மரக்கட்டை வீடு

மரக்கட்டை வீடு (Log house) என்பது, அமைப்பு அடிப்படையில் மரக்கட்டைக் குடில்களை ஒத்தது. ஆனாலும், இது மரக்கட்டைக் குடில்களைப் போலன்றிச் சற்றுப் பெரிதாகவும், செப்பம் செய்த மரக்கட்டைகளால் ஆன அமைப்புக்களையே குறிக்கிறது.

நார்வே எய்டாலில் உள்ள 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மரக்கட்டைப் பண்ணை வீடு.
செருமனியின் பவேரியாவில் உள்ள ஒரு மரக்கட்டைக் கட்டிடம்.
இரண்டு மாடிகளைக் கொண்ட உருசிய பாணி மரக்கட்டை வீடு.
இரண்டு மாடிகளுடன் கூடிய அமெரிக்கப் பாணி மரக்கட்டை வீடு
இரண்டு மாடிகளுடன் கூடிய அரிவாலை மரக்கட்டை வீடு

பைன், இசுப்புரூசு போன்ற நேரானவையும், உயர்ந்து வளர்பவையுமான ஊசியிலை மரங்கள் தாராளமாகக் கிடைக்கும், சுவீடன், பின்லாந்து, நார்வே, பால்டிக் நாடுகள், உருசியா போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளில் மரக்கட்டைக் கட்டுமானமே பொதுவான கட்டிடத் தொழில்நுட்பமாக இருந்தது. இதே போன்ற தட்பவெப்பநிலை நிலவும் கிழக்கு நடு ஐரோப்பா, ஆல்ப்சு, பால்க்கன்சு பகுதி, ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களின் நாட்டார் கட்டிடங்களில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இலையுதிர் மரங்கள் முதன்மையாகக் காணப்படும் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளில் மரச் சட்டக அமைப்புக்களே பெரிதும் விரும்பப்பட்டன.

மரக்கட்டை வகைகள்

தொகு

மரக்கட்டை வீடுகளில் பல்வேறு வகையான மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • கைச்செப்பம் செய்தவை: இவை பட்டை உரிக்கப்பட்ட மரக்கட்டைகள். இதைத் தவிர மரக்கட்டைகளின் வடிவத்தில் வேறு மாற்றங்கள் இருக்காது.
  • செதுக்கிய மரக்கட்டைகள்: இவை பெரும்பாலும் கோடரியால், நீள்வட்டம், அறுகோணம், எண்கோணம் அல்லது செவ்வக வடிவத்தில் செதுக்கப்பட்டவை.
  • அரிவு மரக்கட்டைகள்: உயரம் மாறாமல், ஒரேயளவு அகலத்தைக் கொண்டவையாக வாளால் அரிந்து செப்பமிடப்பட்ட மரக்கட்டைகள்.
  • அரிவாலை மரக்கட்டைகள்: எந்திரப் புறவுருவாக்கியவை என்றும் அழைக்கப்படும் இம்மரக்கட்டைகள், அரிவாலையில் எந்திரங்களின் மூலம் ஒரே அளவுகளையும் புறவுருக்களையும் கொண்டவையாக உருவாக்கப்படுகின்றன.

கைச்செப்பம் செய்த மரக்கட்டைகளாலான வீடுகள் பல நூற்றாண்டுகளாகவே இசுக்கன்டினேவியா,[1] உருசியா,[2] கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயன்பாட்டில் உள்ளன. இவற்றைக் கட்டுவதற்குப் பெரும்பாலும், கோடரியும், கத்தியுமே பயன்பட்டன.[3] 18ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், நியூ சுவீடனைச் சேர்ந்த இசுக்கன்டினேவியக் குடியேறிகள் இக்கலையை வட அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தனர். அங்கேயிருந்த பிற குடியேறிகளும், தாயக அமெரிக்கரும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளலாயினர்.[4]

