று பிற உந்தாற்றலால் உருளியக்கம் பெறுவனவற்றை தக்க பெயர்களால் குறிப்பிடலாம். திரிகை என்று கையால் சுழற்றி திரித்து அரைக்கும் கல்லால் ஆன இயந்திரம் இருந்தது போல உருட்டிகை எனலாம். உருளிகை, உருட்டியம், சுழற்றிகை, உருளுந்தி, உருளுந்திகை, சுழலுந்தி, சுழலுந்திகை என்று பலவாறு தேவை கருதி ஆக்கிக்கொள்ளலாம். --செல்வா 19:00, 14 ஆகஸ்ட் 2009 (UTC)
நான் 'இயக்கி என்பது ஓர் இயந்திரம் என்று சொன்னால் சிரிப்பார்கள் ' என்று சொன்னது ஒரு தவறானது தான். நான் அப்படி சொன்னதற்கு வருத்தபடுகிறேன் . முகட்டி என்பது தவறான சொல்லாக்கமாக இருக்கலாம் . நீங்கள் கேட்ட சான்றுகள் என்னால் தரமுடியவில்லை . முகட்டி என்பது பொருத்தமான சொல்லல்ல என்பதை உணர்ந்தேன் . ஆகையால் , நான் இயக்கி என்ற சொல்லை பயன் படுத்தி உள்ளேன். மேலும் உங்கள் நீங்கள் கொடுத்த கூற்றுகளைக்கொண்டு அந்த கட்டுரையில் பல இயந்திரங்களுக்கு பெயரிட்டுள்ளேன் . அதனையும் சரி பார்க்கவும் . ஒரு தவறான சொல்லை பயன்படுத்தாமல் இருப்பதற்கு துணை செய்ததற்கு நன்றி . --இராஜ்குமார்.
உங்கள் மறுமொழிக்கு நன்றி. மின்னியக்கி அல்லது முன்னுருட்டி சரியானதாக இருக்கும். மோட்டார் என்று பிற இடங்களில் வரும்பொழுது அதற்கும் ஒரே சொல்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. motor என்பது motion, move என்பதில் இருந்து உருவானதே. ஆக்ஃசுபோர்டு அகராதி சொற்பிறப்பியலில் மூவ் (move) என்பதன் இறந்தகால முடிவெச்சமாகிய மோட்- (mot-) என்பதில் இருந்து உருவானது என்று கூறுகிறார்கள் "OED): [ < mot-, past participial stem of movre MOVE v. + -or -OR suffix]". அதாவது நகர்தல், இயங்குதல், ஓடுதல், நடத்தல் என்னும் பொருளடிப்படையிலேயே அச்சொல் (தொடர்பான locomotive போன்ற பல சொற்களும் கூட) உருவானது. எல்லா இடங்களிலும் உருட்டி என்னும் சொல் பொருந்தாது. மாலிக்கியூலர் மோட்டர் (molecular motor) என்னும் இடத்தில் சுழற்சி உள்ளதும் உண்டு, வெறும் நகர்ச்சி ஆற்றலாக வெளிப்படுவதும் உண்டு. இடத்தைப் பொருத்து, அது என்ன, எப்படி இயங்குகின்றது என்று தெளிவாக உணர்ந்து ஏற்ற சொல்லாக்கம் செய்வது நல்லது என்பது என் கருத்து. நானோ மோட்டர் என்பது நுண் நகரி, அல்லது நுண்ணுந்தி அவ்வளவுதான். நானோ ரோபாட் என்பது நுண் பணியி (பணி செய்யும் ஒன்று). இவைதாம் சிறந்த சொற்கள் என்று நான் கூறவில்லை. ஒன்றைப்பற்றி சற்று விரிவாக, கருத்துகளைத் தெளிவாக விளக்குமுகமாக எழுத முயலும்பொழுது தக்க சொற்கள் உருவாகக்கூடும். அல்லது படிப்பவர்களில் யாரேனும் வந்து மேலும் சிறந்த பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்ககூடும். --செல்வா 14:50, 15 ஆகஸ்ட் 2009 (UTC)

திரு . செல்வா அவர்களே . உங்களுக்கு நான் நிறைய நன்றிகள் சொல்ல வேண்டும். நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் . நான் எழுதியவற்றை திரித்தி எழுதிக் கொண்டிருக்கிறேன் . நான் எழுதியவற்றை அவ்வ பொழுது கவனிக்கவும், பரிந்துரைகளும் செய்யவும் . --இராஜ்குமார்.

