பேச்சு:கோலுயிரி
இதனை கோலுயிரி என்று சுருக்கமாக சொல்லுவது பொருந்தும். கட்டுரையில் கோலுரு நுண்ணுயிர் என்றும் அது கோலுயிரி என்று கூறப்படும் என்று கூறுவது நல்லது என்று நினைக்கிறேன். --செல்வா 12:41, 30 மே 2008 (UTC)
- செல்வா, கோலுயிரி என்று சுருக்கமாகச் சொல்லுவது நன்றாக இருக்கிறது. பட்டை பட்டையாய் இருப்பதால் இவற்றைப் பட்டுயிரி என்றும் அழைக்கலாம் என்று இராம.கி ஒருமுறை பரிந்துரைத்தார். கோலுயிரி, பட்டுயிரி என்றாற்போல் எதுவானாலும் சுருக்கமாய் இருப்பது சிறப்பு. --இரா.செல்வராசு 02:27, 31 மே 2008 (UTC)
- செல்வராசு, பட்டை பட்டையாய் இருந்தால் பட்டையுயிரி என்று ஆகும், ஆனால் பட்டுயிரி என்று ஆகுமா? மேலும் எல்லாச் சொற்களிலும் உயிரி என்று சேர்க்க வேண்டும் என்றும் இல்லை. தட்டையாக உள்ள ஓர் உணவுப்பண்டம் தட்டை என்றும், உருண்டையாய் உள்ள உணவுப்பொருள் (கடலை உருண்டை, பொரி உருண்டை, ரவை உருண்டை) உருண்டை என்றே அழைப்பதுபோல பட்டை என்றே கூட கூறலாம். நுண்ணுயிர், நுண்ணுயிரி என்பது பொதுவாக microorganism என்னும் சொல்லுக்கு இணையாகக் கூற வேண்டியிருப்பதால், கோலுரு என்னும் முன்னொட்டு தேவைப்படுகின்றது. வெறும் கோலுரு என்றுகூட கூறலாம். கோலுயிர், கோலுயிரி என்றும் கூறலாம். பொருத்தமாக இருக்கும் என்று நீங்களும் நினைப்பது அறிந்து மகிழ்ச்சி.--செல்வா 02:50, 31 மே 2008 (UTC)
- செல்வா, பட்டை என்று சொல்லலாம் என்றாலும் அது பரவலாகப் பல பொருட்களில் ஏற்கனவே அறியப்படுவதால் பாக்டீரியாவிற்குச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. கோலுரு, கோலுயிர், கோலுயிரி எல்லாமே சரியே. இராம.கியின் பதிவிடுகையில் இருந்து சம்பந்தப்பட்ட பத்தி கீழே.
[தமிழில் கிருமி என்ற வடசொல் நெடுநாளாகப் பயிலும் சொல் என்றாலும் அது bacteria - வைக் குறித்தது. நல்ல தமிழில் bacteria -வைப் பட்டுயிரி என்று சொல்லுவோம். பட்டையாய் இருக்கும் உயிரி பட்டுயிரி. படுவது பட்டை. இப்படித்தான் மேலைநாடுகளில் bacteria-விற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். தமிழிலும் அதே போல கருத்தை எளிதில் கொண்டுவர முடியும்.
virus என்ற சொல்லைக் கிருமி என்றோ, பட்டுயிரி என்றோ குறித்தால் அதன் விதப்பான பொருள் வராது. virus என்பது நஞ்சு என்ற பொருள் உள்ளது. அது ஓர் ஒட்டுண்ணி. அது தனித்து இருக்கும் போது உயிர் இல்லாதது, வெறும் புரதமாய் இருப்பது. ஆனால் ஓர் உயிர் உள்ள கட்டகத்துள் (system) வந்தவுடன், அது ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி இப்படி மடங்கிப் (exponential) பெருகி ஓர் உயிர்ப்பைக் காட்டும். virus என்பது நம்மைத் திகைக்க வைத்து உலை வைப்பதால் அதை வெருவி என்று சொல்லலாம். வெருவு என்பதற்கு நஞ்சு என்றும் பொருள் வரும். http://valavu.blogspot.com/2006/04/blog-post_114460062524800544.html]
- இவையன்றி அருங்கலைச்சொல் அகரமுதலி பாக்டீரியாவைக் குச்சில் என்று வழங்குகிறது. அது நான் முன்னர் அறியாத ஒன்று. அதோடு வைரசுக்கு என்ன சொல்லுகிறோம்? நச்சுயிரி? --இரா.செல்வராசு 03:37, 31 மே 2008 (UTC)
