மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (நூல்)

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை: மலேசிய இந்திய சமூகத்தின் துயரங்களும் போராட்டங்களும் என்னும் நூல் 1800களில் இந்தியாவில் இருந்து அப்போதைய மலாயாவுக்குக் குடிபெயர்ந்ததில் இருந்து இன்று வரையான ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலப் பகுதியில் இவ்விந்திய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்திய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலை ஜானகிராமன் மாணிக்கம் எழுதியுள்ளார். நூலாசிரியரின் 17 ஆண்டுக்கால ஆய்வின் பயனாக இந்நூல் உருவானது. இதன் முதற் பதிப்பு 2006 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 2007 இலும் தமிழில் வெளியானது. பின்னர் கூடுதலான தகவல்களைச் சேர்த்து விரிவாக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு (The Malaysian Indian Dilemma: The Struggles and Agony of the Malaysian Community in Malaysia) வெளியானது. இந்த ஆங்கிலப் பதிப்பை மொழிபெயர்ப்புச் செய்து மூன்றாவது தமிழ்ப் பதிப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பு நாடுதழுவிய மனித வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (நூல்)
ஆசிரியர்(கள்):ஜானகிராமன்
மாணிக்கம்
வகை:சமூகம், வரலாறு
துறை:{{{பொருள்}}}
காலம்:2011
இடம்:மலேசியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:65+549 (2011 பதிப்பு)
பதிப்பகர்:மூன்றாம் பதிப்பு
நாடுதழுவிய மனித
வளர்ச்சி மற்றும்
ஆய்வு மையம்
(மலேசியா)
பதிப்பு:2006
2007
2011

நூல் வரலாறு

தொகு

நூலாசிரியர், தமிழ்நாட்டில் இருந்து மலாயாவுக்கு வந்து அதை வளம்படுத்திய தொழிலாளர் குடும்பம் ஒன்றின் வழி வந்தவர். அக்காலத்தில், தனது முன்னோர்கள் பட்ட துன்பங்களைக் கேள்வியுற்று வருத்தப்பட்டாலும், தாம் குடியேறிய நாட்டை முன்னேற்றியதில் அவர்களுக்கு உள்ள பங்கு குறித்துப் பெருமைப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனாலும், நாடு விடுதலை பெற்ற பின்னரும் நாட்டின் முன்னேற்றத்திலும் வளத்திலும் உரிய பங்கு மலேசிய இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதாலும், அதற்கான உரிமையும் கைநழுவிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதாலும் ஏற்பட்ட ஆதங்கத்தினால், தான் சார்ந்த சமூகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப் புகுந்ததாக நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.[1] இவ்வாறு பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஆய்வின் பயனாகவே இந்நூல் எழுதப்பட்டது.

நோக்கம்

தொகு

இரண்டு முக்கியமான நோக்கங்களை முன்வைத்து நூலாசிரியர் இந்நூலை எழுதியிருப்பதாகத் தெரிகிறது.[2] முதலாவது மலேசிய நாட்டின் அரசியல், சமூக-பொருளாதாரம், உளவியல் போன்ற தளங்களில் தேக்க நிலையில் இருக்கும் மலேசிய இந்தியச் சமூகத்தின் உணர்வுகளைத் தட்டியெழுப்புவது. அடுத்தது, மேற்படி சமூகத்தின் நிலை குறித்துச் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் எடுத்துச் சொல்வது.

அமைப்பு

தொகு

தொடக்கத்தில் வாழ்த்துரைகள், அணிந்துரைகள், மதிப்பீடுகள், முன்னுரை, நன்றியுரை, உள்ளடக்க விபரங்கள் போன்றவை 65 பக்கங்களிலும், பின்னர் விடயம் 549 பக்கங்களிலுமாக மொத்தம் 614 பக்கங்களைக் கொண்டதாக இந்நூல் (மூன்றாம் பதிப்பு) அமைந்துள்ளது. நூல் பின்வரும் 10 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

  1. மலேசியாவில் இந்தியர்கள்: பொதுத் தகவல்
  2. மலாய்த் தீவுகளுக்கு இந்தியர்கள் வருகை
  3. தொடக்கத்தில் இடம்பெயர்ந்த இந்தியர்களும் அவர்களது போராட்டங்களும் 1786 - 1940
  4. மலாயன் இந்தியர்களின் எழுச்சி 1947 - 1957
  5. சுதந்திரத்துக்குப் பிந்திய மலாயாவில் இந்தியர்களின் நிலை 1957 - 1970
  6. புதிய பொருளாதாக் கொள்கையும் மலேசிய இந்தியர்களும் 1970 - 1990
  7. புதிய வளர்ச்சிக் கொள்கையும் மலேசிய இந்தியர்களும் 1990 - 2000
  8. நகர்ப்புற இந்தியர்களின் புதைகுழி
  9. தேசியத் தொலைநோக்குத் திட்டமும் மலேசிய இந்தியர்களும் 2000 - 2010
  10. இங்கிருந்து எங்கே? 2010 - 2020

நூலில், மலேசிய இந்தியர்களின் வரலாற்றோடு தொடர்புடைய ஏறத்தாழ 250 அரிய படங்களும், 11 வரைபடங்களும், புள்ளிவிபரங்கள் அடங்கிய 100 வரையான அட்டவணைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. இவற்றோடு ஆங்காங்கே எடுத்தாளப்படும் பொருளுக்குப் பொருத்தமாக பல்வேறு மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட 44 பெட்டிச் செய்திகளும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்புக்கள்

தொகு
  1. மாணிக்கம், ஜானகிராமன்., 2011. பக். xxxi
  2. மாணிக்கம், ஜானகிராமன்., 2011. பக். xxxi

உசாத்துணைகள்

தொகு
  • மாணிக்கம், ஜானகிராமன்., மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை: மலேசிய இந்தியச் சமூகத்தின் துயரங்களும் போராட்டங்களும், நாடுதழுவிய மனித வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம், மலேசியா, 2011.