மாத்தளை கார்த்திகேசு
மாத்தளை கார்த்திகேசு என அழைக்கப்படும் கா. கார்த்திகேசு (சனவரி 1, 1939 – ஆகத்து 6, 2021) ஈழத்து எழுத்தாளரும், இலங்கை நாடகக் கலையுலகின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். சிறுகதைகள், இலக்கிய, சமயக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவள் ஒரு ஜீவநதி என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர்.[1]
மாத்தளை கார்த்திகேசு | |
---|---|
பிறப்பு | கா. கார்த்திகேசு சனவரி 1, 1939 மாத்தளை, இலங்கை |
இறப்பு | ஆகத்து 6, 2021 மாத்தளை | (அகவை 82)
அறியப்படுவது | நாடக எழுத்தாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகார்த்திகேசு இலங்கை, மலையகத்தில் மாத்தளையில் பிறந்தார். மாத்தளை விஜே கல்லூரியிலும், கிறித்தவத் தேவாலயக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1]
நாடகப் பங்களிப்பு
தொகுமாத்தளை கார்த்திகேசு 1958 முதல் கலைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.[2] ஏராளமான மேடை நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.[1] இவரது முதல் நாடகம் தீர்ப்பு. பல நாடகங்களில் அவர் நடித்தும் உள்ளார். களங்கம் (1974), போராட்டம் (1975), ஒரு சக்கரம் சுழல்கிறது (1976) ஆகிய இவரது நாடகங்கள் தேசிய நாடக விழாக்களில் பரிசு பெற்றுள்ளன.[1] இவர் எழுதிய காலங்கள் அழிவதில்லை என்ற நாடகம் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மேடையேற்றப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.[1] 15 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது.[2] இதே நாடகம் பின்னர் காலங்கள் என்னும் பெயரில் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வறுமையையும் விவரிக்கும் நாடகமாக இது அமைந்தது.[1] குடும்பம் ஒரு கலைக்கதம்பம் என்ற நாடகத்தையும் இவர் தொலைக்காட்சிக்காக எழுதியுள்ளார்.[1] மலையகத்தின் பாரம்பரிய காமன் கூத்தையும் தொலைக்காட்சிக்காக அமைத்திருந்தார்.[1]
மலையக எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர், இலங்கைக் கவின் கலை மன்றத் தலைவர், இந்து சமயக் கலாசார அமைச்சின் நாடகக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.[3]
திரைப் பங்களிப்பு
தொகு1980 ஆம் ஆண்டில் கார்த்திகேசு அவள் ஒரு ஜீவநதி என்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்றைத் தானே கதை, வசனம் எழுதித் தயாரித்திருந்தார்.[1] டீன்குமார், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் கார்த்திகேசுவும் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்தார்.[2] சில பாடல்களையும் எழுதியிருந்தார்.[2] பெரிய அளவில் இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.[1]
வெளியிட்ட நூல்கள்
தொகு- வழி பிறந்தது (புதினம், குறிஞ்சி வெளியீடு)
பட்டங்களும் விருதுகளும்
தொகு- 1993 சாகித்திய விழாவில் கலாஜோதி என்ற விருதை இந்து சமயக் கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கிக் கௌரவித்தது.[1]
- இலங்கை மத்திய வங்கி நடத்திய நாடகப் போட்டியில் காலங்கள் நாடகத்திற்கு சிறந்த நாடகம், சிறந்த நடிப்பு, சிறந்த நாடகப் பிரதி ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.[1]
- தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய போட்டியில் இவரது சுட்டும் சுடர்கள் என்ற திரைக்கதைப் பிரதிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 தெளிவத்தை ஜோசப் (சூன் 1995). "கலை இலக்கியத் துறையில் துணிவுடன் பணியாற்றும் மாத்தளை கார்த்திகேசு". மல்லிகை.
- ↑ 2.0 2.1 2.2 2.3 தேவதாஸ், தம்பிஐயா (2007). இலங்கை திரையுலக சாதனையாளர்கள்.
- ↑ அமிர்தபாரதி (மார்ச் 1992). ஆசிரியரும் ஈழத்து அறிமுகமும். p. 2-3.
{{cite book}}
: Check date values in:|date=
(help)