பேயர் நிறுவனம்
வரையறுக்கப்பட்ட பேயர் கூட்டு நிறுவனம் ஜெர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் மருந்தாக்கல், உயிரியல் விஞ்ஞான பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். உலகின் பாரிய மருந்தாக்கல் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் மனித மற்றும் மிருகங்களுக்குத் தேவையான மருந்துகள், வாடிக்கையாளர் சுகாதார பொருட்கள், விவசாய இரசாயன பொருட்கள், உயிரித் தொழில்நுட்ப உற்பத்திகள், மற்றும் உயர்தர பலபடி ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் யூரோ ஸ்டொக்ஸ் 50 எனும் பங்குச்சந்தை சுட்டெண்ணில் அங்கம் வகிக்கிறது.[1] வெர்னர் போமான் இதன் தலைமை நிர்வாகியாக 2016ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறார்.[2]
வகை | கூட்டு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஆகஸ்ட் 1 1863 |
நிறுவனர்(கள்) | பிரெட்ரிச் பேயர் |
தலைமையகம் | லெவர்குசன், ஜெர்மனி |
சேவை வழங்கும் பகுதி | உலகலாவிய சேவை |
முதன்மை நபர்கள் | வெர்னர் போமன் (தலைமை நிர்வாகி) வெர்னர் வென்னிங் |
தொழில்துறை | உயிரியல் விஞ்ஞானம், மருத்துவப் பொருட்கள், இரசாயனம் |
உற்பத்திகள் | மிருக வைத்திய மருந்துகள், மருத்துவப் படிமவியல், பொதுவான மருந்துகள், பெண்களுக்கான மருத்துவப் பொருட்கள், தீங்குயிர்கொல்லி, விதைகள், தாவர உயிரித் தொழில்நுட்பம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் |
வருமானம் | 39.586 பில்லியன் யூரோக்கள் (2018) |
இயக்க வருமானம் | ▼ 3.914 பில்லியன் யூரோக்கள் (2018) |
நிகர வருமானம் | ▼ 1.711 பில்லியன் யூரோக்கள் (2018) |
மொத்தச் சொத்துகள் | 129.454 பில்லியன் யூரோக்கள் (செப்டம்பர் 2018) |
மொத்த பங்குத்தொகை | 50.417 பில்லியன் யூரோக்கள் (செப்டம்பர் 2018) |
பணியாளர் | 110,838 முழுநேர தொழிலாளர்கள் |
இணையத்தளம் | Bayer.com |
1863ம் ஆண்டு பார்மன் நகரில் சாயத் தொழிற்சாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் மற்றும் பிரபலமான மருந்து ஆஸ்பிரின் ஆகும். 1898ல் டையசெட்டல்மோர்பின் மருந்தை ஹெராயின் என வணிக சின்னமாக்கிய இந்நிறுவனம் அம்மருந்தை இருமல் நிவாரணியாக, மோர்பின் மருந்துக்கு மாற்றாக 1910ம் ஆண்டு வரை சந்தைப்படுத்தியது. மேலும் பினோபார்பிட்டல், முதல் நுண்ணுயிர்க்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் 1939 நோபல் பரிசின் மருத்துவத்துறை பேசு பொருளான புரொண்ட்டோசில், நுண்ணுயிக்கொல்லி சிப்ரோ (சிப்ரோபுளொக்சாசின்), கருத்தடை மாத்திரை யாஸ் (ட்ரொஸ்பிரெனொன்) ஆகிய மருந்துகளையும் அறிமுகப்படுத்தியது.
