முசுண்டை மலர்
முசுண்டைக்கீரை மக்கள் தேடிப்பிடித்து இக்காலத்தில் உண்ணும் கீரை வகைகளில் ஒன்று.
இதுபற்றிச் சங்கநூல்களில் உள்ள குறிப்புகள் இவை.
- முசுண்டைப் பூவின் நிறம் வெள்ளை. வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை - மலைபடுகடாம் 101, குவையிலை முசுண்டை வெண்பூ - அகநானூறு 94-2, குழை அமல் முசுண்டை வாலிய மலர - அகநானூறு 264-2,
- முசுண்டை மொட்டு கருப்பாக இருக்கும். பின் அது வெண்ணிறத்தில் பூத்து வானத்து மீன்கள் போல் ஆங்காங்கே தோன்றும். கரிமுகிழ் முசுண்டை பொதி அவிழ் வான்பூ விசும்பு அணி மீனின் புதல் பிதல் அணிய - அகநானூறு 235-9,
- கூதிர் காலத்தில் பூக்கும் மலர்களில் ஒன்று முசுண்டை. இது பொன்போல் பூக்குப் பீர்க்கம் பூவோடு வெள்ளை நிறத்தில் பூத்துக் கிடக்குமாம். புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப் பொன்போல் பீரமொடு புதல் புதல் மலர - நெடுநல்வாடை 13
- சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் நன்மாவிலங்கை என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் ஓய்மான் நல்லியக்கோடனிடம் பாணனை ஆற்றுப்படுத்தும் செய்தியைக் கூறுகிறது. எயிற்பட்டினத்திலிருந்து ஆமூர் செல்லும் வழி முல்லைநிலம். அங்குப் பூத்துக்கிடக்கும் மலர்களில் ஒன்று முசுண்டை. அது கொழுங்கொடியாம். அது ஆங்காங்கே திட்டித் திட்டாக பூத்துக் கிடந்த்தாம். கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறுபாணாற்றுப்படை - 166
- பாண்டிய நாட்டு முல்லைநிலத்தில் கொன்றைப்பூக்களிம், முசுண்டைப் பூக்களும் உதிர்ந்து கிடந்த இடத்தில் நௌவி மான்கள் விளையாடித் திளைத்தனவாம். இங்கு முசுண்டைப் பூக்கள் முல்லைப் பூவின் மேல் வெள்ளி போல் உதிர்ந்து கிடந்தனவாம். வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து கரிமுகிழ் முசுண்டை முல்லைத் தாஅம் - மதுரைக்காஞ்சி 281
- வீட்டு முற்றத்தில் முஞ்ஞை, முசுண்டை ஆகிய கொடிகள் பம்பிப் படர்ந்து நல்ல நிழல் தருமாம். புறநானூறு 320-1