மலாக்கி (நூல்)
மலாக்கி (Malachi) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]
பெயர்
தொகுமலாக்கி என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் מַלְאָכִי (Mal'akhi, Malʼāḵî) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Μαλαχίας (Malachias) என்றும் இலத்தீனில் Malachias என்றும் உள்ளது. இப்பெயருக்கு "கடவுளின் தூதுவன்" என்று பொருள்.
நூலாசிரியரும் நூல் எழுந்த காலமும்
தொகுமலாக்கி நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. நெகேமியா இறைவாக்கினர் எருசலேமுக்கு வருவதற்கு முன் (கி.மு. 445) இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். எருசலேம் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதற்கு (கி.மு. 515) பின் இந்நூல் தோன்றியது என்றும் தெரிகிறது. எனவே, கி.மு. 500 அளவில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
நூல் தரும் செய்தி
தொகுகுருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர்; அவர்கள் ஆண்டவருக்குச் சேர வேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர்.
எனவே ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும்.
மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினர் (கி.மு. 538). அவ்வமயம் அவர்களது வாழ்க்கை நிலை எவ்வாறிருந்தது என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை வழிநடத்த வேண்டிய தலைவர்கள் குறித்து இந்நூல் கடுமையாகப் பேசுகிறது. நூல் எழுந்ததைத் தொடர்ந்து, ஆகாய், எஸ்ரா, நெகேமியா போன்ற இறைவாக்கினர் மக்களிடையே சீர்திருத்தம் கொணர்ந்தார்கள்.
மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க கடவுள் தாமே வருவார்; ஆண்டவர் வரும் நாளை முன்னறிவிப்பதுபோல அவருடைய தூதர் வருவார் என்று மலாக்கி நூல் கூறுவதை நற்செய்தி நூலாசிரியர்கள் இயேசுவுக்கும் அவருடைய வருகையை முன்னறிவித்த திருமுழுக்கு யோவானுக்கும் பொருத்தியுரைப்பார்கள்.
நூலிலிருந்து சில பகுதிகள்
தொகுமலாக்கி 1:10-11
"'உங்கள் கையிலிருந்து காணிக்கை எதுவும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசை வரை
வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது.
எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும்
தூய காணிக்கையும் செலுத்தப்படுகின்றன.
ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே' என்ங்கிறார் ஆண்டவர்."
மலாக்கி 3:1
"இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன்.
அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்;
அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர்
திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர்
இதோ வருகிறார்."
மலாக்கி 4:1-2
"இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது.
அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்
அதனுள் போடப்பட்ட சருகாவர்;
வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ,
கிளையையோ விட்டுவைக்காது;
முற்றிலும் சுட்டெரித்து விடும்," என்கிறார் படைகளின் ஆண்டவர்.
"ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல்
நீதியின் கதிரவன் எழுவான்.
அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்."
உட்பிரிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ezra the Scribe by Mendel Adelman, Chabad.org".
- ↑ Würthwein, Ernst (1995). The Text of the Old Testament. Translated by Rhodes, Erroll F. Grand Rapids, MI: Wm. B. Eerdmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-0788-7. பார்க்கப்பட்ட நாள் January 26, 2019.
- ↑ Dead sea scrolls - Malachi
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. இசுரயேலரின் குற்றங்கள் | 1:1 - 2:16 | 1410 - 1412 |
2. கடவுளின் தண்டனைத் தீர்ப்பும் இரக்கமும் | 2:17 - 3:23 | 1412 - 1414 |