மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்

மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம் எனப்படுவது, மாமல்லபுரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாறையின் கிழக்குப் பார்த்த முகப்பில் அமைந்துள்ள குடைவரை ஆகும். இதற்கு அத்தியந்தகாம பல்லவேச்சுர கிருகம் என்ற பெயரும் உண்டு. இது பாதையில் இருந்து உயரத்தில் உள்ளதால் இதை அடைவதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மண்டபத்தில் இரண்டு வரிசையில் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவரை அண்டி இரண்டு அரைத் தூண்களும் உள்ளன. முழுத்தூண்கள் மேலும் கீழும் சதுரக் குறுக்குவெட்டு முகம் கொண்டனவாகவும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை அமைப்புக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. பின்பக்கச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறை சற்றே அளவில் பெரியது. நடுக் கருவறையின் முகப்புச் சுவர் சற்று முன்புறம் துருத்தியபடி உள்ளது. இதன் வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.[1] கருவறைகளில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. நடுக் கருவறையில் சிவனும், ஏனைய இரண்டிலும் நான்முகனும் திருமாலும் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. நான்முகனுக்குப் பதிலாக ஒரு கருவறையில் முருகனை வைத்து வணங்கியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[2]

இக்குடைவரையில் ஒரு வடமொழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இக்கோயிலின் பெயர் "அத்தியந்தகாம பல்லவேஸ்வர கிருகம்" எனக் குறிப்பிடுகிறது. "அத்தியந்தகாமன்" என்னும் பெயர் முதலாம் பரமேசுவரவர்மனைக் குறிக்கும் என்றும், இக்கல்வெட்டில் இதே மன்னனுக்கு உரிய விருதுப்பெயர்களான சிறீநிதி, சிறீபரன், ரணசெயன், தாருணாங்குரன், காமராசன் போன்றனவும் உள்ளதால் இது முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3] ஆனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் கலைப்பாணி பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலக் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இக்குடைவரை மகேந்திரவர்மன் காலத்தது என்று சிலர் கருதுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 70
  2. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக். 88
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 70