மப்பேடு சிங்கீசுவரர் கோயில்
சிங்கீசுவரர் கோயில் என்பது ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சிங்கீசுவரர் மற்றும் தாயார் புஷ்பகுஜாம்பாள் ஆவர்.
மப்பேடு சிங்கீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°01′49″N 79°51′30″E / 13.0303°N 79.8584°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் |
அமைவிடம்: | மப்பேடு |
சட்டமன்றத் தொகுதி: | திருவள்ளூர் |
மக்களவைத் தொகுதி: | திருவள்ளூர் |
ஏற்றம்: | 84.18 m (276 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சிங்கீசுவரர் |
தாயார்: | புஷ்பகுஜாம்பாள் |
குளம்: | சுவேத பத்ம புஷ்கரணி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாசி மாத பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி |
உற்சவர்: | சிங்கீசுவரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: | உள்ளன |
வரலாறு | |
கட்டிய நாள்: | கி. பி. 976ஆம் ஆண்டு |
அமைத்தவர்: | ஆதித்த கரிகால் சோழன் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 84.18 மீட்டர்கள் (276.2 அடி) உயரத்தில் (13°01′49″N 79°51′30″E / 13.0303°N 79.8584°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் மப்பேடு புறநகர்ப் பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.
பூந்தமல்லியிலிருந்து, சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் சுமார் 20 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில், ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் திருத்தலமாகக் கருதப்படுகிறது.[1]
உருவாக்கம்
தொகுஇராஜராஜ சோழனின் சகோதரர் ஆதித்த கரிகால் சோழன் இக்கோயிலைக் கட்டினார்.
திருமலை நாயக்க மன்னர் காலத்தில் அவருடைய அலுவலராக இருந்தவர் காளத்தியப்ப முதலியார். காளத்தியப்ப முதலியாரின் மகன் அரியநாத முதலியார் திருமலை நாயக்க மன்னரின் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்க மன்னரின் முக்கிய அலுவலராக, தளவாய் பொறுப்பில் இருந்தார். இவர் பிறந்த ஊர் மெய்ப்பேடு என்ற மப்பேடு ஆகும். ஆகவே, தன் பிறந்த ஊரான மப்பேடுவில் அமைந்துள்ள இக்கோயிலின் இராஜ கோபுரத்தை எழுப்பியும், கோயிலிலுள்ள வீரபாலீசுவரர் சன்னதியைப் புதுப்பித்தும் திருப்பணிகள் நடைபெறச் செய்தார்.[2]
புராண முக்கியத்துவங்கள்
தொகுதிருப்பாற்கடலைக் கடைந்து தேவர்கள் பெற்ற அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுக்க, திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அவர்களுடன் இருந்த இரண்டு அசுரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை வதம் செய்தார். மோகினி அவதாரம் கொண்ட அவர் மீண்டும் அவருடைய உண்மையான வடிவம் பெற, இத்தலமான மப்பேடு பகுதியில், சிவபெருமானை வணங்கி வேண்டினார். அதனாலேயே இத்திருத்தலம் 'மெய்ப்பேடு' (மெய் - உண்மை; பேடு - வடிவம்) என்ற பெயரைக் கொண்டதாகவும், அதன் பின்னர் காலப்போக்கில் பெயர் மருவி 'மப்பேடு' என்று வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.[3]
இராமாயண காலத்தில், அனுமன் சீதையைத் தேடி வழி தெரியாமல் இத்திருத்தலம் வந்து, ஒரு சந்தியா காலத்தில் இங்கு வீணையில் அமிர்தவர்ஷினி இராகம் இசைத்ததாகவும், அதைக் கேட்டு இங்கு எழுந்தருளிய சிங்கீசுவரர் என்று வடிவம் கொண்ட சிவன், அவருக்கு
இலங்கை செல்லும்படி வழி சொல்லியதாகவும் கூறப்படுகிறது.[4]
சிவன் தன் பஞ்ச சபை தலங்களில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த நர்த்தனம் ஆடும் போது சிங்கி என்ற பெயர் கொண்ட நந்தி தேவர் மிருதங்கம் வாசித்தார். மிருதங்கம் வாசிக்கும் தொழிலின் மீதிருந்த ஈடுபாட்டால் நந்தி தேவர் கண்மூடி அமர்ந்து வாசித்ததால், அவரால் சிவனின் ஆனந்த நர்த்தனத்தை அனுபவிக்க முடியாமல் போனது. எனவே, நந்தி தேவர் சிவனிடம் தன் நிலையை எடுத்துக் கூறி, சிவனின் நர்த்தனத்தைக் காண வேண்டுகோள் விடுத்தார். சிவனும் மெய்ப்பேடு என்ற இப்போதைய மப்பேடு திருத்தலத்தில் அவருக்காக மீண்டும் ஆனந்த நர்த்தனம் ஆடி, அவருக்கு அருளினார். சிங்கி என்ற நந்திக்கு அருளியதால் சிங்கீசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.[5]
இதர தெய்வங்கள்
தொகுஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீசுவரர், துர்க்கை, சண்டிகேசுவரர், ஆஸ்தான விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், வீணை ஆஞ்சநேயர், சூரியன், கால பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
பராமரிப்பு
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ சக்தி விகடன் டீம் (2023-01-10). "ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
- ↑ மாலை மலர் (2018-03-02). "மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
- ↑ மு.ஹரி காமராஜ் (2023-01-16). "பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
- ↑ "மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
- ↑ "Singeeswarar Temple : Singeeswarar Singeeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
- ↑ "Arulmigu Singeeswarar Temple, Mappedu - 631402, Tiruvallur District [TM001589].,Singeeswarar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.