மார்ட்டின் விக்கிரமசிங்க

மார்ட்டின் விக்கிரமசிங்க (Martin Wickramasinghe, மே 29, 1890 - ஜூலை 23, 1976) சிங்கள எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியரும் ஆவார். புதினம், சிறுகதை கவிதை, நாடகம், விமர்சனம் ஆகிய அத்தனை துறையிலும் எழுதியுள்ளார்.

மார்ட்டின் விக்கிரமசிங்க
பிறப்பு(1890-05-29)மே 29, 1890
கொக்கலை, இலங்கை
இறப்புசூலை 23, 1976(1976-07-23) (அகவை 86)
பண்டாரவளை, இலங்கை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

1890, மே 29 இல் இலங்கையின் தென் மாகாணத்தில் ஹபரதுவ தேர்தல் தொகுதியிலுள்ள கொக்கலை என்னும் ஊரில் புஞ்சி எலிசார குடும்பத்தில் பத்துப் பேரில் ஒரே ஆண்மகனாகப் பிறந்தார். சொந்தக் கிராமத்திலே சிங்களக் கல்வியைப் பெற்ற மாட்டின் விக்கிரமசிங்க காலி உனவடுன பொனவிஸ்டா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியை பெற்றார்.

சிறு வயதிலே தந்தையை இழந்துவிட்டார். வளரும் பருவம்வரை தெற்கின் கடற்கரையோரத்தின் கிராமப் புறத்திலேயே வாழ்ந்தார். பின் கொழும்பில் ஒரு புத்தகசாலையில் எழுத்தராகச் சேர்ந்தார். ஆங்கிலப் புத்தகங்களை அதிகமாக வாசித்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதினார். அதன் மூலமே பிற்காலத்தில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக வர முடிந்தது.

1946 ஆம் ஆண்டு வரை தினமின சிங்களப் பத்திரிகையில் பணிபுரிந்து எழுத்துத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டினார். 1914 ஆம் ஆண்டு வெளியிட்ட லீ லா என்ற புதினத்தை எழுதினார். புதின இலக்கியத்தில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்திற்காக வித்தியாலங்கார பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது.

இவர் சோசலிசக் கொள்கையை விரிவாக ஆராய்ந்து பல ஆக்கங்கள் வெளியிட்டுள்ளார். பரிணாமவாதத்தை சிங்களத்திற்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவரும் இவரே. கிராமப்புற மனிதனையும் கிராமப்புற சூழ்நிலைகளையும் அதிகமாக நேசித்தவர். இதனால் இவரின் சிறுகதைத் தொகுப்பில் அதிகமானவை இன்றும் காலத்தால் அழியாத தன்மையுடையனவாக இருக்கின்றன. கஹனியக் ‘பெண் ஒருத்தி’ என்ற கதைத் தொகுதி வஹல்லு ‘அடிமை’ என்ற கதைத் தொகுதி போன்றவை புகழ் வாய்ந்தவை.

பல்வேறு உலக மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. உருசிய மொழியில் அநேக நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய, தமிழ் ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் விற்கப்படுகின்றன.

1925 ஆம் ஆண்டு மாட்டின் விக்கிரமசிங்க சதபுவே பலகே பிரேமா விக்கிரமசிங்கா என்பவரைத் திருமணஞ் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் மக்களும் மூன்று ஆண் மக்களும் இருக்கின்றனர். ஆறு பேருமே பல்கலைக்கழகப் பட்டதாரிகளாவர்கள்.

இவரது அதிமுக்கிய, இறுதியான நூல் "ஸ்ரீபவத்தரன" ஆகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவர் இந்த நூலில் எழுதியுள்ளார். சித்தார்ந்த குமாரன், புத்தராகும் வரையிலான வரலாற்றுக் காலத்தை குறிப்பிட்ட போது, புத்தரைச் சித்தார்த்த குமாரரின் கோலத்தில் நிறுத்திப் பக்திபூர்வமாக இல்லாது, மதிப்புக் குறைவாக எழுதிவிட்டார் என்றும், புத்தரை இழிவுப்படுத்திவிட்டார் என்றும் பலர் நாடெங்கும் சர்ச்சை சரமாரியான விமர்சனங்களை எழுதினர். இந்த நூலைச் சட்டவிரோதமாக்கக் கோரிக் கூட்டங்கள் கூட நடத்தினர். அத்தனை எதிர்ப்புக்களையும் சமாளித்தார். தன் கைப்பட எழுதிய ஒவ்வோர் எழுத்துக்கும் பூரண பொறுப்பேற்று விளக்கமும் தந்தார்[1].

இவர் ஒரு தத்துவவியலாளராக, கலைஞராக, சமூகவியல் ஆய்வாளராக என பல தளங்களில் கால் பதித்துள்ளார். இவர் 60 ஆண்டுகளாக சேகரித்து தனது சொந்த வாசிகசாலையில் வைத்திருந்த சுமார் 5000 அபூர்வ நூல்கள் மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தால் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவை நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வாளர்கள் பார்வையிடவும் உசாத்துணையாக பயன்படுத்தவும் முடியும்.

விபுலாநந்த அடிகளாரைத் தலைவராகக் கொண்டு 1947 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை எழுத்தாளர் சங்கத்தில் மார்ட்டின் விக்கிரமசிங்க உப தலைவராக இருந்தார்.

தற்போது மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தினர் அவரது 94 நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாத்தறை பிரதேசத்தில் கொக்கலையில் அமைந்துள்ள இவரது பிறந்த இல்லம் கிராமிய கலை அரும்பொருட் காட்சி நிலையமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. எச். எம். பி. முகைதீன், தினகரன் வாரமஞ்சரி, 01.08.1976

வெளி இணைப்புகள்

தொகு