மார்கழி நோன்பு

மார்கழி நோன்பு இது ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் இந்துக் கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு ஆகும். இந்நாள்களில் விடியற்காலை எழுந்து நீராடி தூய்மையான ஆடை அணிந்து அவரவர் விருப்பமான கோவிலிற்குச் சென்று இறை வழிபாடு செய்வர்.[1]

பாவை நோன்பு

தொகு

மார்கழித் திங்களில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் பொழுது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோவிலிற்குச் சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாடி மகிழ்வர்.

நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும், கண்ணிற்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பைக் கடைபிடிப்பர்.

திருவெம்பாவை நோன்பு

தொகு

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழித் திங்கள் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாள்களிற்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் விடியற்காலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளிற்குச் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோவிலிற்குச் சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். திருவெம்பாவை பாடல்களை கோவில்களில் பாடுவது வழக்கம். சிவகாமி உடன் இருக்கும் நடராசரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.

திருவாதிரை நோன்பு

தொகு

திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நாளில் நோற்கும் ஒரு நோன்பாகும். இந்நோன்பு சிவனிற்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆருத்திரர் என்றும் கூறுவர்.

மார்கழித் திங்கள் திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவன் கோவில்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின்னிரவு விடியற்காலை வேளையில் நடராசப் பெருமானிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் ஞாயிறு உதயத்தில் ஆருத்திரர் தரிசனம் நடைபெறும். நோன்பைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை நாள் உண்ணாநோன்பு இருந்து மறுநாள் பாரயணஞ் செய்வர்.

மேற்கோள்கள்

தொகு
  1. பாவை நோன்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கழி_நோன்பு&oldid=3876780" இலிருந்து மீள்விக்கப்பட்டது