ஆதித்த சோழன்

சோழ மன்னர்
(முதலாம் ஆதித்தன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆதித்த சோழன் (பொ.ஊ. 871–907), கோப்பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.[1]

ஆதித்த சோழன்
ஆட்சிக்காலம்பொ.ஊ. 870/1–907
முன்னையவர்விசயாலய சோழன்
பின்னையவர்முதலாம் பராந்தக சோழன்
பிறப்புஆண்டு தெரியவில்லை
தஞ்சாவூர்
இறப்புகிபி 907
அரசிதிரிபுவனமாதேவியார்
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் பராந்தக சோழன்
தந்தைவிசயாலய சோழன்
தாய்அனகாவதி

மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள்

தொகு

பலம் மிக்க பல்லவ மன்னன் அபராசித வர்மனை தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைத்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராசகேசரி தன் இராச்சியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராட்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் பொ.ஊ. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கர் மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச அரசர்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

பல்லவர்களின் உள்நாட்டுப் போர்

தொகு

சோழர் நாட்டின் படையெடுப்பின் போது, பாண்டிய மன்னர் இரண்டாம் வரகுணவர்மன் பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மனின் மூத்த மகனான நிருபதுங்கனிடம் நட்புடன் இருந்தார்.

பொ.ஊ. 869 இல் நந்திவர்மன் இறந்தபோது, நிருபதுங்கனுக்கும் அவரது சகோதரன் அபராசித வர்ம பல்லவனுக்கும் இடையே வேறுபாடுகள் எழுந்தன, அநேகமாக இராச்சியத்தை தனது சொந்த உரிமையில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக இருக்கலாம். இரு தரப்பினரும் தங்களுக்கு உதவ நட்பு நாடுகளைத் தேடினர். அபராசித வர்மன் மேலைக் கங்க மன்னர் முதலாம் பிருத்விபதி மற்றும் முதலாம் ஆதித்த சோன் ஆகியோருடன் கூட்டணி வைத்திருந்தான். நிருபதுங்கன் வரகுண பாண்டியனிடம் நட்பு கொண்டிருந்தான். சில விளக்கங்களின்படி, அபராசித வர்மன் நிருபதுங்க வர்மனின் மகன் என்றும், அவரது தாயார் கங்க மன்னரின் மகள் பிருத்திவி மாணிக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, முதலாம் பிருதிவபதி நிர்பதுங்காவுக்கு எதிராகச் போரில் இறங்கினான் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 885 பொ.ச. இல் இரு நாட்டுப் படைகளும் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருப்புரம்பியத்தில் சந்தித்தன. பாண்டியர்கள் மற்றும் நிருபதுங்க பல்லவனின் படைகள் அபராசிதா பல்லவன் மற்றும் முதலாம் ஆதித்த சோழரால் விரட்டப்பட்டன. ஆனால் சில கல்வெட்டுகள் போரின் போது நிர்பதுங்கன் உயிருடன் இல்லை என்பதை தெளிவுபடுத்திகின்றன.  பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலான போர் என்பது தங்கள் ஆதிக்கத்தை நிறுவது என்பதேயாகும்

ஆதிக்கம்

தொகு

திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்றவர் அபராசிதன் என்றாலும், உண்மையான லாபங்கள் முதலாம் ஆதித்த சோழருக்கு சென்றன. இந்தப் போர் தெற்கில் பாண்டியர்களின் சக்தியின் முடிவை உறுதி செய்தது. பாண்டியன் வரகுணவர்மன் தனது அரியணையைத் துறந்து துறவற வாழ்க்கையைப் பின்பற்றினார். நன்றியுள்ள அபராசிதன், விசயாலய சோழர் வென்ற பிரதேசங்களை வைத்திருக்க ஆதித்த சோழனை அனுமதித்தது மட்டுமல்லாமல், தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்களிடமிருந்து புதிய பிரதேசங்களையும் சேர்க்க அனுமதித்தார்.

பல்லவ நாட்டின் மீது படையெடுப்பு

தொகு

அவரது ஆட்சியின் 32 ஆவது ஆண்டு பொ.ஊ. 903 ஆம் ஆண்டில், முதலாம் ஆதித்த சோழர், பல்லவ மன்னர் அபராசிதன் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தினார். பின்னர் நடந்த போரில், ஆதித்த சோழன் ஒரு யானை மீது ஏறி அவரைக் கொன்றார். இது தொண்டைமண்டலத்தில் (வடக்கு தமிழ்நாடு) பல்லவ ஆட்சியின் முடிவை ஏற்படுத்தியது மற்றும் பல்லவ இராச்சியம் முழுவதும் சோழ பிரதேசமாக மாறியது. இது தென்னிந்திய வரலாற்றில் ஒரு காலத்தில் பெரிய பல்லவ சாம்ராச்சியத்தின் பயனுள்ள முடிவைக் குறித்தது.  

இந்த வெற்றியின் மீலம் முதலாம் ஆதித்த சோழனுக்கு "தொண்டைநாடு பாவின இராசகேசரிவர்மன்" எனப் பெயர் பெற்றான்.

சேரர்களுடனான உறவுகள்

தொகு

முதலாம் ஆதித்த சோழன் ஆட்சியில் சேரர்களுகிடையே உறவுகள் இருந்ததாகத் தெரிகிறது. சமகாலத்திய சேர அரசன் தாணு ரவி ஆதித்த சோழனிடமிருந்து அரச மரியாதைகளைப் பெற்றதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதித்த சோழனின் மகன், முதலாம் பரந்தகன், தாணு ரவியின் மகளை மணந்தார்.

கோயில்களுக்கு ஆதித்ய சோழனின் பங்களிப்புகள்

தொகு

முதலாம் ஆதித்த சோழன் காவிரியின் கரையில் சிவனுக்காக 108 கோயில்களைக் கட்டியதாக அறியப்படுகிறது. கன்னியாகுமரி கல்வெட்டு முதலாம் ஆதித்த சோழன் கோதண்டராமன் என்ற குடும்பப்பெயரால் அறியப்பட்ட தகவலை நமக்கு வழங்குகிறது. மேலும் ஆதிதீசுவரர் என்றும் அதன் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டைமன்னனூர் அருகே கோதண்டராமேசுவர் என்ற ஒரு கோவில் உள்ளது. இது முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பொ.ஊ. 872–900 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையர் கருவறையையும் திருத்தியுள்ளார் ஆதிசங்கராச்சாரியாரின் விருப்பமான மாணவரான குமரில பட்டாவின் மாணவர்களாக இருந்த சுரேசுவர மற்றும் பிரபாகரனின் புரவலராகவும் முதலாம் ஆதித்த சோழன் இருந்தார்.

மறைவு

தொகு

சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் அவனுக்கு பள்ளிப்படை அமைத்தான் அது தற்காலத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்டுகிறது. பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

குறிப்புகள்

தொகு
  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 46–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  • Tamil And Sanskrit Inscriptions Chiefly Collected In 1886 - 87, E. Hultzsch, Ph.D., Published by Archaeological Survey of India, New Delhi
  • Nilakanta Sastri, K. A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
  • Nilakanta Sastri, K. A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
முன்னர் சோழர்
871–907 கி.பி
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்த_சோழன்&oldid=4062348" இலிருந்து மீள்விக்கப்பட்டது