பேச்சு:மாதிகை
விக்சனரிக்குப் பொருத்தமானதாகவே இவ்விளக்கம் இருக்கிறது. ஆனால் மாதிகைகளின் வரலாற்றையும் சேர்த்து விரிவுபடுத்தக் கூடிய தலைப்பாகும். --கோபி 15:53, 19 செப்டெம்பர் 2006 (UTC)
- விரிவாக்கலாம் என்றால், ஆங்கில விக்கிபீடியாவில் ஒத்த தலைப்பில் கட்டுரை இருப்பதாகவும் தெரியவில்லை. கூகுளிலும் ஒன்றும் சிக்கவில்லை. யாரும் விரிவாக்காவிட்டால், ஒரு வாரத்தில் நீக்கிவட்டு, விக்சனரியில் உள்ளடக்கத்தை சேர்க்கலாம்--ரவி 17:11, 19 செப்டெம்பர் 2006 (UTC)
- மாதிகை என்பது புழக்கத்தில் உள்ள சொல்லல்ல. மாதம் ஒருமுறை வெளியாகும் சஞ்சிகைகள் மாசிகை என்றே வழங்கப்படுகின்றன. மாசிகை என்பது மாத சஞ்சிகை என்பதன் சுருக்கமாகும் [மா(தசஞ்)சிகை]. அது மாசம் என்ற பேச்சுத்தமிழ்ச் சொல்லுக்கும் பொருத்தமாக வருவது ஒரு விரும்பத்தக்க விளைவு. மாசம் என்பதிலிருந்து மாசிகை வந்ததாக எடுத்துக்கொண்டு, மாதம் > மாதிகை என்பதே சரி என்று, இச்சொல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புழக்கத்திலில்லாத, புதிதாக உருவாக்கப்படும் பல சொற்கள், தமிழ் விக்கிபீடியாவில் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது அவ்வளவு நல்லதாக எனக்குப்படவில்லை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்பாட்டிலுள்ள சொற்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பொருத்தமான சொற்கள் இல்லை என்ற போது தான் புதிய சொற்களை உருவாக்கவேண்டும். குடை என்ற சொல் சரியான பொருள்படவில்லை என்று சொல்லிக்கொண்டு, அது மழையைத் தடுப்பதால் மதடை அல்லது மடை என்று புதுப்பெயர் வைத்துக்கொண்டு நான் ஒரு கட்டுரையைத் தொடங்க முடியாது. Mayooranathan 19:24, 19 செப்டெம்பர் 2006 (UTC)
- மயூரனாதன், உங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ள சொற்பயன்பாடுகளை தயவு செய்து அந்தந்த பேச்சுப் பக்கங்களில் தெரிவியுங்கள். எனக்கும் பல சொற்பயன்பாடுகளில் உடன்பாடு இல்லை. தகுந்த இடங்களில் சுட்டிக்காட்டியும் வருகிறேன். (எடுத்துக்காட்டுக்கு, தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்). இது போன்ற அனைத்துப் பக்கங்களையும் விக்சனரிக்கு நகர்த்துவது கூட விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அகரமுதலிகளில் கூட புதுச்சொல் உருவாக்கங்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்றும் எங்கோ படித்த நினைவு. இதனை ஒட்டி விக்சனரியில் கூட எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் ஒற்றை தமிழ்ச் சொல்லில் தமிழாக்கம் தருவதை தவிர்த்து விளக்கங்களாகத் தருகிறோம். மாதிகை என்பது புதிதாக உருவாக்கப்பட்ட சொல் என்றாலும் அதற்கான தேவை என்ன என்பதில் எனக்கும் ஐயம் தான். (இல்லை, தேவநேயப் பாவாணர் போன்றோரால் உருவாக்கப்பட்டது இச்சொல் என்றாலும், இச்சொல் புழக்கத்தில் உள்ள வேறு ஊடகங்களை குறிப்பிடவும்.) மாதம் தோறும் வருவது மாத இதழ், கிழமை தோறும் வருவது கிழமை இதழ் என்றே சொல்லி விடலாமே? மாத இதழ் என்று சொல்வது மாதிகை என்பதை புரிந்து கொள்வதை விட இலகுவானது அல்லவா? தவிர, முன்னொட்டுக்களை பல இடங்களிலும் பயன்படுத்தலாம். மாத வாடகை, மாத விலக்கு என்பது போல்..அதே வேளை மாசிகை என்பது புழக்கத்தில் இருந்தாலும் அதை விக்கிபீடியாவில் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சஞ்சிகை தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை. சஞ்சிகை என்பது தமிழ்ச்சொல்லாகவும் தெரியவில்லை. இதழ், மாத இதழ் என்பவையே என் பரிந்துரைகள். என்னுடைய மறுமொழியில் அறியாமை தென்படுமானால், தயவு செய்து பொறுத்து தகுந்த விளக்கங்கள் தரவும்.