மிதிலைப்பட்டி கவிராயர்கள்

மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் எனப்படுவோரின் முதல்வர் ஆதி சிற்றம்பலக் கவிராயர். இவர் முன்னோர் மல்லையூரில் வாழ்ந்தனர். இம் மல்லையூர் எது என்பது பற்றி பல ஊகங்கள் நிலவுகின்றன. சிதம்பரத்திற்கு அருகிலுள்ள கொல்லிமல்லையே மல்லையூர்[1].

மிதிலைப்பட்டி வருகை

தொகு

ஆதி சிற்றம்பலக் கவிராயர் வெங்கள நாயக்கர் மீது குறவஞ்சி பாடி மிதிலைப்பட்டியை மடப்புறமாய்ப் பெற்றார் என்றே பல நூலாசிரியர்களும் கவிராயர் குடும்பத்தினரும் கருதுவர். வெங்களப்ப நாயக்கர் மீது குறவஞ்சி பாடிச் சாலிவாகன சகாப்தம் 1571 (கி.பி.1647) சர்வதாரி ஆண்டு வைகாசித் திங்கள் ஆறாம் நாளில் மிதிலைப்பட்டி கிராமத்தைப் பெற்றார் எனக் கூறுவர்.

கவிராயர்களின் மிதிலைப்பட்டி வருகைக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. ஆதி சிற்றம்பலக் கவிராயர் பண்டார குலத்தினர். பண்டாரம் என்பது கருவூலத்தைக் குறிக்கும். கருவூலக் காப்பாளர்கள் பண்டாரம் எனப்பட்டனர் என்கிற கருத்தும் உள்ளது. தில்லைநாயகப் பண்டாரம், சிற்றம்பலப் பண்டாரம் என்ற பெயர்கள் அவர்களின் தொழிலைக் காட்டுகின்றன. எனவே சிற்றம்பலப் பண்டாரத்தைத் தீத்தாரப்பர் சிதம்பரம் நடராசரின் உச்சிக்காலக் கட்டளைக்கு நியமித்தது உண்மை என்று தெரிய வருகிறது. ஆகவே உச்சிக்காலக் கட்டளைப் பொறுப்பை ஏற்று நடத்த மிதிலைப்பட்டியில் குடியேறினார் சிற்றம்பலப் பண்டாரம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. பின்னரே வெங்களப்ப நாயக்கரைப் பாடி மிதிலைப்பட்டியைப் பெற்றார். பண்டாரமாக மிதிலைப்பட்டிக்கு வந்த ஆதி சிற்றம்பலத்தார் பின்னர் கவிராயராக மிதிலைப்பட்டியை முற்றூட்டாகப் பெற்றார்.

மிதிலைப்பட்டி கவிராயர்கள்

தொகு

மிதிலைப்பட்டி கவிராயர் சமூகம்

தொகு

மிதிலைப்பட்டி கவிராயர்கள் ஒரு சமூகமாக வாழ்ந்தவர்கள். அவர்களில் பெரும் பாடல் பாடியவர்கள் மிதிலைப்பட்டியிலும், அவர்களின் கிளை வழியினர் செவ்வூர் மற்றும் காரைச்சூரான்பட்டியில் வசித்தனர்.[1] இம்மூன்று ஊர்களுக்கும் உ.வே.சா சுவடிகளைச் சேகரிக்கும்போது சென்று வந்தார்.[2][3]

கவி பாடுதல்

தொகு

ஆதி சிற்றம்பலக் கவிராயரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பல புரவலரைப் பாடிப் பரிசாகப் பல ஊர்களைப் பெற்றார். மிதிலைப்பட்டிப் புலவரான குமாரசாமிக் கவிராயர் ஆதிசிற்றம்பலக் கவிராயர் பரிசில் பெற்ற ஊர்களைப் பற்றிப் பாடும்போது இவ்வாறு சொல்கிறார்.

"வாங்கின பூமி வழுத்துவேன் நான்சிலது

பாங்கான பூசாரி பட்டிசெம் மலவுபட்டி

அடுத்தபுல வன்குடியு மாககவி ராயர்பட்டி

கொடுத்த கொத்த மங்கலமும் கோனாடு பட்டியுடன்

மறவணி யேந்த லென்றும் மண்மேட்டுப் பட்டி யென்றும்

திறமான செவ்வூ ரென்றுந் தேனாட்சி பட்டியுடன்

காரைச்சூரான் பட்டியும் கருகைப்பிலான் பட்டியும்'

(குமாரசாமிக்கவிராயர், சுசீலவள்ளல் அம்மானை, ப-102.) [1]

பூசாரிபட்டி, செம்மலவுபட்டி, புலவன்குடி, கவிராயர்பட்டி, கொத்தமங்கலம், கோனாடுபட்டி, மறவணியேந்தல், மண்மேட்டுப்பட்டி, செவ்வூர், தேனாட்சிபட்டி காரைச்சூரான்பட்டி, கருகைப்பிலான்பட்டி என்பன ஆதிசிற்றம்பலம் பெற்ற ஊர்கள் என்று இப்பாடலின் மூலம் தெரிகிறது.

இவர்கள் தலைவர்களை மட்டுமின்றி இறைவனையும் பாடினர்.

வாழ்வியல்

தொகு

கவிராயர்கள் செட்டிநாட்டு பழக்கங்களைப் பின்பற்றியது போல தெரியவருகிறது. முருகன் வழிபாடு செய்பவர்கள். பழநி முருகனுக்கு கவிமாலை செலுத்தியவர்கள். தவிர, கவிராயர் இனக்குழுவினர் தங்கள் குடும்பத்தின் பெண் தெய்வ வழிபாடு செய்பவர்கள். சரஸ்வதி பூஜை விமரிசையாகக் கொண்டாடுவர். அன்று பனை ஓலைச் சுவடிகளை அடுக்கி சிறப்பு ஆராதனைகள் செய்து அன்னதானம் செய்வர்.

வீழ்ச்சி

தொகு

நாயக்கர்களுக்குப் பிறகு தமிழ் புலமைக்கான தேவை அழிந்தது. அதன் காரணமாக கவிராயர்கள் வேறு வேறு தொழில்கள் செய்யும் படி ஆனது.[1] தற்பொழுது மிதிலைப்பட்டியில் கவிராயர் வீடு சிதலமடைந்து காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும். சிங்கப்பூர்: தருமு பதிப்பகம். p. 37.
  2. அனந்தன் (December 1990). நாம் அறிந்த கி.வா.ஜ. சென்னை: அல்லயன்ஸ் கம்பெனி.
  3. மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் (1950). என் சரித்திரம். சென்னை: கபீர் அச்சுக்கூடம்.