இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා මහ බැංකුව) இலங்கையின் நாணயக் கொள்கை, நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனம் ஆகும். இது இலங்கையின் நாணய மேலாண்மைச் சபையாக விளங்குகின்றது. இலங்கை விடுதலை பெற்று இரு ஆண்டுகளுக்குப் பின்னர் Central Bank of ceylon எனும் பெயருடன் 1950 ம் ஆண்டு ஆகஸ்டு 28ம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் 1985 ல் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முதலாவது ஆளுனராக ஜோன் எக்ஸ்டர் கடமையாற்றினார். இலங்கை மத்திய வங்கியின் நிறுவக ஆளுநராக ஜோன் எக்ஸ்ரர் இருந்த வேளையில் ஜே. ஆர். ஜெயவர்த்தன அப்போதைய நிதியமைச்சராக இருந்தார். அதுவரை நாட்டின் நாணய வழங்கலுக்குப் பொறுப்பாக இருந்த பணச் சபைக்குப் பதிலாக இலங்கை மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது. இது ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது.[1][2][3]
இலங்கை மத்திய வங்கி | |
தலைமையகம் | கொழும்பு |
---|---|
துவக்கம் | 1950 |
நாணயம் | இலங்கை ரூபாய் வார்ப்புரு:ISO 4217/maintenance-category (ஐ.எசு.ஓ 4217) |
வலைத்தளம் | http://www.cbsl.gov.lk |
இலங்கை மத்திய வங்கியின் வட்டார அலுவலகங்கள் அனுராதபுரம், மாத்தறை, மாத்தளை,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
வரலாறு
தொகுபொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து ஊக்குவிப்பதற்கு தீவிரமான நாணயக் கொள்கை அமைப்பொன்றும், இயக்கவாற்றல் மிக்க நிதியியல் துறையொன்றும் முக்கியம் வாய்ந்தவை என்பதனை அங்கீகரிக்கின்ற விதத்தில் விடுதலைக்குப் பின்னைய அரசாங்கத்தினால் இலங்கை மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது.
மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு முன்னர் மத்திய வங்கித்தொழிலுடன் தொடர்பான தொழிற்பாடுகள் 1884-ஆம் ஆண்டின் தாள் நாணய கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பணச்சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அரசியல் சுதந்திரம் அடையப்பட்ட பின்னர் அபிவிருத்தியடைந்து வருகின்றதும் சுதந்திரமானதுமான நாடொன்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பணச்சபை முறைமை போதுமானதற்றது மட்டுமன்றி பொருத்தமற்றதுமானதென கருதப்பட்டது. எனவே. 1948 யூலையில் இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு ஐக்கிய அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது. இதன் பெறுபேறாக ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் றிசேர்வ் போர்டிலிருந்து பொருளியலாளரான ஜோன் எக்ஸ்ரர் என்பவர் இப்பணியினை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டார்.
மத்திய வங்கிக்கான கோட்பாடு மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பு என்பன மீதான எக்ஸ்ரரின் அறிக்கை 1949 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது இதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இலங்கை மத்திய வங்கி 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயச் சட்ட விதியின் மூலம் நிறுவப்பட்டதுடன் 1950 ஓகத்து 28-ஆம் நாளன்று தொழிற்படத் தொடங்கியது. இது 1985-இல் ‘சென்ட்ரல் பாங்க் ஒவ் சிறிலங்கா’ (Central Bank of Sri lanka) என ஆங்கிலத்தில் மீளப் பெயரிடப்பட்டது.
