முதன்மை பட்டியைத் திறக்கவும்

களைக்கொல்லி (Herbicide) தேவையற்ற தாவரங்களை அழிப்பதற்குப் பயன்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். எனினும் களைக்கொல்லிகள், தேவையான பயிர் வகைகளுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதையும் ஏற்படுத்துவது இல்லை. சில களைக்கொல்லிகள், களைகளின் வளர்ச்சியைப் பாதிப்பதன்மூலம் செயல்படுகின்றன. இவை பொதுவாகத் தாவர வளரூக்கிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. தரிசு நிலங்களைச் சுத்தப்படுத்துவதற்குப் பயன்படும் களைக்கொல்லிகள் குறிப்பிட்ட தாவரங்களை மட்டுமன்றி அதன் தொடுகைக்கு உட்படும் எல்லாத் தாவரங்களையுமே அழித்து விடுகின்றன. இவ்வாறான களைக்கொல்லிகள் நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள் போன்றவற்றின் பராமரிப்புக்காக முழுமையான தாவரவளர்ச்சிக் கட்டுப்பாடு தேவையான இடங்களிலும் பயன்படுகின்றன. சில தாவரங்கள் இயற்கையாகவே களைக்கொல்லிகளைக் கொண்டுள்ளன. வேளாண்மைத் துறையிலும், புல்தரை மேலாண்மையிலும் களைக்கொல்லிகள் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பொதுவாகத் தேவையற்ற களைகளை மட்டுமே அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறுதொகு

களைக்கொல்லிகள் பரவலான பயன்பாட்டுக்கு வருமுன், வளர்ப்புமுறைக் கட்டுப்பாடுகளே பயன்பாட்டில் இருந்தன. இவை மண்ணின் பிஎச் (pH) அளவு, உப்புத்தன்மை, வளமைநிலை என்பவற்றை மாற்றுதல், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. பொறிமுறைக் கட்டுப்பாடுகளும் களைகளை அகற்றுவதற்கு இன்றும் பயன்படுகின்றன.

பரவலாகப் பயன்பட்ட முதல் களைக்கொல்லி 2,4-டைகுளோரோபீனாக்சியசிட்டிக் அமிலம் ஆகும். இப்பெயர் பொதுவாக 2,4-D எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது. முதலில் ஷெர்வின்-வில்லியம்ஸ் பெயின்ற் கம்பனியினால் விற்பனைக்கு விடப்பட்ட இது, 1940களில் அதிகமான பயன்பாட்டில் இருந்தது. இலகுவாகவும், மலிவாகவும் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்த இது, பெரும்பாலான அகன்ற இலைத் தாவரங்களை அழித்ததுடன், புல்வகைகளை பாதிப்புக்கு உட்படுத்தவில்லை. எனினும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டபோது சோளம், தானியங்கள் போன்ற பயிர்களையும் அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் பாதித்தது. இதன் குறைந்த விலை காரணமாக இன்றும் இது பயன்பாட்டில் உள்ளதுடன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. தற்காலக் களைக்கொல்லிச் சேர்க்கை முறைகள், மும்மெதைலமைன் போன்ற அமைன் உப்புக்களையோ, தாய்ச் சேர்வையின் ஏதாவதொரு எசுத்தரையோ பயன்படுத்துகின்றன. இவற்றை அமிலங்களைவிட இலகுவாகக் கையாள முடியும்.

1950 களில், ஆட்ராசைன் போன்ற மூவசைன் குடும்பக் களைக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை நிலத்தடி நீர் வளங்களை மாசடையச் செய்வது தொடர்பில் பரவலான கவலையை ஏற்படுத்தின. நடுநிலைக்கு மேலான பிஎச் அளவு கொண்ட மண்ணில், இவற்றைப் பயன்படுத்தும்போது, பல வாரங்களுக்கு ஆட்ராசைன் சேர்வை உடையாமலேயே இருக்கும். கார நிலைமைகளில் ஆட்ராசைன் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீருடன் கலந்து அதை மாசடையச் செய்கின்றது.

1974 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளைபோசேட்டு வகைக் களைக்கொல்லிகள் தெரிந்தழியாக் களைக் கட்டுப்பாடுத் தேவைகளுக்கே பயன்பட்டது. பின்னர், இதற்கு எதிரான எதிர்ப்பாற்றல் கொண்ட பயிர் வகைகள் உருவாக்கப்பட்டதனால் இன்று இது ஒரு முக்கியமான தெரிந்தழிக்கும் களைக்கொல்லியாகப் பயன்படுகின்றது.

வேளாண் துறையில் பயன்படும் பல நவீன களைக்கொல்லிகள் குறுகிய காலத்துள் அழிந்துவிடக் கூடியனவாகவே உருவாக்கப்படுகின்றன. இதனால் இக் களைக்கொல்லிகளினால் பாதிப்புக்கு உள்ளாகும் தாவரங்களையும் பின்னொரு காலத்தில் அதே நிலத்தில் பயிர் செய்யும் வாய்ப்பு உள்ளது. எனினும் இத்தகைய களைக்கொல்லிகள் பயிர்களுக்கு அதன் பருவகாலம் முழுதும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறிவிடும் சாத்தியமும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களைக்கொல்லி&oldid=2741835" இருந்து மீள்விக்கப்பட்டது