--ரவி 20:06, 19 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, நான் இது தொடர்பான கருத்துக்களை முன்னரும் பல இடங்களில் தெரிவித்துள்ளேன். அண்மையிலும் நவச்சாரியம் (அமேனியா) பேச்சுப் பக்கத்திலும் சில குறிப்புக்களை விட்டுள்ளேன். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை படித்தேன். யார் எழுதியது, எதிலே வந்தது என்பதெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால், அதிலிருந்த இரண்டு விடயங்கள் ஏனோ மிகத் தெளிவாக இன்னும் நினைவில் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த மாசிகை பற்றிய குறிப்பு. அக் கட்டுரை தமிழில் புதுச் சொல்லாக்கம் பற்றியது தான். புதியவற்றைக் குறிக்க உருவாகப்படும் தமிழ்ச் சொற்கள்.சொற்களாக இல்லாமல் சொல் தொகுதிகளாக உள்ளனவென்று கூறி அதனைக் கண்டித்து எழுதப்பட்டிருந்தது. குடை என்றொரு சொல் இல்லாவிட்டால் அதற்கு மழை தடுப்பான் என்று பெயர் வைத்திருப்பார்கள் எனவும் நையாண்டி செய்திருந்தார் அதை எழுதியவர். அக்காலத்தில் தமிழ் மாத இதழ்களில், மாத சஞ்சிகை என்றே முகப்பில் எழுதி வந்தார்கள் போலும். சில மாத இதழ்கள் மாசிகை என்று எழுதத் தொடங்கியிருந்ததைப் பாராட்டியிருந்தது அக்கட்டுரை. பொருட்களையோ, கருத்துருக்களையோ, வேறு ஏதாவதையோ குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஒரே சொல்லாக இருப்பது விரும்பத்தக்கது என்பது தான் எனது கருத்தும். Wardrobe என்பதற்கு உடை வைக்கும் அலுமாரி என்று பெயர் வைத்தால் எழுதும்போது ஒவ்வொன்றையும் விபரமாக விளக்கி எழுதிக்கொண்டு போவதுபோல் இருக்கும். computer என்பதற்குக் கணிப்புச் செய்யும் பொறி என்று எழுதினால் சிலசமயம் விளக்கம் கூடுதல்தான் ஆனால் கணினி என்பதுதான் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழில் விடயங்களை இலகுவாக விளங்க வைப்பதற்கும் நல்லது. Mayooranathan 20:42, 19 செப்டெம்பர் 2006 (UTC)
மாதிகை என்பது புழக்கத்தில் உள்ள சொல்தான். ஆனால் பெரு வழக்கில் இல்லை, தேவநேயப்பாவானர், இறைகுருவனார், பாவலரேறு பெருன்சித்திரனார் போன்ற பெரும் தமிழறிஞர்களால் ஆளப்படும் சொல். நல்லறிஞர்கள் போற்றுவதை நாமும் போற்றி எடுத்தாளுவதால் தவறில்லை. மாசிகை என்னும் சொல் பிழையான சொல். மாசு என்றால் குற்றம். மாதம் > மாதிகை (மாதந்தோறும் வெளிவரும் இதழ்). எல்லாச்சொல்லும் ஒருகாலத்தில் புதிய சொல்லே. பயனுடையது, வளம் சேர்க்கும் சொல் என்றால் குறித்து வைப்பதில் தவறில்லை. எச்சொல்லும் எடுத்தாண்டால் தான் வழக்கூன்றும். சொற்கள் வழக்கொழிவதும், புது வழக்கு பெறுவதும், ஏற்கனவே உள்ள சொற்கள் புதுப்பொருள் பெருவதும் உயிருள்ள மொழிகளின் இயல்புதான். ஒரு காலத்தில் பெண்டாட்டி என்றால் சாமரம் வீசும் பெண்ணைக் குறித்தது, இன்று மனைவியைக் குறிக்கும். இப்படி மிகப்பல. --C.R.Selvakumar 02:54, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
கலைகளஞ்சியத்திலும், சில குறிப்புகள் சுருக்கமாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், மாதிகையின் வரலாறு பின்னர் விரிவாக எழுதவும் இயலும், அதற்குள் நீக்கிவிடாதீர்கள். இப்படி நீக்குவது சரியான முறை இல்லை என்பது என் கருத்து. --C.R.Selvakumar 03:06, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