நாட்டின் நாணயம், வங்கித்தொழில் மற்றும் கொடுகடன் என்பனவற்றை பூரணமாக நிருவகித்து ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான பரந்தளவு அதிகாரங்கள் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன. நாணயத்தினை வெளியிடுவதற்கான ஏக உரிமையும் அதிகாரமும் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இது நாட்டின் பன்னாட்டு ஒதுக்கின் கட்டுக் காப்பாளனாகவும் விளங்கி வருகின்றது. 1949ஆம் ஆண்டின் நாணயச் சட்ட விதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
அ. உள்நாட்டு நாணயப் பெறுமதியினை வலுப்படுத்துதல் (விலை உறுதிப்பாட்டினை பேணுதல்)
ஆ. இலங்கை ரூபாவின் செலாவணி வீதத்தின் முகப்புப் பெறுமதியினை அல்லது உறுதிப்பாட்டினைப் பேணுதல் (செலாவணி வீத உறுதிப்பாட்டினைப் பேணுதல்)
இ. இலங்கையில் உயர்ந்தமட்ட உற்பத்தி, தொழில்நிலை மற்றும் உண்மை வருமானத்தினை ஊக்குவித்துப் பேணுதல்
ஈ. இலங்கையின் உற்பத்தியாக்க மூலவளங்களை முழுமையாக அபிவிருத்தி செய்யும் விதத்தில் ஊக்குவித்து மேம்படுத்துதல்
மேலேயுள்ள (அ) மற்றும் (ஆ) இனை உறுதிப்படுத்தல் குறிக்கோள்களின் கீழ் வகைப்படுத்தக் கூடியதாகவுள்ள வேளையில் (இ) மற்றும் (ஈ) இனை அபிவிருத்திக் குறிக்கோள்களின் கீழ் வகைப்படுத்த முடியும். இலங்கை மத்திய வங்கி அதன் குறிக்கோள்களை எய்தும் விதத்தில் நாணயக் கொள்கையினைக் கொண்டு நடத்துவது தொடர்பாக பரந்தளவு அதிகாரங்களை நாணயச் சட்ட விதி அதற்கு வழங்கியுள்ளது. ஆகவே, இக்குறிக்கோள்களை எய்தும் விதத்தில் மத்திய வங்கி, நாணய உறுதிப்பாட்டினைப் பேணுவதன் மூலம் நேரடியாக மட்டுமன்றி நிதியியல் முறைமையின் அபிவிருத்தியையும் விரிவாக்கத்தினையும் மேம்படுத்துதல் மற்றும் பாரிய அபிவிருத்திக்குரிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ள துறைகளுக்கு கொடுகடன்களை வழிப்படுத்துதல் என்பனவற்றின் மூலம் மறைமுகமாகவும் முக்கியமானதொரு பங்கினை ஆற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், குறிப்பிட்ட பொருளாதார நிலைமைகளின் கீழ் இரண்டு குறிக்கோள்களை எய்துவதற்கு நாணயக் கொள்கை வழிமுறைகளை எதிரெதிர் திசைகளில் தொழிற்படுத்த வேண்டிய தேவையினை ஏற்படுத்துகிறது. அதாவது, வலுப்படுத்தல் குறிக்கோள் நாணய மற்றும் கொடுகடன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டுமென மத்திய வங்கியைத் தேவைப்படுத்துகின்ற வேளையில் அபிவிருத்தி குறிக்கோள்கள் நாணய மற்றும் கொடுகடன் வளர்ச்சியை விரிவாக்குவதற்கு மத்திய வங்கியினை தேவைப்படுத்துகின்றது. எனவே ஆரம்பத்தில் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வலுப்படுத்தல் மற்றும் அபிவிருத்திக் குறிக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாகக் காணப்பட்டன.
ஆகவே மத்திய வங்கித் தொழிலிலும் பன்னாட்டு நிதியியல் சந்தையில் ஏற்பட்டு வரும் விரைவான மாற்றங்களுடனும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் போக்குகளுடன் இணைந்து செல்லும் விதத்திலும் பொருளாதார தாராளமயப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களின் விளைவாகவும் மத்திய வங்கி 2000ஆம் ஆண்டின் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தினை தொடங்கியது.