1925ம் ஆண்டில் பேயர் நிறுவனமும் மேலும் ஐந்து இரசாயன உற்பத்தி நிறுவனங்களும் இணைந்து இகே பார்பன் எனும் உலகின் மிகப் பெரிய மருந்தாக்கல் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கின.[3] எனினும் இந்நிறுவனத்தின் நாசிச செயற்பாடுகள், யூதப் படுகொலைகளில் பங்கு வகித்தமை, நாசி அரசியல் கைதிகளை அடிமைத் தொழிலாளிகளாகப் பாவித்தமை போன்ற செயற்பாடுகளின் காரணத்தால் இரண்டாம் உலகப் போரின் பின் இந்நிறுவனத்தை நேச நாடுகள் குழு கைப்பற்றியது.[4][5] 1951ம் ஆண்டு இகே பார்பன் நிறுவனம் அதன் ஆரம்ப ஆறு நிறுவனங்களாகப் பிரிந்து பின் மூன்று நிறுவனங்கள் ஆகியது. பாஸ்ப், பேயர், ஹோச்சஸ்ட் ஆகிய நிறுவனங்களே அவை.[6]
இரண்டாம் உலகப்போரின் பின் குறுகிய காலத்தில் உலகின் மிகப்பெரிய மருந்தாக்கல் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறியதன் மூலம் பேயர் நிறுவனம் மேற்கு ஜெர்மனியின் யுத்தத்தின் பின்னான அதிவேக பொருளாதர வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இந்நிறுவனம் 2016ம் ஆண்டில் சேரிங் நிறுவனத்தையும் 2014ல் மெர்க் அண்ட் கோ நிறுவனத்தை கிளார்ட்டின், கொப்பர்ட்டோன், போன்ற அதன் வகைக் குறிகளோடும், 2018ல் 63 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி மரபணு மாற்றுப்பயிர்த் தொழிலில் முன்னணி வகிக்கும் மொன்சண்ட்டோ நிறுவனத்தையும் தன்னோடு இணைத்தது.[7] பேயரின் ஒரு பகுதியான பேயர் குரொப் சயன்ஸ் நிறுவனம் மரபணு மாற்று பயிர்களையும் தீங்குயிர்கொல்லிகளையும் தயாரிக்கிறது.
தொடக்க வரலாறு
தொகுஆரம்பம்
தொகுபேயர் வணிக நிறுவனம் 1863ம் ஆண்டு ஜெர்மனியின் பார்மன் எனுமிடத்தில் பிரெட்ரிக் பேயர் மற்றும் சாய விற்பன்னர் பிரெட்ரிக் விஸ்கொட் ஆகியோரால் சாயத் தொழிற்சாலையாக முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு பங்குதாரர்களில் பிரெட்ரிக் பேயர் வணிக செயற்பாடுகளை கவனித்தார். அனிலின் மற்றும் பியூசின் ஆகிய இரசாயனங்கள் இத்தொழிற்சாலையின் முக்கிய உற்பத்திப் பொருட்களாக இருந்தன.
1866ல் இத்தொழிற்சாலையின் பெரும்பகுதி மற்றும் தலைமையகம் பார்மன்னிலிருந்து எல்பர்பெல்ட் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இத்தொழிலை ஆரம்பித்தவர்களில் ஒருவரான பிரெட்ரிக் பேயரின் மகனும் வேதியியலாளருமான பிரெட்ரிக் பேயர் ஜூனியர் (1851-1920) 1873ம் ஆண்டு நிறுவனத்தில் இணைந்தார். இவரின் தந்தை 1880ல் இறந்த பின் பங்குச் சந்தையில் இணைந்த இந்நிறுவனம் பார்பென்பப்ரிக்கன் வோர்ம்.பிரீடர்.பேயர் & கோ. வாக பெயர் மாற்றம் பெற்றது.
எல்பர்பெல்ட் நகரில் நிறுவனத்தின் மேலதிக விரிவாக்கல் அசாத்தியமாகவிருந்ததால் ரீன் நதியருகே அமைந்திருந்த வீஸ்டோப் கிராமத்தில் அலிசரின் இரசாயனத் தயாரிப்பாளர்களான லெவர்குஸ் மற்றும் அவரின் மகன்களுக்கு சொந்தமான பகுதிக்கு இந்நிறுவனம் மாற்றப்பட்டது. 1930ம் ஆண்டில் அப்பகுதியில் லெவர்குசன் எனும் நகரம் உருவாக்கப்பட்டதால் பேயர் தலைமையகத்தின் மூல தளமாக அந்நகரம் ஆகியது. பேயரின் சின்னமான பேயர் சிலுவை 1904ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பேயர் எனும் சொல்லின் ஆங்கில ஐந்தெழுத்து வரி வடிவத்தை (BAYER) எழுத்து Yஐ மையமாகக் கொண்டு மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் சிலுவை வடிவத்தில் ஒரு வட்டத்தினுள் வைத்து வரையப்பட்டதே அச்சின்னம் ஆகும். ஒளிரும் பேயர் சிலுவை சின்னம் லெவர்குசனில் ஒரு நில அடையாளமாக உள்ளது.