- செல்வா, ஒரு சொல்லுக்கான பொருள், வரலாறு மட்டும் கூறுவது போன்ற குறிப்புகள், கட்டுரைகள் இங்கு இடம்பெறுவதை விட விக்சனரியில் இடம்பெறுவதே பொருத்தம் என்ற நோக்கில தான் இக்கட்டுரையை இங்கிருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது. தற்பொழுது, உலகளாவிய அளவில் மாத இதழ்களின் வரலாறை பதிவு செய்யும் நோக்கில் கட்டுரை வளர்வதால், இதனை நீக்கும் அவசியம் இல்லை. (கூகுளில் மாதிகை என்று தேடிப் பார்க்கவில்லை. history of monthly magazines என்பது போல் தேடிப் பார்த்தேன்..அதிலும் ஒன்றும் சிக்கவில்லை. இது குறித்து உங்களுக்கு சிக்கும் தகவல்களை சேருங்கள்). மாதிகை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க தலைப்பு தானா என்று மேலதிகப் பயனர்களின் கருத்தை அறியலாம். அப்படி ஏற்புடையதாய் இருப்பினும், மாதிகைகள் என்று பன்மையில் கட்டுரைக்கு பொருத்தமாய் இருக்கும். சஞ்சாரிப்பது சஞ்சிகை என்றால் மாதம் தோறும் வருவது மாதிகை என்று சொல் விளக்கம் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால், மாதம் தோறும் வரும் பிற விஷயங்களை எப்படி குறிப்பிடுவது? அதற்கு தனிச் சொற்கள் உருவாக்குவது அவசியமா? எப்படி உருவாக்குவது? இந்த கை என்ற அசை(?) இதழ்களை குறித்து நிற்பதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா? சஞ்சிகை, பத்திரிக்கை என்று எல்லாவற்றிலும் கை இருப்பதால் இந்த ஐயம்--ரவி 09:29, 20 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, history of magazine என்று தேடிப் பார்த்தீர்களானால், http://www.well.com/~art/maghist02.html போன்ற கட்டுரைகள் கிடைக்கும். ஆங்கிலத்தில் Atlantic Monthly, Harper's, Scientific American போன்றவை புகழ் பெற்றவை. இன்றும் மிகச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் மாதிகைகள். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மாதிகைகளில், Scientific American தான் மிகவும் பழையது. 1845 முதல் வெளிவருகின்றது. ஓரிரு வரி விளக்கங்கள் கொண்ட குறிப்புகள் புகழ் பெற்ற கலைக்களஞ்சியங்களில் (க.க) உள்ளன. விக்சனரியிலும் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் க.க வில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. விக்கி போன்ற க.க வில் பின்னர் வளரவும் வாய்ப்புள்ளது. ஓரிரு வரி விளக்கக் குறிப்புகள் சில உள் உணைப்புக்காக உருவாக்கப்பட்டன (பிற கட்டுரைகளில் குறிக்கப்படுவதால்). இவைகளை நீக்குவதால் இணைபைக் காட்டும் பிற கட்டுரைகள் இணைப்பின்றி நிற்கும். எனவே சற்று பொறுத்து இருந்து இவைகளை நீக்குவது பற்றி எண்ணுங்கள். ஐ என்னும் (> கை, சை, டை) ஈற்றுமொழியானது பெயர்ச்சொல் ஆக்க துணையாக உள்ளது (ஐ என்பது தொழிற்பெயர், பண்புப்பெயர் விகுதி). வா > வரு > வருகை, செய் > செய்கை, பிரி > பிரிகை, வகு > வகை, பாகை (பா = பிரிவு), மிகு > மிகை. இப்படி வினைச்சொல் வழி வரும் பெயர்ச்சொல் இல்லாமல் உரிச்சொல், பிற பெயர்ச்சொல் முதலியவற்றைக் கொண்டும் மேலும் பெயர்ச்சொற்கள் ஆக்கலாம். மாதந்தோறும் வரும் பிற நிகழ்வுகளுக்கு வேறு சொல் ஆக்கிக்கொள்ள வேண்டும். மாதிகை என்பது பல நல்லறிஞர்கள் ஆண்டுள்ள சொல், இதனை நாம் எடுத்தாளுவது நல்லது. --C.R.Selvakumar 12:51, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
ரவி, கை என்பது ஒரு தமிழ்ச்சொல் விகுதிகளில் ஒன்று.