குறிக்கோள்கள்
தொகுமாற்றமடைந்து வரும் பொருளாதார சூழலுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் மத்திய வங்கி அது உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் நோக்கத்தினையும் தொழிற்பாடுகளையும் படிப்படியாக வளர்த்து வந்திருக்கிறது. மத்திய வங்கித் தொழிலினைப் பேணும் விதத்தில் அதன் மையக் குறிக்கோள்களை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கும் ஆரம்பத்தில் அதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பல்வேறு குறிக்கோள்களிலிருந்தும் அது விடுபடுவதனை இயலச் செய்யும் விதத்திலும் 2002இல் நாணயச் சட்ட விதி திருத்தப்பட்டதன் மூலம் மத்திய வங்கியின் குறிக்கோள்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன. இலங்கையின் உற்பத்தியாக்க மூலவளங்களின் அபிவிருத்தியினை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி இரண்டு மையக் குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது:
- பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்
- நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல்
சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர் மத்திய வங்கி பல்வேறு குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. சில நேரங்களில் இவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவையாக அல்லது ஒத்துச் செல்லாதவையாகக் காணப்பட்டன. அதேவேளை மத்திய வங்கியொன்றின் முதன்மைக் குறிக்கோள் விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதில் பன்னாட்டு ரீதியாக கருத்தொற்றுமையொன்று அடையப்பட்டிருக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களிலொன்றான விலை உறுதிப்பாடு உறுதியான பேரண்டப் பொருளாதார நிலைமைகளில் முக்கியமாகத் தங்கியிருப்பதனால் “பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு” என குறித்துரைக்கப்படுகிறது. மேலும் மற்றைய நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றவாறு நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கக் கூடிய தன்மையினை மேம்படுத்துவதற்கு மிக முக்கியம் வாய்ந்ததாகும். எனவே நிதியியல் முறைமை உறுதிப்பாடும் இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களிலொன்றாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இரண்டு குறிக்கோள்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டனவாகவும் ஒன்றிற்கு ஒன்று ஆதாரமாகவும் இருக்கின்றன. விலை உறுதிப்பாட்டினை எய்துவதற்கு நிதியியல் இடையீட்டாளர்களினூடாகவே (நிறுவனங்கள்) நாணயக் கொள்கை பரிமாற்றச் செயற்பாடுகள் இடம் பெறுவதனால் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்திக் கொள்வது பிரதானமாக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவுள்ளது. ஆகவே இரண்டு குறிக்கோள்களும் இசைவானவையாக காணப்படுவதுடன் இது மத்திய வங்கி அதன் முக்கிய தொழிற்பாடுகளை மிகக் காத்திரமான முறையில் மேற்கொள்வதனையும் இயலச் செய்கிறது. இப்பணியில் வங்கி கொள்கை தீர்மானங்களை மேற்கொள்வதில் நிதி அமைச்சுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன் நிதி அமைச்சின் செயலாளர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையான நாணயச் சபையிலும் ஒரு உறுப்பினராக இருக்கின்றார்.
பொருளாதார விலை உறுதிப்பாடு
தொகுநாணயம் உள்நாட்டில் எதனைக் கொள்வனவு செய்கின்றது என்ற நியதிகளிலும் மற்றைய நாணயங்களின் நியதிகளிலும் விலை உறுதிப்பாடு நாணயத்தின் பெறுமதியினைப் பாதுகாக்கின்றது. விலை உறுதிப்பாடு அல்லது உறுதியான விலைகள் என்பதன் கருத்து குறைந்த பணவீக்கம் என்பதாகும். பணவீக்கம் குறைவாக இருக்கும் பொழுதும், குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொழுதும் பொருளாதாரம் நன்கு செயற்படும் என்பதனை அனுபவங்கள் காட்டுகின்றன. இச் சூழ்நிலையில் வட்டி வீதங்களும் குறைவாகவே இருக்கும். அத்தகையதொரு சூழலானது பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை எய்துவதற்கும் உயர்ந்த தொழில் வாய்ப்பினைப் பேணுவதற்கும் இடமளிக்கின்றது. உயர்வானதும் அடிக்கடி மாற்றமுறுவதுமான பணவீக்கத்தின் தடங்கலைத் தரும் பாதிப்புக்கள் இல்லாததொரு சூழலில் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் இருவரும் நம்பிக்கையுடன் பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். குறைந்த பணவீக்கம் அல்லது விலை உறுதிப்பாடு வலுவான நீண்ட கால பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நிலையையும் பேணி வளர்க்கும். மத்திய வங்கி பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு நாணயக் கொள்கை வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றது.