ஆஸ்பிரின்
தொகுபேயரின் முதல் பெரிய பிரபலமான தயாரிப்பு அசிட்டல்சலிசிலிக் அமிலமாகும். முதன்முதலில் பிரான்சிய வேதியியலாளர் சார்லே பிரெட்ரிக் ஜெராட்டினால் விவரிக்கப்பட்ட இவ்வமிலம் பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படும் வில்லோ மரப்பட்டையிலிருந்து எடுத்த சலிசிலிக் அமிலத்தின் திரிபு ஆகும். ஆஸ்பிரின் எனும் பெயரை இவ்வமிலத்தின் வணிகக்குறியீடாக்கி பேயர் நிறுவனம் 1899ம் ஆண்டு வரை உலகலாவிய ரீதியில் பதிவு செய்து வைத்திருந்தது. எனினும் முதலாம் உலகப் போரின்போது பேயர் நிறுவனத்தின் ஐக்கிய அமெரிக்க நாட்டு சொத்துகளை அந்நாட்டு அரசு கைப்பற்றியதாலும் இவ்வமிலத்தின் உலகலாவிய பயன்பாட்டாலும் பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆஸ்பிரின் எனும் வணிககுறியீட்டை பேயர் நிறுவனம் இழந்தது.
ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் ஆஸ்பிரின் எனும் வணிகக்குறியீடு அனைத்து நிறுவனத் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டாலும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ, கனடா உட்பட 80 க்கும் அதிகமான நாடுகளில் ஆஸ்பிரின் எனும் பெயரைத் தனது வணிக்க் குறியீடாக பேயர் நிறுவனம் பதிவு செய்துள்ள்து. 2011ம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 40,000 தொன் ஆஸ்பிரின் உற்பத்தி செய்யப்பட்டதுடன் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 10-20 பில்லியன் மாத்திரைகள்இதய நோய் மருந்தாக நுகரப்பட்டது. இம்மருந்து உலக சுகாதார அமைப்பினால் முக்கிய மருந்துகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது.[8]
இம்மருந்தின் சூத்திர வளராக்கம் தொடர்பாக பேயர் விஞ்ஞானிகளிடையேயான சர்ச்சை முடிவின்றி தொடர்கிறது. பேயர் வேதியியலாளர் ஆர்தர் ஈக்கெங்குருன் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத ஆஸ்பிரின் மருந்தின் சூத்திரத்தை தானே முதலில் கண்டுபிடித்ததாகவும் ஆஸ்பிரின் எனும் சொல்லை உருவாக்கி அம்மருந்தை முதலில் பரிசோதித்ததாகவும் கூறினார். எனினும் பேயர் அதை மறுத்து மூட்டழற்சி நோயுடைய தன் தந்தைக்கு உதவவே பீலிக்ஸ் ஹோப்மான் இம்மருந்தைக் கண்டுபிடித்ததாக கூறினார். இரு தரப்பிலும் இவ்வாதங்களுக்கான ஆதாரங்கள் உள்ளன. அநேக வரலாற்றாசிரியர்கள் ஆஸ்பிரினைக் கண்டுபிடித்தவரைப் பற்றி கூறும் போது ஹோப்மான், ஈக்கெங்குருன் இருவரையும் குறிப்பிடுகின்றனர்.
ஹெரோயின்
தொகுதற்போது சட்டத்தால் தடை செய்யப்பட்ட, அடிமைப்படுத்தும் மருந்தான ஹெரோயினை (டையசெட்டைல்மோர்பின்) மோர்பினுக்கு மாற்றாக, அடிமையாக்கா இருமல் நிவாரண மருந்து என்றே பேயர் நிறுவனம் 1898க்கும் 1910க்குமிடையில் வணிகக்குறியீடாக்கி சந்தைப்படுத்தியது. பேயர் நிறுவன விஞ்ஞானிகள் ஹெரோயினை முதன்முதலில் தயாரிக்காவிட்டாலும் அம்மருந்தை சந்தைப்படுத்துவதில் பேயர் நிறுவனம் பெருவெற்றி கண்டது. முதலாம் உலகப்போர் வரை ஹெரோயின் எனும் பெயர் பேயர் நிறுவனத்தின் வணிக குறியீடாக இருந்தது.
பீனோபார்பிட்டல்
தொகு1903ம் ஆண்டில் பேயர் நிறுவனம் தூக்க மருந்தான டையர்தில்பார்பிட்டியூரி அமிலத்தைப் பயன்படுத்தும் உரிமையை அதன் கண்டுபிடிப்பாளர்களான எமில் பிஷர் மற்றும் ஜோசப் வொன் மெரின் ஆகியோரிடமிருந்து பெற்றது. 1904 ம் ஆண்டு தொடக்கம் அம்மருந்தை வெரோனல் எனும் பெயரில் தூக்க மருந்தாக பேயர் சந்தைப்படுத்தியது. பேயர் விஞ்ஞானிகளின் தீவிர ஆராய்ச்சியினால் 1911ம் ஆண்டு பீனோபார்பிட்டலும் 1912ம் ஆண்டு அதற்கு எதிர்மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. 1970களில் பீனோபார்பிட்டல் மருந்து வலிப்பு நோய்களுக்கு நிவாரணியாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 2014 வரை இம்மருந்து உலக சுகாதார அமைப்பின் அடிப்படை மருந்துகள் பட்டியலில் இருந்தது.