கூறுகள்

தொகு

மரக்கட்டை வீடுகளில் பயன்படும் மரக்கட்டைகள் வேறுபட்ட அளவுகளிலான ஈர அளவைக் கொண்டிருக்கும். புதிதாக வெட்டப்பட்ட எல்லா மரக்கட்டைகளிலுமே கூடிய அளவு ஈரம் இருக்கும். கையால் செப்பம் செய்யப்பட்ட மரக்கட்டைகளில் அவை பயன்படுத்தப்படும் தட்பவெப்ப நிலையில் உறுதி நிலைக்கு வரும்வரை உலர விடுவதன் மூலம், ஈரம் இயற்கை முறையில் வெளியேறுகிறது. இவ்வாறு உலரும்போது மரக்கட்டை அளவில் சுருங்குகிறது. இச்சுருக்கம் மரக்கட்டையின் எல்லாத் திசைகளிலும் ஒரே அளவில் சுருங்குவதில்லை. சுற்றளவின் தொடுகோட்டுத் திசையிலான சுருக்கமும், ஆரைத் திசையிலான சுருக்கமும் வேறுபட்ட அளவில் இருப்பதால் சிறு வெடிப்புகள் தோன்றும். இவ்வெடிப்புக்கள் காலப்போக்கில் விரிவடையும். இது வளியில் உலரும் மரக்கட்டைகளிலும், சூளையில் உலர்த்தப்படும் மரக்கட்டைகளிலும் இடம்பெறக்கூடிய இயற்கையான நிகழ்முறை ஆகும். கட்டுமான முறை அல்லது எவ்வாறு உலர்த்தப்பட்டது என்பவற்றில் தங்கியிராமல் எல்லா மரக்கட்டை வீடுகளிலுமே இது நிகழும்.

அரிவாலை மரக்கட்டைகள் வேறு முறையில் உருவாக்கப்படுகின்றன. தேவைப்படும் தரம், விளைவு என்பவற்றைப் பொறுத்து அரிவாலை மரக்கட்டைகள் பின்வரும் ஏதாவதொரு வகையில் அமையும்.

பச்சை மரக்கட்டைகள்

தொகு

காட்டில் மரங்களை வெட்டியவுடன், வளியிலோ சூளையிலோ உலர்த்தாமல் புறவுருவாக்க எந்திரங்களின் மூலம் உருவாக்கப்படும் மரக்கட்டைகள் பச்சை மரக்கட்டைகள் எனப்படுகின்றன. இங்கே "பச்சை" நிறத்தைக் குறிப்பதில்லை. அது அம்மரக்கட்டைகளில் உள்ள ஈரத்தைக் குறிக்கிறது.[5] பச்சை மரக்கட்டைகளில் இருக்கக்கூடிய ஈர அளவு, மர இனத்தையும் அது வெட்டப்பட்ட பருவகாலத்தையும் பொறுத்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும். பச்சை மரக்கட்டைகளின் ஈர அளவு 20% முதல் 90% வரை இருக்கலாம்.[6]

வளியில் உலர்ந்த மரக்கட்டைகளில் ஒரு வகை "பட்டு நிற்கும்" (dead standing) மரங்களில் இருந்து பெறப்படுவது. இம்மரங்கள் இயற்கைக் காரணங்களால் பட்ட பின்னரும் நிற்கும் மரங்கள். இவை பட்ட பின் ஒரு மாதத்திலோ பல ஆண்டுகளின் பின்னரோ வெட்டப்படலாம். இதனால் இவ்வாறான மரங்களிலிருந்து கிடைக்கும் மரக்கட்டைகள் பச்சை மரக்கட்டைகளாகவோ, ஏறத்தாழ உலர்ந்த மரக்கட்டைகளாகவோ இருக்கக்கூடும்.

கட்டுமானம் நிறைவுற்ற பின்னர் பச்சை மரக்கட்டைகள் கட்டிடத்தின் பகுதியாக இருந்தபடியே உலரும். நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே இம்மரக்கட்டைகள் அவற்றின் சுற்றாடலுடன் சமநிலையை எட்டி 6%க்கும் 12%க்கும் இடைப்பட்ட சமநிலை ஈரப்பத அளவை அடையும். உண்மையான சமநிலை ஈரப்பத அளவு அவ்விடத்தின் தட்பவெப்பநிலை, பருவகாலம், அமைவிடம் ஆகியவற்றில் தங்கியுள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Holan, Jerri, "Norwegian Wood, A Tradition of Building", Rizzoli Intl Publications1990
  2. Opolovnikov, Alexander, "The Wooden Architecture of Russia", Harry Abrams, Inc., 1989
  3. Phleps, Hermann, "The Craft of Log Building", Harpers Collins reprint edition, 1989
  4. Bruce D. Bomberger (1991), The Preservation and Repair of Historic Log Buildings, Preservation Briefs #26, Heritage Preservation Services Division, National Park Service
  5. International Log Builders Association, "Log Building Standards", 2000, Section 2.A
  6. Chambers, Robert W., "Log Construction Manual", Deep Stream Press, 2006
  7. Hoadley, Bruce: "Understanding Wood", Fine Homebuilding Books, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கட்டை_வீடு&oldid=1982017" இலிருந்து மீள்விக்கப்பட்டது