மங்கோலியர்களின் சார்சியா மீதான படையெடுப்பு
மங்கோலியர்களின் சார்சியா மீதான படையெடுப்பானது 13ஆம் நூற்றாண்டு நடைபெற்றது. அந்நேரத்தில் சார்சியா இராச்சியமானது சார்சியா, ஆர்மீனியா, மற்றும் பெரும்பாலான காக்கேசியாவை உள்ளடக்கியிருந்தது. மங்கோலிய பேரரசானது முதன் முதலாக காக்கேசியாவில் 1220ஆம் ஆண்டு தோன்றியது. குவாரசமியப் பேரரசின் அழிவின்போது சுபுதை மற்றும் செபே ஆகியோர் குவாரசமியாவின் இரண்டாம் முகமதுவை துரத்தினர். அத்துரத்தலின்போது அவர்கள் ஒன்றிணைந்த சார்சிய மற்றும் ஆர்மீனிய இராணுவங்களை தோற்கடித்தனர்.[1] பிறகு கீவ ருஸ் மீது படையெடுக்க வடக்கு நோக்கி சென்றனர்.
காக்கேசியா மற்றும் கிழக்கு அனத்தோலியா மீதான முழுமையான மங்கோலியப் படையெடுப்பானது 1236ஆம் ஆண்டு தொடங்கியது. சார்சியா இராச்சியம், ரும் சுல்தானகம், மற்றும் திரேபிசோந்த் பேரரசு ஆகியவை அடிபணிய வைக்கப்பட்டன. ஆர்மீனிய இராச்சியமான சிலிசியா மற்றும் பிற சிலுவைப்போர் அரசுகள் தாமாக முன்வந்து அடிபணிந்தன. அசாசின்கள் அழிக்கப்பட்டனர். காக்கேசியாவில் மங்கோலிய ஆட்சியானது 1330களின் பிற்பகுதி வரை நீடித்தது.[2] அந்நேரத்தின் போது சார்சியாவின் ஐந்தாம் ஜார்ஜ், சார்சியா இராச்சியத்தை குறுகிய காலத்திற்கு மீண்டும் நிறுவினார். எனினும் சார்சியா மீதான தைமூரின் படையெடுப்பால் அது இறுதியாக சிதறுண்டது.