மதங்க சூளாமணி

மதங்க சூளாமணி என்பது முத்தமிழில் ஒன்றாகிய நாடகத் தமிழுக்கு என எழுந்த ஒரு நூலாகும். தமிழ்க் காப்பியங்களுள் முன்னணியில் வைத்து எண்ணத்தக்க சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட தகவல்களையும், சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் காணும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு 1926 ஆம் ஆண்டில், இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த சுவாமி விபுலானந்தர் இந்நூலினை எழுதினார்.

பின்னணி தொகு

1924 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23வது ஆண்டு விழா பாண்டித்துரைத் தேவரின் மாளிகையில் இடம்பெற்ற போது, விபுலாநந்தர் நிகழ்த்திய உரையே விரிவாக செந்தமிழ் இதழில் 1924 சூலை முதல் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டு வந்தது. அச்சங்கத்தினராலேயே மதங்க சூளாமணி என்ற இந்நூல் 1926 ஆம் ஆண்டில் அச்சில் வெளியிடப்பட்டது.[1]

நூல் தொகு

சேக்சுப்பியரின் அடியொற்றி, நாடகப் பாத்திரங்கள், உரையாடல்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து விபுலாநந்தர் இந்நூலில் தந்திருக்கிறார்.

மதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. உறுப்பியல் 2. எடுத்துக்காட்டியல். 3. ஒழிபியல்

உறுப்பியல் தொகு

உறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.

இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது[2].

எடுத்துக்காட்டியல் தொகு

இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் 12 நாடகங்கள் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை மகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலையாகிய ஒன்பது சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்[2].

இந்தப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விபரமாகக் காட்டிச் செல்லும் அவர் சிலவற்றின் கதைகளை மாத்திரமே கூறிச் செல்கிறார்.

ஒழிபியல் தொகு

ஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தனஞ்சயனார் பரத நூல், நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக்கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன[2].

பதிப்புகள் தொகு

  1. முதல் பதிப்பு: மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலையிற் பதிப்பிக்கப்பட்டு 1926 ஆம் ஆண்டில் செந்தமிழ்ப்பிரசுரத்தினரால் வெளியிடப்பட்டது.
  2. இரண்டாம் பதிப்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் பதிப்பிக்கப்பட்டு இலங்கை, பிரதேச அபிவிருத்தி அமைச்சினால் ஜூலை 19, 1987 இல் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. இரகுபரன், க. இ. (பெப்ரவரி 2011). "மதங்க சூளாமணி". இந்துக்கலைக்களஞ்சியம் XI. இலங்கை: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். 84-85. 
  2. 2.0 2.1 2.2 சுவாமி விபுலாநந்தர் - காலமும் கருத்தும், சி. மௌனகுரு, 1993, மட்டக்களப்பு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதங்க_சூளாமணி&oldid=1909978" இலிருந்து மீள்விக்கப்பட்டது