மண்டைதீவு
9°36′14″N 79°59′11″E / 9.60389°N 79.98639°E மண்டைதீவு (Mandathivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவாகும்.[1] யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடாநாட்டில் உள்ள 8 தீவுகளில் (ஏழு தீவு என்பது தவறானது) ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.
மண்டைதீவு | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9°36′14″N 79°59′11″E / 9.603935°N 79.986254°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
கிராம சேவையாளர் பிரிவு, : ஜே / 08 |
மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் இங்குள்ள கத்தோலிக்கர்களின் வணக்கத்தலமாகும். மண்டைதீவின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், போர்க்காலத்தில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. இதனால் இங்கு வழிபாடும் தடைப்பட்டிருந்தது. வருடந்தோறும் ஆனி மாதம் இத் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மண்டைதீவு சைவ மக்களுடைய ஆலயமாக திருவெண்காடு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேர் திருவிழா போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேர் திருவிழா, சூரன் போர் போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
மிக அழகிய கடற்கரைகளும் செல்வச்செழிப்பான வயல் நிலங்களையும் கம நிலங்களையும் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவு செய்த மக்களையும் கொண்டிருந்த மண்டைதீவு போர்ச்சூழல் காரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி கைமாறிக் கொண்டேயிருந்தது. யாழ் நகருக்கும் கடலுக்கும் நடுவே அமைந்திருந்ததினால் போர்க்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மண்டைதீவு இருந்தது. கடும் வெய்யில் மற்றும் வறட்சியான காலநிலை இருந்தாலும், கல்விச் செல்வம் நிறைந்த குடிமக்களைக் கொண்டிருந்தது. மண்டைதீவு மக்கள் ஆசிரியத்தொழிலிலும் குறிப்பிட்ட வியாபாரத்திலும் சிறந்து விளங்கினர். எனினும் பிற்காலத்தில் மக்கள் பல பகுதிகளுக்கும் பரவிச்சென்றபடியால் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.
மண்டைதீவில் 3 பாடசாலைகள் இருக்கின்றன. மண்டைதீவு மகாவித்தியாயலம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய பாடசாலையாகும். மண்டைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் கார்த்திகேய வித்தியாசாலையும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.
மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மட்டும் நன்னீர்க் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவதே இதற்கான காரணமாகும்.
மண்டைதீவில் மூலிகைகள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் சமாதான சூழ்நிலை நிலவிய முன்னைய காலங்களில் யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இங்கு வந்து தாவரவியல் தொடர்பான ஆராய்சசிகளை மேற்கொள்வதுண்டு.
மண்டைதீவுப் படுகொலைகள் பெரிய அளவில் இராணுவத்தால் படுகொலைகள் 2 தடவைகள் நடந்துள்ளன. இதில் ஒன்று 1986ம் ஆண்டு ஆனி மாதம் பத்தாம் திகதி நடைபெற்றது.
கிராம சேவையாளர் பிரிவு, : ஜே / 08
வழிபாட்டிடங்கள்
தொகு- திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம்
- சிறுப்புலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம்
- சிறுப்புலம் ஆலடி கம்பளி வைரவர் ஆலயம்
- மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயம்
- முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
- வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயம்
- வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலயம்
- மண்டைதீவு தெற்கு திடுதிடுக்கை ஞானவைரவர் ஆலயம்
- மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலயம்
- மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலயம்
- மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயம்
- மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயம்
- மண்டைதீவு தோமையார் ஆலயம்
- மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம்
- மண்டைதீவு புனித யாகப்பர் தேவாலயம்
பாடசாலைகள்
தொகு- மண்டைதீவு மகா வித்தியாலயம்
- மண்டைதீவு றோ.க. வித்தியாலயம்
- மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம்
துணை நூல்கள்
தொகு- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். தமிழர் செந்தாமரை, ரொறன்ரோ
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. குமரன் புத்தக நிலையம்.
வெளி இணைப்புகள்
தொகு- மண்டைதீவு ஒளிப்படங்கள் பரணிடப்பட்டது 2014-06-11 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்) (ஆங்கில மொழியில்)
- Muhamalai overrun, battle on Mandaithivu
- Manditivu Massacre - http://tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=1
- [Mandaitivu - http://www.mandaitivu.com பரணிடப்பட்டது 2017-05-28 at the வந்தவழி இயந்திரம்]
- ↑ "Neṭun-tīvu, Puṅkuṭu-tīvu, Nayiṉā-tīvu, Eḻuvai-tīvu, Maṇṭai-tīvu". TamilNet. July 15, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22728.