- செல்வா, இந்த சொல் உருவாக்கத்தை புரிந்து கொள்வதில் எனக்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் தான். பொறுமையுடன் மறுமொழி அளிக்க வேண்டுகிறேன். ஆள் - ஆட்சி - ஆளுகை என்பது போல் மாதம் - மாதிகை என்று சொல் உருவானது சரி. ஆளுகை ஆட்சியை குறிக்குமானால், மாதிகை மாதத்தை குறிக்கும் சரி. ஆனால், இதில் இதழ் எங்கு இருந்து வந்தது? monthly, weekly என்பது மாதந்தோறுமோ வாரந்தோறுமோ நிகழும் ஒன்றை குறிப்பதை போல் மாதிகை என்பதும் மாதந்தோறும் நிகழும் எதையும் குறிப்பிடுவதாக இருந்தால் எளிதில் விளங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால், பொதுவான ஒரு சொல்லை உருவாக்கி, அதை இதழ்களுக்கு மட்டும் பயன்படுத்துவது ஏன்? விக்கிபீடியா படிக்காத ஒரு பயனரிடம் மாதிகை என்று சொன்னால், மாதத்தோடு தொடர்புடைய ஒன்று தான் விளங்கிக்கொள்வாரே தவிர, இதழ்களை தொடர்புபடுத்தி அறிவது மிகக் கடினம். மாதந்தோறும் நிகழும் பிற நிகழ்வுகளுக்கு என்ன விகுதியை பயன்படுத்துவது? இது போல் கிழமை தோறும் வரும் இதழ்கள், இரு கிழமைக்கு ஒரு முறை வரும் இதழ்களுக்கும் சொல் உருவாக்க வேண்டுமா, முடியுமா? கிழமை இதழ் என்று எளிதாக சொல்வது போல் மாத இதழ் என்று சொல்லி விடலாமே? எதற்கு மாதிகை என்று சொல்ல வேண்டும்..மன்னிக்கவும்..இச்சொலின் உருவாக்கத் தேவையை என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. பரவலான புழக்கத்தில் உள்ள மாத இதழ் என்ற சொல்லை விடுத்து புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும் மாதிகை என்ற சொல்லை ஏன் கையாள வேண்டும் என்பது என் வினா. விக்கிபீடியா கட்டுரைகள் அச்சு வடிவிலும் வரக்கூடும். அப்பொழுது, மாதிகை என்ற உள்ளிணைப்பை பின்பற்ற வழியில்லாதவர்கள் எப்படி இச்சொல்லை அறிவது? இயன்ற அளவு எளிமையான சொற்களை பயன்படுத்தலாம் என்பது தான் என் கோரிக்கை. நன்றி.--ரவி 13:26, 20 செப்டெம்பர் 2006 (UTC)
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்யுங்கள். ரேடியம் என்னும் காட்டுரை உரையாடலில், சொற்கள் எவ்வாறு ஆக்கப்படுகின்றன என்பதை சுருக்கமாகக் கூறியுள்ளேன். சொற்கள் வெறும் அடையாளங்கள், குறியீடுகள் மட்டுமே; அவை முழுவதும் விளக்குவன அல்ல. எம்மொழியிலும் சொல்லாக்க மரபுகள் உண்டு அவைகளை அறிய வேண்டும். மதி என்றால் திங்கள், நிலா என்று பொருள். மதி என்பதில் இருந்து மாதம் வந்ததென்றால், அது மதியானது சுற்றி வரும் கால அளவை எப்படி குறிக்கும் என்று ஒருவர் கேட்டால் அவர் சொற்பொருள் மரபுகளை அறியவில்லை என்று பொருள். எல்லாச் சொல்லும் அப்படித்தான், எல்லா மொழிகளிலும் அப்படித்தான். மாதிகை என்றால் அது