தன்னையே எரித்து கொள்ளும் இயந்திரம் தான் எரி பொறி . எரி பொருள் என்பது தன்னை எரித்து கொண்டு சக்திகளை தருவன . எரி வாயு வும் அப்படி தான் . எரி பொறி என்ற சொற்கள் முரண்பட்டதாக உள்ளது . கொதிப்பு என்பதே தவறானது . இதற்கு தகம் அல்லது தகனம் என்று சொல்வார்கள் . தகம் என்றால் எரிவு , சது . உத்தகம் என்று சொல்லலாம் . சது , எரிவு இதெல்லாம் வழக்கில் இல்லாதது . ஆனால் தகம் என்று சொன்னால் அனைவருக்கும் புரியும் . உத்தகப்பொறி என்பது பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைகிறேன் . தகம் , தகமை , தகைமை என்பது இதன் தன்மையை குறிப்பது .இவ்வகை உள்ளுக்குள் எரிபவை தான் . ஆனால் அதற்காக அதை எரி பொறி என்பது தவறானது . -- இராஜ்குமார்.

combustion என்பது எரிவது. இங்கு எரியக்கூடிய வளிமம் எரிந்து ஆற்றல் தருவதைக் குறிக்கின்றது. உள்ளே (வளிமம்) எரிந்து (உந்து ஆற்றல் தரும்) பொறி, உள் எரி பொறி. உள்ளெரி பொறி என்பதால் உள்ளே எரியும் பொறி என்று பொருள். நீங்கள் தவறான கோணங்களில் பொருள் கொள்ளுகின்றீர்கள். தகனம் என்பது எரிப்பு, எரிகை. தகுதி பற்றி தகைமை என்றாகியது, தகனம் (தகம்?) எரிதல் என்பதால் அல்ல!! சது, உத்தகம்?? தகனம், தகிப்பது முதலியன சமசுக்கிருத அல்லது வடமொழிகள் வழி வருவது. அவற்றின் பொருள் நீங்கள் தவறான நோக்கில் எதிர்க்கும் எரி, எரிதல் என்னும் அதே பொருள்தான். தமிழ்-வழியும் தகம் என்பது வெப்பம் என்று பொருள் தரும், ஆனால் அது இங்கு தேவை இல்லை. கதிரவன் தகதகவென எழுகின்றான் என்பது வெப்பமும் ஒளியும் வீசிக்கொண்டு எழிலுடன் எழுகின்றான் கதிரவன் என்னும் உணர்வெழுச்சிக்கூற்று. --செல்வா 15:02, 14 ஆகஸ்ட் 2009 (UTC)

மின்னோடி

தொகு

பெரும்பாலுமான தமிழ்வழிப் பாடநூல்களில் Motor என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு மின்னோடி என்கிற தமிழாக்கம் தரப்படுகிறது. இயக்கி என்கிற சொல், Controller என்கிற ஆங்கிலச் சொல்லிற்குப் பயன்படுத்தப்படுகிறது. Process Controller என்கிற அமைப்பில் அல்ல. Remote Control, Memory Controller என்கிற சொல்லமைப்பில் தொலையியக்கி, நினைவக இயக்கி என்கிற தமிழாக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுரையின் தலைப்பை மின்னோடி என அமைத்தல் நடப்பு நூல்களுடன் இயைபு ஏற்படுத்தும். --தொழில்நுட்பம் 17:46, 14 ஏப்ரல் 2010 (UTC)

Motor - இயக்கி ( ஓடி தவாறனது) electrical motor - மின்சார இயக்கி (மின்னோடி)

-- இராஜ்குமார் 07:10, 16 ஏப்ரல் 2010 (UTC)

உட்பொருட்கள்

தொகு

Rotor = ? stator = ? இரண்டும் இயக்கியில் (motor) பயன்படுபவை. Aadhitharajan (பேச்சு) 07:35, 15 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயக்கி&oldid=2118243" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கி" page.