- என் பரிந்துரை கோலுயிரிக்குப் பட்டை என்று சொல்லலாம் என்பதல்ல. சொல்லாட்சி அப்படி இருக்கலாம், அது ஏற்பான கலைச்சொல்லாட்சி முறை என்று கூறவே இங்கே குறிப்பிட்டேன். என் நெடுநாளைய இணையவழி நண்பர் இராம.கி யின் ஆழமான சொற்பிறப்பியல் முறைகளை நான் பெரிதும் பாராட்டினாலும், அவர் இந்திய-ஐரோப்பிய மொழிச்சொல்லுடன் ஒப்புமை உடையதாக இருக்குமாறு பல இடங்களில் சற்று வலிந்து கூறுகிறார் என்பது என் கருத்து. அவற்றுள் சில ஏலும், பல ஏலாதது (அவர் கூறும் கருத்து உண்மை உடையதே, ஆனால் பரிந்துரைக்கும் சொல்லாட்சி செயற்கையானதாகப் பல இடங்களில் உணர்ந்துள்ளேன்). இங்கு பாக்டீரியா என்பதற்கு நெருக்கமாக இருக்கவே அவர் பட்டுயிரி என்கிறார் என்பது என் கருத்து. பாக்டீரியா பட்டையாக தட்டையாக உள்ளது என்னும் கருத்து சரியா? குச்சில் என்பது பொருந்தும். குச்சியிரி என்றும் சொல்லாம். வைரஸ் என்பதற்கு தீ நுண்மம் என்று இங்கு விக்கிப்பீடியாவில் கூறுகிறோம். கணினி வைரஸ் என்பதை நச்சுநிரல் என்றும், அவற்றைத் தடுக்கும் நிரலியை நச்சுநிரல்தடுப்பி என்றும் கூறுகிறோம். நச்சுத்தன்மை உடைய உயிரியை, நச்சுயிரி என்று கட்டாயம் சொல்லலாம். அது தனித்து இயங்கும் உயிரி இல்லை என்று நினைப்பதால் தீ நுண்மம் என்று இங்கு அழைக்கின்றனர் என்று நினைக்கிறேன். இவை தவிர prion போன்ற புரதத் தீத்துண்டுகளும் உள்ளன. --செல்வா 04:57, 31 மே 2008 (UTC)
'கோலுரு நுண்ணுயிர்' என்னும் பெயர் சரிதானா?
தொகு'கோலுரு நுண்ணுயிர் என்று சொல்லும்போது அது bacillus வகையைச் சேர்ந்த பக்டீரியாவை குறிப்பதல்லவா? பக்டீரியாக்களை cocci, bacillus என்று பிரிக்கும்போது, கோலுரு நுண்ணுயிர் என்பது bacillus ஐ மட்டும் கருதுவதாகவே புரிந்து கொள்கிறேன். அப்படியானால், பக்டீரியா வை குறிப்பிடும்போது, அதன் ஒரு பகுதியான bacillus ஐ குறிப்பிடும் ‘கோலுரு நுண்ணுயிர்' என்ற பொதுவான பெயரை பாவிப்பது பொருத்தமாக இருக்குமா? ஆங்கில விக்கியில் bacteria வுக்கு தமிழில் 'கோலுரு நுண்ணியிர்' க்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஆங்கிலத்தில் bacillus எனக் குறிப்பிடப்படும் கட்டுரைக்கு தமிழில் எந்த இணைப்பை கொடுப்பது?--கலை 22:56, 11 அக்டோபர் 2009 (UTC)
- கலை, உங்கள் கேள்விகள் மிகச் சரியானவை. பாக்டீரியாவை பாக்டீரியா என்றே அழைக்கலாம். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). இதன் பொருள் stick, staff என்கிறது அதே அகராதி. எனவே குச்சியுயிரி என்பது பொருந்தும், ஆனால் இதன் வடிவங்கள் பல. சில நுண்ணிய உருண்டை வடிவுடையன (-coccus, எடுத்துக்காட்டாக Stretptococcus), சில குச்சி, கோல் வடிவுடையன (bacillus), சில மிக நுண்ணிய உருண்டை, குச்சி போன்றவை. இவற்றை microplasma என்கின்றனர். இவற்றை மிகுநுண்ணியிரி எனலாம். இன்னும் சில சுருள் வடிவம் கொண்டவை. இவற்றுக்கு எடுத்த்க்காட்டாக Treponeme pallidum என்பதைக் கூறலாம். பொதுவாக நுண்ணியிரிகள் மிகச் சிறியதாக இருப்பினும், சில பெரியதாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக Epulopiscium fishelsoni என்னும் "நுண்ணுயிரி" கோலுயிரி போல் நீண்டதாக இருப்பினும் 600 மைக்ரோமீட்டர் நீளம் கூட இருக்குமாம். அதாவது 0.6 மில்லி மீட்டர். ஆகவே பாக்டீரியாவை சொற்பிறப்பியல் அடிப்படையில் கோலுயிரி என்று சொல்வது சரியாக அமையாது. பாக்டீரியா என்றே கூறலாம். வைரசு என்பது உண்மையில் தனி உயிரி அல்ல. ஆகவே அதனை விட்டுவிட்ட்டால், நுண்ணுயிரி என்பதை பாக்டீரியாவுக்கும் ஈடாகப் பயன்படுத்தலாம். ஆனால் ஆங்கிலத்தில் மைக்ரோஆர்கானிசம் (microorganism) என்பதற்கு ஈடாக நாம் நுண்ணுயிரி என்கிறோம். coccus என்பதை நுண்மணி உயிரி என்றும், பா'சில்லசு என்பதை கோலுயிரி என்றும், நுண்சுருளுயிரி, மிகுநுண்ணுயிரி என்றும் மற்றவற்றை அழைக்கலாம் என நினைக்கிறேன். பாக்டீரியா என்பதை அப்படியே எடுத்தாளுவோம். --செல்வா 03:43, 12 அக்டோபர் 2009 (UTC)