இதழைக் குறிக்கும் என்பது வழக்கால் நிலைபெரும் மரபு. Monthly என்பது ஏன் மாதம்தோறும் பெறும் சம்பளத்தைக் குறிக்கலாகாது, மாதம்தோறும் நிகழும் பிறவற்றைக் குறிக்கலாகாது? பரவலாக உள்ள சொல் மாத இதழ், திங்களிதழ் முதலியவற்றையும் குறித்துள்ளேன். கட்டுரையின் தலைப்பை வேண்டுமென்றால் மாற்றிக் கொள்ளுங்கள். மாதிகை என்பதை அறவே நீக்க வேண்டுமென்றாலும் நீக்கிக் கொள்ளுங்கள். ஆளுகை வேறு ஆட்சி வேறு மாளுகை வேறு மாட்சி வேறு. மாதிகை என்பதை பல நூல்கள் யாத்த மொழிஞாயிறு என்று போற்றப்படும் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் அவர்கள் ஆண்ட சொல். வேண்டாம் எனில் நீக்கிவிடுங்கள், என்னால் இதற்கு மேல் சொல்லி விளங்க வைப்பது கடினம். மன்னிக்க வேண்டும். --C.R.Selvakumar 14:06, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
- செல்வா, இக்கட்டுரையை நீக்குவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை அவ்வாறு நீக்கினாலும் இப்பேச்சுப் பகுதியானது பேணப்படவேண்டும் இதில் பல விடயங்களை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அத்துடன் பலவிடயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன இவ்வுரையாடல்களைப் பின்னாளில் ஓர் reference ஆக எடுக்கலாம் என்பதால் இவை பேணப்படவேண்டும். --Umapathy 14:44, 20 செப்டெம்பர் 2006 (UTC)
உமாபதி, எனக்கும் இக்கட்டுரையை நீக்குவதிலோ, பெயர் மாற்றம் செய்வதிலோ, ஒரு சிறிதும் விருப்பம் இல்லை. ஆக்க வேண்டிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன, ஆனால் நீக்கத் தேவையில்லாத கட்டுரைகளை, நீக்குவதா வேண்டாமா என்பது பற்றி அதிகம் அலசுவது நேர விரயம் என்பது என் கருத்து. பல பயனுடைய கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், கட்டுரையாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது. மாதிகை என்னும் சொல் யார் யாரால் எங்கெங்கே ஆளப்பட்டுள்ளது என்பதெல்லாமும் சுட்டிக் காட்ட முடியும், ஆனால் இதனால் அளவிறந்த காலம் வீணாவதே எனக்கு வருத்தம் தருகின்றது. நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் (குறுங்கட்டுரைகளாகவாவது) ஆக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன், எனவே கூடிய மட்டிலும், அதிகம் பயன் பெருகாத உரையாடல்களை தவிர்ப்பது நல்லது. ஆனால், எதனை நீக்குவது என்பதெல்லாம் ரவி, சுந்தர், மயூரநாதன் போன்றோர் முடிவு செய்யட்டும். இவ்வகை கட்டுரைகளை நீக்குவது ஒரு சிறிதும் சரியல்ல என்பது என் கருத்து, எனினும், இது பற்றி கருத்தாட நான் விழையவில்லை. --C.R.Selvakumar 15:20, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா