மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்

மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம் என்பது, சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று. இது ஒரு முற்றுப் பெறாத குடைவரை. கோனேரி மண்டபம் எனப்படும் குடைவரைக்கு அண்மையில், உயரமான இடத்தில் உள்ள பாறையொன்றில் இது குடையப்பட்டுள்ளது. இதன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இக்குடைவரை மாமல்லன் காலத்தின் இறுதிப் பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது.[1]

அமைப்பு

தொகு

இக்குடைவரை அதிக ஆழமில்லாத, நீளமான செவ்வக வடிவத்துடன் கூடிய மண்டபத்தைக் கொண்டது. இதில் ஒரு தூண் வரிசை மட்டுமே உள்ளது. இவ்வரிசையில் நான்கு முழுத் தூண்களும், பக்கச் சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத் தூண்களும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சிம்மத்தூண்கள். தூண்களின் கீழ்ப் பகுதியில், இருக்கும் நிலையில் உள்ள சிங்கங்கள் மேற்பகுதியைத் தாங்கியிருப்பது போன்ற வடிவில் அமைந்தவை. பின்புறச் சுவரில் உள்ள அடையாளங்களைக் கொண்டு இக்குடைவரையில் ஐந்து கருவறைகள் அமைக்கப்பட இருந்தது தெரிகிறது. நான்கு கருவறைகளின் வாயிற் பகுதிகள் மட்டும் குடையப்பட்டுள்ளன. ஐந்தாவது கருவறையில் பணிகள் தொடங்கவில்லை.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 82
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 82