முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)

முதலாம் பாஸ்கால் (Pope Paschal I) ஜனவரி 25, 817 முதல் பெப்ரவரி 11, 824 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 98ஆம் திருத்தந்தை ஆவார்.[1]

  • பாஸ்கால் என்னும் பெயர் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன். ஆகிய மொழிகளில் "உயிர்த்தெழுதல் சார்ந்த" என்று பொருள்படும்.
திருத்தந்தை முதலாம் பாஸ்கால்
Pope Paschal I
98ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்சனவரி 25, 817
ஆட்சி முடிவுபெப்ருவரி 11, 824
முன்னிருந்தவர்நான்காம் ஸ்தேவான்
பின்வந்தவர்இரண்டாம் யூஜின்
பிற தகவல்கள்
இயற்பெயர்பாஸ்காலே மாஸ்ஸிமி
Pascale Massimi
பிறப்புதெரியவில்லை
உரோமை; இத்தாலியா
இறப்பு(824-02-11)பெப்ரவரி 11, 824
உரோமை; இத்தாலியா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாபெப்ருவரி 11
பாஸ்கால் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தையாக நியமனம்

தொகு

பாஸ்கால் பிறப்பினால் உரோமை நகரைச் சார்ந்தவர். அவருடைய தந்தை பெயர் போனோசுஸ். இளமைப் பருவத்திலேயே அவர் உரோமைக் குருகுலத்தில் சேர்ந்தார். இலாத்தரன் அரண்மனையில் இருந்த கல்விக்கூடத்தில் திருப்பணியிலும் விவிலியப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

குருவாக இருந்த இவரை புனித பேதுரு பெருங்கோவிலின் அருகே இருந்த புனித ஸ்தேவான் துறவியர் மடத்தின் தலைவராக திருத்தந்தை மூன்றாம் லியோ நியமித்தார். அப்போது உரோமைக்கு திருப்பயணமாக வந்த மக்களுக்கு அவர் பணிபுரிந்தார்.

திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் காலமான (சனவரி 24, 817) உடனேயே பாஸ்கால் ஒருமனதாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் (817 ஜனவரி 25) அவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்; திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.

மன்னரோடு உறவு

தொகு

லூயிஸ் மன்னரோடு தமக்கு நெருங்கிய உறவு உண்டு என்பதைக் காட்டும் வகையில் திருத்தந்தை பாஸ்கால் பல தூதுவர்களை அனுப்பினார். லூயிஸ் மன்னரும் 817இல் "லூயிஸ் ஒப்பந்தம்" (இலத்தீன்: Pactum Ludovicum) என்னும் ஆவணத்தை எழுதி, திருத்தந்தைக்கு அனுப்பி, திருத்தந்தை தம் ஆட்சிப்பீடத்தை முறையாக ஏற்றுக்கொண்டார் என்று அங்கீகாரம் வழங்கினார். அந்த ஆவணம் இன்றும் உள்ளது.

லூயிஸ் மகன் லோத்தேர் (Lothair) திருமணம் செய்துகொண்ட போது திருத்தந்தை தூதுவர்கள் வழியாக அவருக்குப் பரிசுகள் அனுப்பினார். 823ஆம் ஆண்டு வசந்த காலத்தில் லோத்தேர் உரோமைக்குச் சென்றார். அங்கு ஏப்பிரல் 5ஆம் நாள் திருத்தந்தை பாஸ்கால் லோத்தாரைப் பேரரசனாக அறிவித்து, ஆடம்பரமாக அவருக்கு முடிசூட்டினார்.

சுருப வணக்கம் முறையானது என்னும் போதனை

தொகு

கிபி 814இல் பிசான்சிய மன்னர் அர்மேனிய லியோ (Leo the Armenian) என்பவரின் ஆட்சிக் காலத்தில் சுருப வணக்கத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது. லியோவால் சட்டமுறைக்கு எதிராககாண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதுவராக நியமிக்கப்பட்ட தியோடோசியுஸ் என்பவர் அரசனின் ஆணைக்குப் பணிந்தார். ஆனால் தியொடோர் என்னும் தலைமைத் துறவி (Theodore of Studium) சுருப வணக்கம் முறையானதே என்று வலியுறுத்திக் கூறினார்.

இதை விரும்பாத மன்னன் லியோ தியொடோரை நாடுகடத்தி கொடுமைப்படுத்தினார். அதே சமயத்தில் தியோடோசியுசும் திருத்தந்தைக்குத் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் திருத்தந்தை அவருடைய போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தியொடோருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர் துன்பங்களுக்கு நடுவிலும் உண்மையான கொள்கையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று ஊக்குவித்தார்.

நாடுகடத்தப்பட்ட துறவியருக்கு ஆதரவு

தொகு

சுருப வணக்கம் முறையானதே என்று கூறிய பல துறவியரை மன்னன் லியா கிரேக்க நாட்டிலிருந்து துரத்திவிட்டார். அத்துறவியரைத் திருத்தந்தை பாஸ்கால் மனமுவந்து வரவேற்றார். உரோமையில் புதிதாக நிறுவப்பட்ட புனித பிராக்சேதிஸ், புனித செசிலியா, புனிதர்கள் செர்ஜியுஸ் மற்று பாக்குஸ் ஆகிய துறவியர் இல்லங்களில் அத்துறவியரை உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டார்.

கோவில்களைச் சீரமைத்தல்

தொகு

திருத்தந்தை முதலாம் பாஸ்கால் பல கோவில்களைப் புதுப்பித்துச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக, புனித பிராக்சேதிஸ், புனித செசிலியா, தொமீனிக்கா புனித மரியா ஆகிய கோவில்களை முற்றிலும் புதுப்பித்துக் கட்டியதைக் குறிப்பிடலாம்.

இறப்பு

தொகு

ஏழாண்டு திருஆட்சிக்கு பின் கி.பி 824 பிப்ரவரி 11 ல் திருத்தந்தை பாஸ்கால் காலமானார். அவருடைய உடல் புனித பிராக்சேதிஸ் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை முதலாம் பாஸ்காலின் திருவிழா மே 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்

தொகு