நிதியியல் முறைமை உறுதிப்பாடு
தொகுஉறுதியான நிதியியல் முறைமையானது வைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றது. வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீட்டு நடவடிக்கைகளையும் காத்திரமான சந்தைத் தொழிற்பாடுகளையும் ஊக்குவிக்கின்றது. இதன் மூலம் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகின்றது. நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பதன் கருத்து யாதெனில் நிதியியல் முறைமையின் (நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள்) காத்திரமான தொழிற்பாடு மற்றும் வங்கித்தொழில் நாணயம் மற்றும் சென்மதி நிலுவை நெருக்கடிகள் இல்லாமலிருப்பது என்பதாகும். நிதியியல் உறுதிப்பாடின்மைக்கு வங்கி முறிவடைதல், சொத்து விலைகள் மிகையாக தளம்பலடைதல், சந்தைத் திரவத்தன்மை முறிவடைந்து போதல் அல்லது கொடுப்பனவு முறைகளுக்கு ஏற்படும் தடங்கல்கள் என்பன காரணிகளாக அமைகின்றன. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உறுதியான பேரண்டப் பொருளாதாரச் சூழல், காத்திரமான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு, நன்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதியியல் சந்தைகள், ஆற்றல் வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பானதும் தீரம் மிக்கதுமான கொடுப்பனவு உட்கட்டமைப்பு என்பன தேவைப்படுகின்றன. நிதியியல் உறுதிப்பாட்டினை பேணுவதன் மூலம் சந்தைகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் கண்காணிப்பு, கொடுப்பனவு முறைமையின் மேற்பார்வை மற்றும் நெருக்கடிக்கான தீர்வு என்பனவற்றால் நிதியியல் முறைமை முழுவதற்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டு தடை செய்யப்படுகின்றன, குறைக்கப்படுகின்றன.
வங்கியின் தொழிற்பாடுகள்
தொகுஅதன் மையக் குறிக்கோள்களை எய்தும் பொருட்டும், அதேபோன்று பொருளாதார மதியுரையாளர், வங்கியாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முகவர் என்ற அதன் பொறுப்புக்களை ஆற்றும் விதத்திலும் மத்திய வங்கி பின்வரும் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.
மையத் தொழிற்பாடுகள்
தொகு- பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு
- நிதியியல் முறைமை உறுதிப்பாடு
மையத் தொழிற்பாடுகளுக்கான துணைப் பணி
தொகு- நாணய வெளியீடு மற்றும் முகாமைத்துவம்
முகவர் தொழிற்பாடுகள்
தொகு- ஊழியர் சேம நிதிய முகாமைத்துவம்
- வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம்
- பொதுப்படுகடன் முகாமைத்துவம்
- பிரதேச அபிவிருத்தி
நாணயச் சபை
தொகுமத்திய வங்கி தனித்துவமான சட்ட ரீதியான அமைப்பினைக் கொண்டிருப்பதுடன் இதில் மத்திய வங்கி ஒரு கூட்டிணைக்கப்பட்டதொரு நிறுவனமல்ல. நாணயச் சட்ட விதியின் நியதிகளில், கம்பனி அந்தஸ்து, அனைத்து அதிகாரங்களுடனும் தொழிற்பாடுகளும் கடமைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ள நாணயச் சபையின் ஆலோசனையின் மீது தங்கியிருக்கிறது. ஆளுகைச் சபை என்ற ரீதியில் நாணயச் சபை வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாடு மற்றும் நிருவாகம் என்பன தொடர்பான அனைத்துக் கொள்கை தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு பொறுப்பாக இருக்கின்றது.