முதலாம் உலகப் போர்
தொகுமுதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த (1914-1918) காலகட்டத்தின் போது ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்த பேயரின் சின்னம், வணிகக்குறியீடுகள் உட்பட அதன் சொத்துக்கள் அனைத்தையும் அவ்வரசாங்கங்கள் பறிமுதல் செய்தன. கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்த ஸ்ட்டேர்லிங் ட்ரக்ஸ் நிறுவனம் பேயரின் சின்னம், வணிககுறியீடு மற்றும் அதன் சொத்துக்களை கையகப்படுத்தியது. 1994ம் ஆண்டு வரை இவை திருப்பிப் பெறப்படவில்லை.
1916ம் ஆண்டில் பேயர் விஞ்ஞானிகளிகள் ஒட்டுண்ணிகளுக்கெதிராக செயற்படும் சுரமின் எனும் மருந்தைக் கண்டுபிடித்தார்கள். ஜெர்மானின் எனப் பெயரிடப்பட்ட இம்மருந்து இன்றும் விற்பனையாகிறது. வணிகக் காரணங்களுக்காக இதன் செய்முறையை பேயர் நிறுவனம் இரகசியமாக வைத்திருந்தது. எனினும் 1924ல் இச்செய்முறையை பாஸ்ட்டோர் அமைப்பைச் சேர்ந்த எர்னஸ்ட் பூனே வெளியிட்டார். இம்மருந்தும் உலக சுகாதார அமைப்பின் அடிப்படை மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
இகே பார்பன்
தொகுஆராய்ச்சி
தொகு1925ல் ஆரம்பிக்கப்பட்ட இகே பார்பன் எனும் நிறுவனத்தில் பேயர் நிறுவனம் ஆறு பங்கு நிறுவனங்களில் ஒன்றாகவிருந்தது. பாஸ்ப், பேயர், ஹோச்சஸ்ட், அக்பா, கெமிகே பப்ரிக் கிரிஷெய்ம் இலெக்ட்ட்ரோன், கெமிகே பப்ரிக் வோர்ம் வீலர் டர் மியர் ஆகியனவே அந்நிறுவனங்கள் ஆகும். 1930களில் பேயர் நிறுவன நோயியல் மற்றும் நுண்ணங்கியியல் பிரிவின் நிர்வாகி ஜெராட் டொமாக் வேதியியலாளர் பிரிட்ஸ் மிட்ச் மற்றும் ஜோசப் கிளாரர் ஆகியோருடன் இணைந்து முதல் சந்தையில் கிடைக்கக்கூடிய பக்டீரியா எதிர்ப்பு மருந்தான புரொண்ட்டோசில்லைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது. இதற்காக ஜெராட் டொமாக்குக்கு 1939ல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை வென்றார். ஜெர்மனியின் நாசிக் கட்சி ஆட்சி காலத்தில் நோபல் பரிசு வாங்க ஜெர்மானியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஜெராட் தனது நோபல் பரிசை மீளக் கையளிக்குமாறு நாசிக் கட்சியால் வற்புறுத்தப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரும் யூதப் படுகொலைகளும்
தொகுபேயர் நிறுவனத்தின் முன்னால் தலைமை நிர்வாகி ஹெல்க் வேர்மியர் 1995ம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் யூதர்களின் படுகொலையில் பேயர் நிறுவனம் சம்பந்தப்பட்டமைக்காக யூத எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் யூதப் படுகொலைகளிலிருந்து தப்பியவருமான எலி வீசிலிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். பேயர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இகே பார்பன் தனது தொழிற்சாலைகளில் வேலை புரிய அடிமைத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தியது. 1943ம் ஆண்டு வரை இகே பார்பன் தொழிற்சாலைகளில் வேலை செய்த 33000 பேரில் பாதியளவானவர்கள் அடிமைத் தொழிலாளர் ஆவர். இவர்களில் 30000 ஆஷ்விட்ஸ் கைதிகளும் அடங்கியிருந்தனர்.
