மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல்

காரைக்குடி வட்டத்தின் அரண்மனை சிறுவயல் என்ற ஊரின் கோட்டை

மருதுபாண்டியர் கோட்டை தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி வட்டத்தில் கல்லல் அருகில் அரண்மனை சிறுவயல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும்.

மருதுபாண்டியர் கோட்டை

அமைவிடம் தொகு

இந்த அரண்மனை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அரண்மனையாகும். சென்னையிலிருந்து 431 கி.மீ. தொலைவில் உள்ள சிவகங்கையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. சிறுவயல் என்பது இந்த ஊரின் பழமையான பெயராக இருந்தது. [1] அரண்மனை சிறுவயல் என்னுமிடத்திற்கு அருகே உள்ள ஊர்கள் காரைக்குடி, சிவகங்கை, திருப்புவனம், பரமக்குடி ஆகியவையாகும். [2]

பெயர்க்காரணம் தொகு

பிற்காலத்தில் சிவகங்கை ஜமீன்தாரின் அரண்மனை ஒன்று இங்கு அமைந்ததால் அரண்மனை சிறுவயல் எனப் பெயர் பெற்றது. பிற்காலப் பாண்டியர் காலத்திலேயே (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு) இங்கு ஒரு சிவன் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் இங்கு சிலகாலம் தங்கி போர் செய்திருக்கின்றனர். அவர்களது படைவீரர்கள் தங்கிய பகுதிகள் தற்போது வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. [1] கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதுபாண்டிய மன்னர்களின் இந்த அரண்மனை வரலாற்றுச் சின்னமாகும். [3]

தொன்மைச்சின்னம் தொகு

சிவகங்கைச் சீமைப் பகுதியை ஆண்டு வந்த மருது சகோதரர்கள் என்னும் மருதுபாண்டியர் மன்னர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வந்தனர். அம்மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இருந்த போதிலும் அந்த அரண்மனை தொன்மைச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் காளையார் கோயில், காரைக்குடி அரண்மனை, திருமய்யம் கோட்டை, திருக்கோட்டியூர் போன்றவையாகும். [3] அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை, பழங்கால ஓவியங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் உள்ள திருமலை சமணர் படுக்கை, ஆகியவையும்கூட இப்பகுதியில் காணப்படுகின்ற பாதுகாக்கப்பட்ட சின்னங்களாகும். [4]

மருது சகோதரர்கள் தொகு

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோயிலில் அமைந்துள்ளது.

அரண்மனை தொகு

இராமநாதபுரம் சீமை கி.பி.1733 ஆம் ஆண்டில் இராமநாதபுரம், சிவகங்கை என்று இரண்டு பிரிவுகளாகத் தஞ்சாவூர் மராட்டியர்களால் பிரிக்கப்பட்டு, மறவர் குலத்தைச் சேர்ந்த சிற்றசர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கைப் பகுதியை ஆண்ட சசிவர்ணத்தேவர் வம்சத்வரால் சிறுவயல் என்ற ஊரில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இவ்வூரில் கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கோயில் ஒன்றும் உள்ளது. கி.பி.18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மருது சகோதரர்கள் படையுடன் இவ்வூர் அரண்மனையில் தங்கி ஆங்கிலேயருடன் போர் புரிந்துள்ளனர், இந்த அரண்மனை மருதுபாண்டியர் கோட்டை என்று வழங்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். [கு 1] தற்போது (டிசம்பர் 2019) இந்த அரண்மனை புத்துருவாக்கம் பெற்றுவருகிறது. அதற்கான சீரமைப்புப்பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

குறிப்புகள் தொகு

  1. நேரில் சென்றபோது, அரண்மனையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அங்கு வைத்திருந்த அறிவிப்புப்பலகையிலிருந்து திரட்டப்பட்ட விவரங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல்
  2. Aranmanai Siruvayal, Kallal Village information
  3. 3.0 3.1 "தமிழிணையம் தகவலாற்றுப்படை, மருதுபாண்டியர் கோட்டை". Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2019-12-20.
  4. தொல்பொருள் பாதுகாப்பு வார விழா இலவசமாக அரண்மனை பார்க்கலாம், தினமலர், 21 நவம்பர் 2018

படத்தொகுப்பு தொகு