தீங்குயிர்கொல்லி
தீங்குயிர்கொல்லிகள் அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை தீங்குயிர்/பீடைகளையும் களைகளையும் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும்[1][2] தீங்குயிர்கொல்லிகள் என்ற சொல் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி (இவற்றில் பூச்சி வளர்ச்சி கட்டுபடுத்திகள், கரையான்கொல்லிகள் அடங்கும்), புழுக்கொல்லி, மெல்லுடலிக்கொல்லி, மீன்கொல்லி, பறவைக்கொல்லி, கொறிப்பிக்கொல்லி, குச்சுயிரிக்கொல்லி, பூச்சி விரட்டுவன, விலங்கு விரட்டுவன, நுண்ணுயிர்க்கொல்லி, பூஞ்சைக்கொல்லி ஆகியவற்றை அடக்கும்.[3] தீங்குயிர்கொல்லிகளில் 80% மானவை களைகொல்லிகளாகும்.[4] பெரும்பாலான தீங்குயிர்கொல்லிகள் பயிர் பாதுகாப்புக்கானவையே. இவை பொதுவாக பயிரைக் களைகள், பூஞ்சைகள், பூச்சிகள் ஆகியவற்றில் இருந்து காப்பாற்றுகின்றன. இவை வேளாண்மையில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, ஒரு தீங்குயிர்கொல்லி என்பது வேதிப்பொருளாகவோ அல்லது நச்சுயிரி, குச்சுயிரி, பூஞ்சை போன்ற உயிரியாகவோ அமையலாம். இது தீங்குயிரிகளை விலக்கிவைத்தோ தணியச் செய்தோ, கொன்றோ, அதன் செயலூக்கம் நீக்கியோ செயலிழக்கச் செய்யும். தீங்குயிரிகளில் பூச்சிகளும் தாவர நோயீனிகளும் களைகளும் மெல்லுடலிகளும் பறவைகளும் பாலூட்டிகளும் மீன்களும் புழுக்களும் வலயப் புழுக்களும் நுண்ணுயிரிகளும் அடங்கும். இவை பொருளை சிதைக்கலாம் அல்லது தொல்லைதரலாம் அல்லது நோயைப் பரப்பலாம் அல்லது நோயீனிகளைப் பரப்பலாம். இம்மேம்பாடுகளைத் தவிர தீங்குயிரிகளால் தீங்குகளும் ஏற்படுகின்றன. அவை சுற்றுச்சூழல் உயிரினங்களுக்கும் மாந்தருக்கும் நச்சூட்டி விடுகின்றன.
வரையறைதொகு
தீங்குயிர்க்கொல்லிவகை | இலக்கு தீங்குயிர் குழு |
---|---|
பாசிக்கொல்லி | பாசி |
பறவைக்கொல்லி | பறவை |
குச்சுயிரிக்கொல்லி | குச்சுயிரி |
பூஞ்சைக்கொல்லி | பூஞ்சை , oomycete |
களைக்கொல்லி | தாவரக் களை |
பூச்சிக்கொல்லி | பூச்சி |
பேன்கொல்லி | பேன் |
மெல்லுடலிக்கொல்லி | நத்தை |
புழுக்கொல்லி | புழு |
கொறிப்பிக்கொல்லி | கொறிப்பன |
கூழையுயிர்க்கொல்லி | பாசி, குச்சுயிரி, பூஞ்சை, கூழைப்பாசி |
நச்சுயிரிக்கொல்லி | நச்சுயிரி |
ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு பீடைகொல்லிகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
மனித உணவு, விலங்கு உணவு, ஏனைய பண்ணை விளைபொருள்கள் ( வேளாண்பொருட்கள், மரம், மரப்பொருட்கள்) போன்றவற்றின் விளைவிப்பு, பதப்படுத்துதல், தேக்கல், இடமாற்றம் அல்லது விற்பனையில் குறுக்கிடும் தேவையற்ற தாவர, விலங்கு இனங்கள் உட்பட்ட அனைத்துப் பீடைகளையும் தடைசெய்யும், அழிக்கும், விலகச் செய்யும் அல்லது கட்டுப்படுத்துவதோடு அத்துடன் விலங்குகளின் உள்ளும் புறமும் வாழும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் அனைத்துப் பொருட்களும், கலவைகளும் பீடைகொல்லிகளாகும். இவை தாவர வளர்ச்சிக் கட்டுபடுத்திகளையும் உள்ளடக்கும். தாவர வளர்ச்சிக் கட்டுபடுத்திகளில் பழம் உதிராமல் காப்பன, இலையுதிர்ப்பன, உலர்த்துவன ஆகியனவும் அடங்கும்.[5].[5]
வகைபாடுதொகு
தீங்குயிரிகளை இலக்கு உயிரிகளை வைத்து வகைப்படுத்தலாம் ( எ.கா., களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், கொறிப்பிக் கொல்லிகள், பாசிக் கொல்லிகள் போன்றன).[6] வேதியியல் கட்டமைப்பைச் சார்ந்தும் இவற்றைப் பிரிக்கலாம். (எ.கா., கனிம,கரிம, தொகுப்புவகை அல்லது உயிரினவகைத் தீங்குயிர்கொல்லிகள்)[7][7] உயிரித் தீங்குயிர்கொல்லிகளில் நுண்ணுயிரிக்கொல்லிகளும் உயிர்வேதித் தீங்குயிர்கொல்லிகளும் அடங்கும்.[8] தாவரத் தீங்குயிர்கொல்லிகள் அல்லது தாவரவகைக் கொல்லிகள் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பைரித்ராயிடுகள், உரோட்டெனாயிடுகள், நிக்கோட்டினாயிடுகள், இசுட்டிரைக்னைன்கள், இசுசில்லிரோசைடுகள் ஆகியவை உள்ளடங்கும்.[9]:15
