மலையகம் (இலங்கை)

மலையகம்

இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக சப்ரகமுவா குன்றுகளைத் தவிர்த்து கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி, மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி, இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. அதனடிப்படையில் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் மலையகத்தின் சமுகஞ்சார் வரைவிலக்கணத்தில் உள்ளடங்குவதோடு, சில வேளைகளில் கொழும்பு, காலி மவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன.

அதற்கமைவாக மலையகத்தில் வாழும் தமிழர்களையும் குறிக்கும் பொது சொல்லாக மலையகத் தமிழர் என்றும், மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரை, மலையக தோட்டத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளன.

மலையக தோட்டத் தொழிலாளர்கள்

தொகு

"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" என்போர் குறிப்பாக இலங்கையின் மத்தியப் பிரதேசமான மலைப்பிரதேசங்களில் பெருந்தோட்டப் பயிர்செய்கைகளுக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டும் குறிக்கும். அதேவேளை இலங்கையின் மத்திய பிரதேசம் அல்லாத ஏனையப் பகுதிகளின் பெருந்தோட்டப் பயிர்செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்களையும் "மலையக தோட்டத் தொழிலாளர்கள்" எனும் வழக்கு உள்ளது.

மலையகத் தமிழர்

தொகு

"மலையகத் தமிழர்" எனும் சொற்பதம், மலையக தோட்டத் தொழிலாளர்களையும் குறிக்க பயன்பட்டாலும்; தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத, அதேவேளை மலையகப் பிரதேசங்களின் நகர் பகுதியில் வணிகம் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ளோரையும் உள்ளடங்களாக குறிக்கும் பொது பெயராக பயன்படுகிறது. மலையகப் பிரதேசங்களில் ஒன்றான கண்டி நகரின் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் போன்றோரும் மலையகத் தமிழர் என்று அழைக்கப்படுகிறது. அதேவேளை மலையகப் பிரதேசங்களில் மட்டுமன்றி, மலையகத்தின் வெளி பிரதேசங்களில் சென்று தொழில் புரிவோரும், வசிப்போரும் "மலையகத் தமிழர்" என்றே அழைக்கப்படுகிறது.

அதேவேளை வணிகம் மற்றும் ஏனைய தொழில்கள் அடிப்படையில் இலங்கையின் தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, தற்போது அப்பகுதியை தமது வாழ்விடமாக கொண்டு வாழ்வோர், மலையக தோட்டத் தொழிலாளர்களின் வழி வந்தோர் என்றாலும், தோட்டத் தொழில் அல்லாதோர் வழி வந்தவர் என்றாலும் "மலையகத் தமிழர்" என்றே அழைக்கப்படுத்துவது குறிப்பிடத் தக்கது.

இந்திய வம்சாவளித் தமிழர்

தொகு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கும் புடைவை மொத்த வணிகத்தின் உள்ளோர், கொழும்பு செட்டியார் தெருவில் நகை வணிகத்தில் இருப்போர், கொச்சிக்கடை போன்ற பிரதேசங்களில் நெடுங்காலமாக இந்தியாவில் இருந்து வந்து குடியேறி வசிப்போர், பிற தொழில்களூக்காக வந்து வசிப்போர் "மலைக தோட்டத் தொழிலாளர்" என்றோ, "மலையகத் தமிழர்" என்றோ அடையாளப் படுத்துவதில்லை. இவர்களை இலங்கையின் இந்தியத் தமிழர்கள் என்ற வரையரைக்குள் மட்டுமே பார்க்க முடியும். சில நேரங்களில் இவர்களை "கொழும்பு தமிழர்" என்றும் அழைக்கப்படுவது உண்டு.

அதேவேளை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து வாழும் அனைத்து தமிழர்களையும் குறிக்கும் பொது பெயர்களாகவே "இந்தியத் தமிழர்கள்" மற்றும் "இந்திய வம்சாவளித் தமிழர்கள்" போன்றன உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையகம்_(இலங்கை)&oldid=3675822" இலிருந்து மீள்விக்கப்பட்டது