பொய்க் கருப்பம்

பொய்க் கருப்பம் அல்லது பொய்க் கர்ப்பம் (false pregnancy) என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு பெண் விலங்கில் (மனிதரிலோ அல்லது வேறு முலையூட்டிகளிலோ) கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும். பொதுவாக இது நாய், எலி போன்ற விலங்குகளிலேயே அதிகமாக இருக்கிறது. மனிதர்களில் இந்த பொய்க்கர்ப்ப நிலையானது மிகக் குறைந்த அளவிலும், பொதுவாக உளவியல் அளவிலான தாக்கமே இதற்குக் காரணமாகவும் அமைகின்றது.[1]

இந்நிலை ஏற்பட்டிருக்கும் பெண் தான் கருப்பம் அடைந்திருப்பதாக நம்புவதுடன், அவருடைய உடலில் கர்ப்பகால அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கும். பொதுவாக உடலின் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இயக்குநீர்களின் (ஹோர்மோன்கள்) அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே கருப்பம் தொடர்பான உடல் சார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.

இது பெரும்பாலும் மாதவிலக்கை நெருங்கிக் கொண்டிருக்கம் பெண்களிலோ அல்லது குழந்தைப் பேறு வேண்டி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களிலோ ஏற்படும். இப்பெண்களுள் பெரும்பான்மையானோர் மன நோய்களாலோ அல்லது நாளமில்லாச் சுரப்பி நோய்களாலோ பாதிக்கப்பட்டிருப்பர்.

அறிகுறிகள்

தொகு

இந்நிலையிலுள்ள பெண்கள் கருவுற்றதற்கான எல்லா வகை அறிகுறிகளுடனும் வருவர். அதனால் அவர்கள் சில சமயங்களில் கருவுற்றிருப்பதாகவே தவறாக அடையாளம் காணப்படுவதுமுண்டு. ஒவ்வொரு மாதமும் வழமையாக ஏற்படும் மாதவிடாய் இடை நிறுத்தம், காலைநேர குமட்டல், முலைகள் மென்மையடைதல், உடல் நிறை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வயிற்றில் இயல்புக்கு மாறாக அதிகக் கொழுப்பு படிவதாலோ அல்லது வயிற்றுப் பொருமலினாலோ வயிறு பெருத்திருக்கும். இப்பெண்கள் வயிற்றுள் குழந்தை அசைவது (quickening) போலக் கற்பனையும் செய்து கொள்வர். இந்நிலை ஏற்பட்டவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு போலிப் பிரசவ வலி (pseudo labour) ஏற்பட்டு மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக வரவும் செய்வர்.

காரணங்கள்

தொகு

இந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால் எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது.[2] இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கருவுறுவதை அளவுகடந்த ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ அல்லது கருப்பம் தொடர்பான அளவுகடந்த பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறியப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் தெரியத் தொடங்கி விடுகிறது. கர்ப்பத்தை பிரதிபலிக்கும் உடல் காரணங்கள் தவறான கர்ப்பத்தின் நம்பிக்கைக்கு பங்களிக்கும். வயிற்று நீர்க்கட்டிகள் அல்லது கட்டிகள் போன்ற வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும் நிலைகள் மற்றும் மாதவிடாய் இழப்பை ஏற்படுத்தும் நிலைமைகள் ஆகியவை இதில் அடங்கும். சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பங்களிப்பாளர் புரோலாக்டின் என்ற ஹார்மோனில் ஒரு உயரமாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில், தவறான கர்ப்பம் ஒரு தூய்மையான, மனம்-உடல் நிகழ்வுகளாக இருக்கலாம்.

நோயறிதல்

தொகு

பொதுவாக ஒரு பெண்ணில் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மேற்கொள்ளும் குருதி, சிறுநீர் சோதனை மூலம்,[3] குறிப்பிட்ட பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். ஒரு முட்டையானது விந்தினால் கருக்கட்டப்பட்டு, கர்ப்பப்பையினுள் பதிந்து 6 நாட்களில் மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) என்னும் இயக்குநீர் குருதியில் அல்லது சிறுநீரில் கண்டறியப்படலாம். இந்த இயக்குநீரானது இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பான அளவில் காணப்படுவதுடன் 8 கிழமைகளில் தனது மிக உயர்ந்த அளவில் காணப்படும்.

மருத்துவம்

தொகு

மருத்துவர் சோதனை செய்து கருவுற்றதை உறுதி செய்யும் போது நோயும் மறைந்து விடும். சில நேரங்களில் மயக்க மருந்து கொடுத்து நோயுற்றவரைச் சோதிக்கும் போது வயிறு பழைய நிலைக்குத் திரும்பி விடும்.

பிற விலங்குகளில்

தொகு

மனிதர்களில் பொய்க்கருப்பம் என அழைக்கப்படும் இது பிற விலங்குகளில் போலிச்சினை என அழைக்கப்படுகிறது. நாய், பூனை, எலி போன்ற பாலூட்டிகள் முடையடித்த (estrus) பின் மலட்டு (infertile) ஆணுடன் உடலுறவு கொள்ளுமாயின் கருவுறுதல் நடைபெறாது. ஆனாலும் புரோஜெஸ்டிரான் (progesterone) சுரப்பு தொடர்வதால் போலிப்பிரசவ நிலை ஏற்படும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

அடிக்குறிப்புக்கள்

தொகு
  1. False Pregnancy In Women பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2010-01-19
  2. AJ Giannini, HR Black. Psychiatric,Psychogenic and Somatopsychic Disorders Handbook. Garden City, NY. Medical Examination Publishing,1978. Pp.227-228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87488-596-5.
  3. Pregnancy Tests பரணிடப்பட்டது 2010-08-18 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2010-01-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்க்_கருப்பம்&oldid=3223032" இலிருந்து மீள்விக்கப்பட்டது