பல தீங்குயிர்கொல்லிகளை வேதிக் குடும்பங்களாகப் பிரிக்கலாம். பெயர்பெற்ற பூச்சிக் கொல்லிகள் கரிமக் குளோரின்களாகவும், கரிமப் பாசுவேற்றுகளாகவும் (கரிமப் பாசுபேட்டுகளாகவும்) கார்பமேட்டுகளாகவும் உள்ளன. கரிமக் குளோரின் நீரகக் கரிமங்களை (எ.கg., டிடீட்டி) மேலும் இருகுளோரோ இரு பீனைல் ஈத்தேன்கள், சைளோடயேன் சேர்மங்கள், பிற சார்புள்ள சேர்மங்கள் எனப் பிரிக்கலாம். இவை நரம்பில் சோடியம்/பொட்டாசியம் சமனைக் குலைத்துச் செயலாற்றுகின்றன. இது நரம்பைத் தொடர்ந்து தகவல் செலுத்தும்படிக் கட்டாயப்படுத்துகிறது.ஐவற்றின் நச்சுத் தன்மை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவை தொடர்ந்து வினைபுரிவதாலும் உயிரியல் திரட்சியால் பெருக வாய்ப்புள்ளதாலும் பல நிலைகளில் பிரித்து ஆளப்படுகின்றன.[9]:239–240 கரிமப் பாசுவேற்றுகளும் கார்பமேட்டுகளும் பேரளவில் கரிமக்குளோரின்களுக்குப் பதிலியாக அமிகின்றன. இந்த இரண்டுமே அசெட்டைல்கோலினெசுட்டெரேசு நொதியின் செயல்பாட்டை மட்டுபடுத்தி நரம்புத்தூண்டல்களைத்தொடர்ந்து, அசெட்டைல்கோலைன்வழி பரிமாற்றுகிறது. இதனால், உடல் நலிவும் பக்கவாதமும் உருவாகின்றன. கரிமப் பாசுவேற்றுகள் முதுகெலும்பிகளூக்கு நஞ்சாலமைவதால் மாற்றாக குறைவான நச்சுத் தன்மையுள்ளகார்பமேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.[9]:136–137 தயோகார்பமேட்டும் இருதயோகார்பமேட்டுகளும் கார்பமேட்டுகளின் உள்வகைகளாகும். பெயர்பெற்ற களைக்கொல்லிக் குடும்பங்களாக பீனாக்சி, பென்சாயிக் அமிலவகைகளும் (எ.கா. 2,4-D),டிரையாசைன்களும் (எ.கா., அட்டிரையாசைன்), யூரியாக்களும் (எ.கா., டையூரோன்), குளோரோஅசெட்டிலைடுகளும் (எ.கா., அலாக்குளோர்) அமைகின்றன. பீனாக்சி சேர்மங்கள் புற்களைத் தாக்காமல் பல இலைக்களைகளைத் தெரிவு செய்து கொல்கின்றன. பீனாக்சியும் பென்சாயிக் அமிலமும் தாவர வளர்ச்சி இசைமங்கல் போலச் செயல்பட்டு, இயல்பற்ர முறையில் தாவர உயிர்க்கலங்களைப் பிரித்து ஊட்டச் செலுத்த அமைப்பைச் சிதைக்கின்றன.[9]:300 டிரையாசைன்கள் ஒளிச்சேர்க்கையுடன் இடைவினைI புரிகின்றன.[9]:335 பல வழக்கில் உள்ள தீங்குயிர்கொல்லிகள் இந்தக் குடும்பங்களில் அமைவதில்லை (எ.கா., கிளைப்போசேட்).
மேற்கோள்கள்தொகு
- ↑ US Environmental (July 24, 2007), What is a pesticide? epa.gov. Retrieved on September 15, 2007.
- ↑ "Basic Information about Pesticide Ingredients". US Environmental Protection Agency (ஆங்கிலம்). Apr 2, 2018. Dec 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Pest Management". National Pesticide Applicator Certification Core Manual (2nd ). Washington: National Association of State Departments of Agriculture Research Foundation. 2014. Archived from the original on 2019-12-10. https://www.nasda.org/foundation/pesticide-applicator-certification-and-training. பார்த்த நாள்: 2019-11-20.
- ↑ "Pesticides in Our Food System". Food Print. GRACE Communications. 26 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 5.0 5.1 "Definitions for the Purposes of the Codex Alimentarius". Agriculture and Cnsumer Protection Department. FAO. சூன் 14, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Gilden RC, Huffling K, Sattler B 2010 103–10
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 7.0 7.1 "Educational and Informational Strategies to Reduce Pesticide Risks". Preventive Medicine 26 (2): 191–200. 1997. doi:10.1006/pmed.1996.0122. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7435. பப்மெட்:9085387.
- ↑ "Types of Pesticide Ingredients". US Environmental Protection Agency (ஆங்கிலம்). Jan 3, 2017. Dec 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 Pesticide Profiles: Toxicity, Environmental Impact, and Fate (1st ). Boca Raton: CRC. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1566701907. இணையக் கணினி நூலக மையம்:35262311. https://www.crcpress.com/Pesticide-Profiles-Toxicity-Environmental-Impact-and-Fate/Kamrin/p/book/9781566701907.