மத்திய வங்கியின் நாணயச் சபை ஐந்து (5) உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
- ஆளுநர்
- நிதி அமைச்சின் செயலாளர் (பதவி வழி அலுவலர்)
- மூன்று (3) நிறைவேற்று அதிகாரமற்ற உறுப்பினர்கள்
ஆளுநர் நாணயச் சபையின் தலைவராக இருப்பதுடன் மத்திய வங்கியின் முதன்மை நிறைவேற்று அலுவலராகவும் தொழிற்படுகின்றார். ஆளுநரும் நிறைவேற்று அதிகாரமற்ற உறுப்பினர்களும் நிதி அமைச்சின் விதந்துரைப்பின் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். சபையின் நிறைவேற்று அதிகாரமற்ற உறுப்பினர்களின் நியமனத்திற்கு அரசியல் யாப்புச் சபையின் ஒப்புதல் தேவைப்படுகிறது. ஆளுநரினதும் நிறைவேற்று அதிகாரமற்ற உறுப்பினர்களினதும் பதவிக் காலம் ஆறு (6) ஆண்டுகளாகும். நாணயச் சபையின் தீர்மானம் செல்லுபடியாவதற்கு மூன்று (3) உறுப்பினர்களின் சம்மதம் தேவையாகும். எனினும், ஏகமனதான தீர்மானம் தேவைப்படுகின்ற விடயங்களைப் பொறுத்த வரையில் அனைத்து (5) உறுப்பினர்களினதும் சம்மதம் அவசியமானதாகும்.
பிரதேச அபிவிருத்தி
தொகுவங்கித்தொழில் துறையின் உதவியுடன் பிரதேச பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி மாத்தளை, அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் பிரதேச அலுவலகங்களை நிறுவியிருக்கின்றது. முதலாவது பிரதேச அலுவலகம் 1981இல் மாத்தறையிலும் இரண்டாவது மூன்றாவது அலுவலகங்கள் அநுராதபுரத்திலும் மாத்தளையிலும் முறையே 1982இலும் 1985இலும் திறக்கப்பட்டன. நாட்டின் மாகாண ரீதியிலான நிருவாக முறைமையுடன் இசைந்து செல்லும் விதத்தில் மத்திய வங்கி பிரதேச அலுவலகங்களுக்கு மாகாண அலுவலகங்கள் என மீளப் பெயரிட்டது. இலங்கை மத்திய வங்கி அதன் நான்காவது மாகாணக்கிளையை யாழ்ப்பாணத்தில் 04.07.2010 நாளன்றும் ஐந்தாவது மாகாணக்கிளையை திருகோணமலையில் 12.11.2010 நாளன்றும் திறந்தது.
தொழிற்படும் பிரதேசங்கள்
தொகுமாகாண அலுவலகங்களின் தொழிற்பாட்டு பிரதேசங்கள்
மாகாண அலுவலகம் - தென் மாகாணம் – காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகல மாவட்டங்கள் மாகாண அலுவலகம் - வட மத்திய மாகாணம் – அநுராதபுரம், பொலுனறுவை மாவட்டங்கள் மாகாண அலுவலகம் - மத்திய மாகாணம் – கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்கள் மாகாண அலுவலகம் - வட மாகாணம் – யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்கள் மாகாண அலுவலகம் - கிழக்கு மாகாணம் – திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்
எனினும், தேவைகளைப் பொறுத்து, மாகாண அலுவலகங்கள் மேற்குறிப்பிட்ட மாகாண அலுவலகங்களின் எல்லைகளுக்குட்படாத மற்றைய மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு மாகாண அலுவலகங்களின் குறிக்கோள்கள் மாகாணங்களில் மத்திய வங்கியின் முக்கிய தொழிற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியளித்தல் மற்றும் இணைத்தல், மாகாணங்களுக்கு நிதியியல் உதவிகள், வழிகாட்டல்கள், சந்தைப்படுத்தல் இணைப்புக்களை சுமூகமாகவும் உரிய நேரத்திலும் வழங்குவதன் மூலம் கிராமிய பொருளாதாரங்களை ஊக்குவித்தல், மற்றும் தொடர்பான ஆதரவுப் பணிகளை இணைத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருக்கின்றன. இது பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக தொடர்பான மாகாணங்களில் வறுமைக் குறைப்பிற்கு பங்களித்தல் மற்றும் பொருளாதார, சமூக நிலைமைகளை உயர்த்துதல் என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது.
