மிர்சா சாகிபான்

மிர்சா சாகிபா (Mirza Sahiba பஞ்சாபி மொழி: ਮਿਰਜ਼ਾ ਸਾਹਿਬਾਂ, مرزا صاحباں, mirzā sāhibāṁ), பஞ்சாபின் அதிகப் பிரபலமான நான்கு சோகக் காதற்காவியங்களுள் ஒன்றாகும். [1][2] இந்நான்கு தவிர மேலும் ஐந்து பஞ்சாபி சோக காவியங்கள் உள்ளன. இக்காவியங்கள் பஞ்சாபி மற்றும் சிந்து மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தோடு இணைந்தவையாகும்.

இக்கதையின் நாயகன் பாக்கித்தானின் பைசலாபாத்தின் ஜரன்பாலா பகுதியிலுள்ள தனாபாத் ஊரில் காரல் இனத்தலைவர் வான்சால் கானின் மகனாவான். நாயகி சாகிபா பாக்கித்தான், ஜாங் மாவட்ட்ட சியால் பகுதியிலுள்ள ஒரு ஊரின் தலைவரின் மகளாவாள்.[3]

கதைச் சுருக்கம்

தொகு

வெகுகாலத்திற்கு முன்பு, ஜாட் இனத்தின் சியால் பழங்குடியினரின் வசமிருந்த கீவா என்ற ஊரில் ஒரு பெண்மணி ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவள் குழந்தை பிறந்தவுடன் இறந்து போனதால் அக்குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கவில்லை. சமீபத்தில் பெண்குழந்தை பெற்ற மற்றொரு பெண் தன் குழந்தையுடன் சேர்த்து தாயற்ற அந்த ஆண்குழந்தைக்கும் தாய்ப்பாலூட்டினாள். ஒரே தாயின் பாலருந்தி வளர்ந்ததால் அப்பகுதி வழக்கப்படி இரத்த உறவற்ற அவ்விரு குழந்தைகளும் ஒருவகையில் சகோதர-சகோதரி ஆகினர்.

காலப்போக்கில் அப்பெண்குழந்தை (ஃபடே பீபி) வளர்ந்து கார்ரல் ஜாட்டுகளின் சர்தார் வாஞ்சாலுடன்திருமணமாகி தனபாபாத் (இன்றைய பைசலாபாத்துக்கருகில்) என்ற ஊருக்குச் சென்று விட்டாள். அவர்களுடைய மகன் மிர்சா ஜாட் ஆவான். அவன் நல்ல பலசாலியாகவும் வில்வித்தையில் சிறந்தவனாகவும் இருந்தான். அதேசமயம் அந்த ஆண்குழந்தை வளர்ந்து பெரியவனாகி அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். அவளது பெயர் சாகிபா. மிர்சாவைக் கல்வி பயில்வதற்காக அவனது பெற்றோர் சாகிபாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை சாகிபாபின் பெற்றோரும் சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. மிர்சாவை அவனது ஊருக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, சாகிபாவுக்குத் திருமணம் ஏற்பாடு செய்தனர்.

தனது திருமண ஏற்பாடு பற்றிய செய்தியைத் தனது தோழியின் வாயிலாக சாகிபா மிர்சாவுக்குத் தெரியப்படுத்தினாள். செய்தியறிந்த மிர்சா சாகிபாவின் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானான். அவர்களது பெற்றோர் தடுத்தும் அவன் கேட்காததால் அவனது தந்தை இறுதியில் தனது சம்மதத்தைத் தெரிவித்து, அவன் சாகிபாவுடன் தான் திரும்பவேண்டும் என்ற உறுதியையும் பெற்றுக்கொண்டார். சாகிபாவின் திருமணத்தன்று அங்கு சென்ற மிர்சா, சாகிபாவை அங்கிருந்து யாருமறியாமல் தன் குதிரை மீதமர்த்தி மீட்டு வந்தான். பாதுகாப்பான தூரத்தைக் கடந்தபின் களைப்பாற எண்ணிய மிர்சா, சாகிபாவை விழித்திருக்கச் சொல்லிவிட்டு கண்ணயர்ந்தான்.

திருமண வீட்டில் சாகிபாவைக் காணாத அவளது சகோதரர்களும் மணமகனும் அவளைத் தேடிப் புறப்பட்டுச் சென்றனர். விழித்திருந்த சாகிபா, தனது சகோதர்களைத் தன்னைத் தேடித் தொடர்ந்து வந்தால் மிர்சாவின் வில்லாற்றலால் தனது சகோரர்கள் இறப்பது உறுதி என்று பயந்ததால் மிர்சாவின் அம்புகளை ஒடித்துப் போட்டுவிட்டாள். தேடிச் சென்றவர்கள் மிர்சாவும் சாகிபாவும் இருந்த இடத்தை அடைந்ததும் சாகிபாவின் சகோதரன் மிர்சாவின் தொண்டையை நோக்கி அம்பெய்ய, விழித்துப்பார்த்த மிர்சா தனது அம்புகள் அனைத்தும் ஒடித்துக் கிடக்கக் கண்டு கேள்விப்பார்வையுடன் சாகிபாவை நோக்கினான். ஆனால் மீண்டும் சாகிபாவின் சகோதரன் மிர்சாவின் இதயத்தில் அம்பெய்ததால் மிர்சாவும் அவன்மீது சாய்ந்த சாகிபா இருவரும் ஒன்றாக இறந்து போயினர்.

பரவலான கலாச்சாரத்தில்

தொகு

மிர்சா சாகிபான் கதை பஞ்சாபிப் பண்பாட்டின் ஒரு அங்கமாக உள்ளது. இக்கதை பற்றிய பல நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. 1982 இல் வெளியான மிர்சா ஜாட் திரைப்படத்தின் மிர்சா என்ற பாடல் மிகவும் பேசப்பட்ட ஒன்றாகும். மிர்சா- சொல்லப்படாத கதை (2012), மிர்சா-சாகிபா கதையின் தற்கால வடிவாகும். இக்கதையை முதன்முதலில் பாடல் வடிவிலமைத்தவர் பழம்பெரும் பஞ்சாபிப் பாடகர் ஆலம் லோகர் (1941) ஆவார். அவரைத் தொடர்ந்து மேலும் பல பஞ்சாபிப் பாடகர்கள் அவர் பாணியைப் பின்பற்றி இக்கதையைப் பாடியுள்ளனர். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் இயக்கத்தில் 2016 இல் வெளியான மிர்சயா திரைப்படத்தின் கதை மிர்சா-சாகிபா கதையின் அடிப்படையில் அமைந்ததாகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19.
  3. https://www.sikhiwiki.org/index.php/Mirza_Sahiban

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்சா_சாகிபான்&oldid=3567636" இலிருந்து மீள்விக்கப்பட்டது