மிகுமக்கள்தொகை
மிகுமக்கள்தொகை (human overpopulation) என்பது ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை அதன் வாழிடத்தின் தாங்குத் திறனை விட கூடுதலாக இருக்கும் நிலையைக் குறிக்கும். மிகு மக்கள் தொகை உலக மக்கள் தொகைக்கும் சுற்றுச்சூழலுக்கும், புவிக்கும் உள்ள உறவாடலைக் குறிக்கும்.[1]
மிகு மக்கள் தொகை மக்களின் எண்ணிக்கை, பரவலை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கும் அவற்றுக்கு கிடைக்கும் பேணவல்ல வாழ்வாதாரங்களுக்கும் உள்ள விகிதமும், அந்த ஆதாரங்களைப் பெறுவதற்கும் பிரித்து வழங்குவதற்கும் உள்ள வழிமுறைகளும் ஒரு மக்கள் தொகை மிகுந்துள்ளதா என்பதை முடிவு செய்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு, ஒரு வெளித்தொடர்பு இல்லா ஊரில் பத்து பேர் உள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு உணவு, நீர் போதுமானதாக உள்ளது. ஆனால், பத்தாவது ஆளால் உணவு, நீரைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. என்றால் இந்த ஊரில் மக்கள் தொகை மிகுந்துள்ளது. அதுவே, 100 பேர் உள்ள ஊரில் 200 பேருக்கு உரிய உணவு, நீர், உறைவிடம் முதலியவை முடிவற்றுப் பல தலைமுறைகளுக்கும் கிடைக்கும் நிலை இருந்தால், இந்த ஊரின் மக்கள் தொகை அளவோடே உள்ளது.
பிறப்பு வீதம் உயர்வு, மருத்துவத்துறை முன்னேற்றங்கள் முதலிய காரணங்களால் குறையும் இறப்பு வீதம், கூடும் குடிப்பெயர்வு, பேண இயலா உயிர்வளங்கள், குறைந்து வரும் வாழ்வாதரங்கள் முதலியன மிகு மக்கள் தொகைக்கு காரணங்களாக அமைகின்றன.
ஒரு வாழிடம் மனிதர் வாழ மிக கடினமான பகுதியாக இருக்கும். நிலையில் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தி, எண்ணிக்கை கூட மிகுந்த மக்கள் தொகையாக கருதப்படும். எடுத்துக்காட்டுக்கு, சகாரா பாலைவனம், அன்டார்ட்டிக்கா முதலிய இடங்கள்.
ஒரு வாழிடத்தில் மக்கள் தொகை மிகுந்துள்ளதா என முடிவு செய்ய, தூய்மையான குடிநீர், தூய்மையான காற்று, உணவு, உறைவிடம், வெயில் முதலிய ஆதாரங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். மேம்பட்ட வாழ்க்கைத்தரமும் ஒரு அளவீடாக இருந்தால், மருத்துவம், கல்வி, கழிவுநீர் அகற்றல், திடக்கழிவு அகற்றல் போன்ற கூடுதல் வசதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மக்கள் தொகை மிகுவதால், வாழ்க்கைக்கு அடிப்படையான வளங்களுக்கு மிகுந்த போட்டி நிலவும்.[2]
அணு ஆற்றல், உப்பகற்றல், வேளாண்மை முதலிய நுட்பங்களைக் கொண்டு சில நாடுகள் தங்கள் தாங்கு திறனை கூட்டியுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Global food crisis looms as climate change and population growth strip fertile land
- ↑ Ron Nielsen, The Little Green Handbook: Seven Trends Shaping the Future of Our Planet, Picador, New York (2006) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-42581-4