ஆளுநர்களின் பட்டியல்
தொகு- ஜோன் எக்ஸ்டர் (1950-1953)
- என். யூ. ஜயவர்தன (1953-1954)
- ஏ. ஜி. ரணசிங்க (1954-1959)
- டி. டபிள்யூ. ராஜபத்திரன (1959-1967)
- டபிள்யூ, தென்னகோன் (1967-1971)
- எச். ஈ. தென்னகோன் (1971-1979)
- டபிள்யூ. ராசபுத்திரம் (1979-1988)
- எச். என். எஸ். கருணாதிலக்க (1988-1992)
- எச். பி. திசநாயக்க (1992-1995)
- ஏ. எஸ். ஜயவர்தன (1995-2004)
- எஸ். மெண்டிஸ் (2004-2005)
- அஜித் நிவாட் கப்ரால் (2006 - 2015)
- அர்ஜுன மகேந்திரன் (தற்போது)
கல்வி
தொகுமத்திய வங்கி பொருளாதாரம், வங்கித்தொழில், நிதி ஆகிய துறைகளில் இற்றை வரை பூரணப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தினையும் கொண்ட பெறுமானம் மிக்க மனிதவள குழுவொன்றினைக் கொண்டிருக்கின்றது. இவ்வறிவினைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மத்திய வங்கி பல்வேறுபட்ட கல்வி சார்ந்த மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி வருகின்றது.
வங்கித்தொழில் கற்கைகளுக்கான நிலையம் http://www.cbscbsl.lk/ பரணிடப்பட்டது 2011-09-11 at the வந்தவழி இயந்திரம் ஆண்டு முழுவதும் பரந்தளவிலான பாட நெறிகளை வழங்கி வருகின்றது. பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறைகளில் தற்போதைய விடயங்கள் தொடர்பாக தமது அறிவினை பூரணப்படுத்திக் கொள்ள ஆர்வமுடைய கல்விமான்கள் மற்றும் பொதுமக்களுக்காக பொது விரிவுரைத் தொடர்களும் நடத்தப்படுகின்றன.
தகவல்களைப் பரப்புவதற்காகவும் பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறைகளில் ஏற்படும் அபிவிருத்திகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் தொடர்பூட்டல் திணைக்களம் வங்கியின் மற்றைய திணைக்களங்களின் உதவியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி வருகின்றது. வங்கி அநேக வெளியீடுகளை வெளியிட்டிருக்கின்றது. இவற்றினூடாக நாட்டின் பொருளாதாரம், நிதி மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியினால் பேணப்பட்டு வரும் நாணய அரும்பொருட்காட்சிச்சாலை பழைய நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத் தாள்களைக் கொண்ட பெறுமதிமிக்க சேகரிப்புக்களைக் கொண்டிருப்பதுடன், முன்கூட்டியே நியமனம் பெறப்பட்டிருப்பின் அரும்பொருட்காட்சிச்சாலைக்கு பொதுமக்கள் வரவினையும் அது வரவேற்கின்றது.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Alliance for Financial Inclusion". Alliance for Financial Inclusion | Bringing smart policies to life. Archived from the original on September 27, 2015. பார்க்கப்பட்ட நாள் Sep 23, 2020.
- ↑ "AFI members". AFI Global. 2011-10-10. Archived from the original on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
- ↑ "About the Bank- Overview | Central Bank of Sri Lanka". www.cbsl.gov.lk. பார்க்கப்பட்ட நாள் Sep 23, 2020.