பேயர் நிறுவன உறுப்பினர், மருத்துவர், மற்றும் எஸ்.எஸ்.பிரிவு தலைவரான எல்முத் வெட்டர் ஆஷ்விட்ஸ், மோத்தசென் முகாம் கைதிகள் மீது ஒரு மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஒரு உணர்வு நீக்கி மருந்துக்கான ஆராய்ச்சிக்கு 150 பெண் ஆஷ்விட்ஸ் கைதிகள் தலைக்கு 170 ஜெர்மானிய பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டார்கள். ஒரு பேயர் நிறுவன ஊழியர் ஆஷ்விட்ஸ் அதிகாரி ருடோல்ப் ஹொஸ்சிடம் "நீங்கள் அனுப்பிய 150 பெண்களும் நல்ல நிலையில் வந்து சேர்ந்தனர். எனினும் ஆராய்ச்சியின் போது பலர் இறந்து விட்டபடியால் எம்மால் ஆராய்ச்சியை மேற்கொளவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மற்றுமொரு 150 பெண்கள் கொண்ட குழுவை அதே விலைக்கு அனுப்புமாறு கேட்கிறேன்." என எழுதியிருந்தார்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் இகே பார்பன் நிறுவனத்தை நேச நாடுகள் குழு கைப்பற்றியது. இந்நிறுவனம் 1951ல் ஆறாகப் பிரிந்து பின் மூன்றாகப் பிரிந்தது. அக்காலகட்டத்தில் பார்பென் பெப்ரிக்கன் பேயர் என்றிருந்த இந்நிறுவனம் 1972ல் பேயர் கூட்டு நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது.
தயாரிப்புகள்
தொகுகண்ணோட்டம்
தொகுபேயர் நிருவனம் முதல் உளப்பிணி பண்பு மாற்ற மருந்தை 1953ம் ஆண்டு ஜேர்மானிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. 1960களில் கருப்பச் சோதனை மருந்தான பிரிமோடசை அறிமுகப்படுத்தியது. எனினும் இமருந்தினால் குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதாக எழுந்த சர்ச்சைகளையடுத்து 1970களின் நடுப்பகுதியில் இம்மருந்து சந்தையிலிருந்து மீளப்பெறப்பட்டது. 1980ல் இம்மருந்து மீதான வழக்கு தீர்ப்பளிக்கப்படாமல் நிறைவடைந்தது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் கட்டுப்பாட்டு நிலையம் இச்சர்சை தொடர்பாக 2014ல் ஆராய்ந்தது.
பேயர் நிறுவனம் 1978ல் மைல்ஸ் லேபோரட்டரி நிறுவனத்தை அதன் துணை நிறுவனங்களான மைல்ஸ் கனடா, கட்டர் லேபோரட்டரி ஆகியவற்றோடு வாங்கியது. இதன்மூலம் மைல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான அல்கா செல்ட்சர், பிளிண்ட்ஸ்ட்டோன் விட்டமின், கட்டர் பூச்சி விரட்டி ஆகியவற்றை கைப்பற்றியது.
1990களின் இறுதியில் மேலும் சில சர்ச்சைகளில் பேயர் நிறுவனம் சிக்கியது. இக்காலகட்டத்தில் பேயர் அறிமுகப்படுத்திய பேகொல் எனும் மருந்தின் பக்கவிளைவால் 52 பேர் உயிரிழந்ததால் 2001ல் அமருந்தை நிறுத்தியது. முக்கியமான அறுவை சிகிச்சைகளில் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் டிரேசிலொல் எனும் இன்னொரு தயாரிப்பு அதிக உயிரிழப்புகளால் 2007ல் நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும் மீண்டும் ஐக்கிய அமெரிக்கா தவிர்த்து ஐரோப்பாவில் இம்மருந்து விற்பனை செய்யப்பட்டது.
அதிகம் விற்பனையாகும் மருத்துவப் பொருட்கள்
தொகுபேயரின் 2014 மொத்த வருமானம் 40.15 பில்லியன் யூரோக்களில் 12.05 பில்லியன் யூரோக்கள் மருத்துவப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்றது. அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகள் சில:
- கோஜனேட்
- சாரெல்ட்டோ
- பெட்டாசேரன்
- யாஸ்மின்/யாஸ் கருத்தடை மாத்திரை
- நெக்சாவர்
- டிரசிலொல்
- சிப்ரோ
- ரெனி
வேளாண்மை
தொகுபேயர் பல்வேறு வகையான பூஞ்சணக் கொல்லி, பூச்சிகொல்லி, களைக்கொல்லி, ஆகியவற்றோடு சில பயிர் வகைகளையும் தயாரிக்கிறது.
