மாங்குளம் குடைவரை
மாங்குளம் குடைவரை என்பது, மதுரையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ள கரந்தைப்பட்டி என்னும் இடத்திலிருந்து செல்லும் கிளைச் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். இப்பகுதியில் உள்ள அம்மன்பட்டி மலை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் மலையிலேயே இக்குடைவரை உள்ளது. இது ஒரு முற்றுப்பெறாத குடைவரை.
அமைப்பு
தொகுநிலத்தில் இருந்து ஐந்தரை மீட்டருக்கு மேல் உயரமான இடத்தில் இக்குடைவரை உள்ளது. இதன் முகப்பிற்கு முன் ஒடுக்கமான வெளியிடம் உள்ளது. தூண்கள் தெரியக்கூடிய அளவுக்கு குடைவு வேலைகள் இடம்பெற்றிருந்தாலும், பாறையில் இருந்து தூண்களைத் தனிப்படுத்தும் அளவுக்குப் பாறை குடையப்படவில்லை. இதனால், எல்லாத் தூண்களுமே பாறையுடன் ஒட்டியபடியே காணப்படுகின்றன.[1] திட்டப்படி இது முழுவதும் குடையப்பட்டிருந்தால், முகப்பில் இரண்டு முழுத்தூண்களையும், பக்கச் சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களையும் கொண்டதாக இக்குடைவரை அமைந்திருக்கும். தூண்கள் மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எண்பட்டைகளைக் கொண்ட வடிவிலும் அமைந்திருப்பதாக சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.[2] ஆனால், தற்போதைய நிலையில் இது நான்முகத் தூணாகவே உள்ளது என மு. நளினியும், இரா. கலைக்கோவனும் எடுத்துக்காட்டுகின்றனர்.[3] தூண்களின் மேல் போதிகைகளும், உத்தரங்களும் அமைந்துள்ளன. இவற்றுக்கு மேல், முகப்பில் கபோதத்துக்கு உரியதாக வெளித் தள்ளி இருக்கும் பாறைப்பகுதி நேர்த்தியாக இருந்தும் கபோதம் முற்றுப்பெறவில்லை. இராசவேலும், சேஷாத்திரியும் பாறையில் ஏற்பட்ட விரிசலினால் பணிகள் கைவிடப்பட்டன என்கின்றனர்.[4] ஆனால், நளினியும், கலைக்கோவனும் எல்லாம் நல்ல நிலையில் இருந்தும் பணி இடையில் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை என்கின்றனர்.[5]
காலம்
தொகுஇந்த மலைப்பகுதியில் கிறித்துவுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்த சமணர் வாழிடங்களும், அக்காலத்துக்குரிய கல்வெட்டுக்களும் காணப்பட்டாலும், குடைவரைக் கோயில் பிற்பட்ட பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், தொகுதி 1, சேகர் பதிப்பகம், சென்னை, 2007. பக். 27
- ↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 153
- ↑ நளினி, மு., கலைக்கோவன், இரா., 2007. பக். 27
- ↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 153
- ↑ நளினி, மு., கலைக்கோவன், இரா., 2007. பக். 28