- மறுமொழிக்கு நன்றி. அப்படியானால் இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தை பாக்டீரியா என்றிருக்கும் பக்கத்திலேயே போட்டுவிட்டு, கோலுரு நுண்ணுயிர் (Bacillus) கட்டுரையை புதிதாக ஆக்கலாம். அதேநேரம், கோலுரு நுண்ணுயிர் கட்டுரையை ஆங்கில விக்கியின் bacillus கட்டுரைக்கும், பாக்டீரியா கட்டுரையை ஆங்கிலத்திலுள்ள bacteria கட்டுரைக்கும் இணைப்பு கொடுக்க வேண்டும். சரியா? இதை ஏற்றுக் கொண்டால் மேற்சொன்ன மாற்றங்களை செய்து விடுகிறேன்.--கலை 07:50, 12 அக்டோபர் 2009 (UTC)
- வேறு யாருக்கும் மறுப்பு இல்லை என்றால் அப்படியே செய்துவிடுங்கள் கலை. எனக்கு ஏற்பே.--செல்வா 16:09, 12 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி செல்வா. மேற்கூறிய மாற்றங்களை செய்வதுடன், நீங்கள் மேலே கொடுத்திருக்கும் தவல்களையும் அங்கே இணைக்கிறேன். --கலை 13:19, 14 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி. --செல்வா 04:31, 15 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி செல்வா. மேற்கூறிய மாற்றங்களை செய்வதுடன், நீங்கள் மேலே கொடுத்திருக்கும் தவல்களையும் அங்கே இணைக்கிறேன். --கலை 13:19, 14 அக்டோபர் 2009 (UTC)
- வேறு யாருக்கும் மறுப்பு இல்லை என்றால் அப்படியே செய்துவிடுங்கள் கலை. எனக்கு ஏற்பே.--செல்வா 16:09, 12 அக்டோபர் 2009 (UTC)
நான் திரு ஸ்ரீநிவாசனின் "அறிவியல் அகராதி" (New Century Book-house, Chennai) புத்தகத்தை வாங்கினேன். அதில் தரப்பட்டுள்ள தமிழாக்கங்கள் இவை:
Bacteria - குச்சியம்
Virus - நச்சியம்
Bacillus - கோலியம்
- ராஜ் (தொழில்நுட்பம் இணையம்)
குச்சியம் என்பதும் ஒருகாலத்தில் வழங்கிய சொல்தான், ஆனால் கோல், குச்சி ஆகிய
இரண்டுமே ஏறத்தாழ ஒரே பொருள் கொண்டவைதான். நாம் பாக்டீரியா என்றே அழைக்கலாம்.
தமிழில் பெயர் வேண்டும் எனில், குறுவுயிரி எனலாம். நச்சுயிரி (வைரசு), கோலுயிரி
(பா'சிலசு என்னும் வகையான குறுயுயிரி) என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். --செல்வா 20:43, 16 நவம்பர் 2009 (UTC)
- செல்வா கூறியுள்ள குறுயுயிரி (bacteria), கோலுயிரி (Bacilus) பொருத்தமான தமிழ்பெயர்களாகத் தெரிகின்றன. --கலை 23:46, 16 நவம்பர் 2009 (UTC)
"எஸ். சுந்தரசீனிவாசன் : ஆங்கிலம் தமிழ் அறிவியல் சொல்லகராதி" புத்தகக் கண்காட்சியில் சென்ற வாரம் தான் வாங்கினேன். மேற்சொன்ன நூல் நவம்பர் 2008இல் பதிப்பிடப்பட்டது. இருந்தாலும் தமிழ் கலைச்சொற்கள் செந்தரமாக அச்சு வடிவத்தில் காண்பதில்லை. பெரும்பாலுமான மாணவர்கள் இணையத்தை நாடாமல் மேற்சொன்ன நூல்கள் போன்ற அச்சு வடிவ மூலங்களையே நாடுகின்றனர். New Century Book House நிறுமம் மட்டும் தமிழகத்தில் 12 அலுவலங்களைக் கொண்டுள்ளது. இது போன்ற அச்சு நூல்கள் இணையத்திலுள்ள கலைச்சொற்களை பிரதிபலிப்பதில்லை. இணையம்/அச்சு நூல்கள் இடையே கலைச்சொற்களில் உள்ள குழப்பங்கள் நீடித்து வருகிறது என்பது வருத்தத்திற்குறியது.
- ராஜ்