நிதி
தொகுபேயர் நிறுவனம் 2017 நிதியாண்டில் மொத்த வருவாயாக 35 பில்லியன் யூரோக்களை உழைத்தது. இதனுள் 7.3 பில்லியன் யூரோக்கள் நிகர வருவாயும் அடங்கும். இது கடந்த நிதியாண்டை விட 25.1% அதிகமாகும். பேயரின் பங்கொன்று 69 யூரோக்கள் பங்குச்சந்தை பெறுமதியாக விர்பனை செய்யப்பட்டது. 2018 நவம்பரில் பேயர் நிறுவனம் 65.4 பில்லியன் யூரோக்களை முதலாக்கம் செய்துள்ளது.
ஆண்டு | மொத்த வருமானம் பில்லியன் யூரோக்களில் |
நிகர வருவாய்
பில்லியன் யூரோக்களில் |
மொத்த சொத்து
பில்லியன் யூரோக்களில் |
ஊழியர்கள் |
---|---|---|---|---|
2013 | 40.157 | 3.189 | 51.317 | 112,360 |
2014 | 42.239 | 3.426 | 70.234 | 118,888 |
2015 | 46.324 | 4.110 | 73.917 | 116,800 |
2016 | 46.769 | 4.531 | 82.238 | 115,200 |
2017 | 35.015 | 7.336 | 75.087 | 99,820 |
பேயர் 04 லெவர்குசன் விளையாட்டு கழகம்
தொகுபேயர் நிறுவனம் தனது விளையாட்டுக் கழகத்தை 1904ம் ஆண்டில் தொடங்கியது. இக்கழகம் முதலில் TuS 04 என்றும் பின் SV பேயர் 04 என்றும் இறுதியாக 1984ல் TSV பேயர் 04 லெவர்குசன் என்றும் பெயரிடப்பட்டது. இக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி மிகவும் பிரசித்தி பெற்றது. கால்பந்தாட்டம் மட்டுமல்லாது வாள்வீச்சு, மெய்வல்லுனர் விளையாட்டுகள், கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கூடைப்பந்தாட்டம் போன்ற வேறு பல விளையாட்டுகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. இக்கழகம் ஜெர்மனியிலுள்ள பெரிய விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாகும்.
அங்கீகாரம் மற்றும் விருதுகள்
தொகுஅக்டோபர் 2008ல் கனேடிய பேயர் பிரிவு மீடியாகுரொப் கனடா நிறுவனத்தாலும் டொரன்ட்டோ ஸ்டார் செய்தி பத்திரிகையாலும் 'கனடாவின் 100 சிறந்த பணி தருநர்களில்' ஒருவராக தெரிவு செய்யப்பட்டது. 2011ல் அமெரிக்க பேயர் நிறுவனத்திற்கு மனித உரிமை பிரச்சார பரப்புரை இயக்கம் ஓரினச்சேர்க்கையாளர்களை சமமாக நடத்தியமைக்காக தனது கூட்டு நிறுவன சமத்துவ சுட்டெண்ணில் 85% மதிப்பெண் வழங்கியது.
உசாத்துணைகள்
தொகு- ↑ யூரோ ஸ்டொக்ஸ் 50 சுட்டெண் போர்ஸ் பிராங்பர்ட் இணையதளம்
- ↑ வெர்னர் பார்மனை f
- ↑ டமென் எழுதிய இகே பார்பன் பற்றிய ஜெர்மானிய மொழி நூல், பக்கம் 195.
- ↑ சட்டம் ஒன்பது
- ↑ நாசிச காலகட்டத்தில் இகே பார்பன், கேம்பிரிட்ஜ் பதிப்பகம், ஆசிரியர் ஹேயஸ், 2001. பக்கம் xxi–xxii
- ↑ நாசிச காலகட்டத்தில் இகே பார்பன், கேம்பிரிட்ஜ் பதிப்பகம், ஆசிரியர் ஹேயஸ், 2001. பக்கம் xxii
- ↑ மொன்சாட்டோ தனது பிரபல பெயரை பேயரிடம் கையளிக்கிறது. த கார்டியன் இணையதளம், ருபெட் நீட், ஜூன் 4 2018.
- ↑ அடிப்படை மருந்துகள் உலக சுகாதார அமைப்பு, அக்டோபர் 2013.