மூலக்கூற்று இடைவிசை

மூலக்கூற்று இடைவிசை (intermolecular force) என்பது அருகருகே உள்ள அணுக்கள், மூலக்கூறுகள், மின்மிகள் ஆகியவற்றினிடையே நிலவும் ஈர்ப்பு அல்லது எதிர்ப்பு விசையைக் குறிக்கும். மூலக்கூற்றினை ஒருங்கே வைத்திருக்கும் மூலக்கூற்று உள்விசையை விட இது குறைந்த வலுவையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஐதரோகுளோரிக் அமிலத்தின் (HCl) மூலக்கூறுகள் அருகருகே இருக்கும்போது அவற்றினிடையே இருக்கும் விசையை விட, அதன் மூலக்கூற்றுள் இருக்கும் இணைவலுப் பிணைப்பு வகை வேதிப் பிணைப்பின் விசை அதிகமாக இருக்கும். மூலக்கூற்று இடை விசைகளும் இரசாயன பிணைப்புகளும் இலத்திரன்கள் பங்குபற்றும் விதத்தில் அடிப்படையாக வேறுபடுகின்றன. இரசாயன பிணைப்புகளில் இலத்திரன்கள் பங்கிடப்பட்டு, இடம்மாற்றப்பட்டு நேரடியாகப் பங்கு கொள்கின்றன. எனினும் மூலக்கூற்று இடை விசைகளில் இலத்திரன்கள் நேரடியாகப் பங்குபற்றுவதில்லை. இலத்திரன்கள் மூலக்கூற்றுக்குள் அல்லது அணுவுக்குள் உள்ள இடத்தைப் பொறுத்து மூலக்கூற்று இடை விசைகள் உருவாகின்றன. மூலக்கூற்று இடை விசை ஏற்படுவதற்கு இலத்திரன்கள் பங்கிடப்படுவதோ, இழக்கப்படுவதோ, ஏற்கப்படுவதோ இல்லை. ஈர்ப்பு மூலக்கூற்று இடைவிசைகள்:

  • இருமுனை-இருமுனை விசைகள்
  • அயனி-இருமுனை விசைகள்
  • வண்டர்வாலின் விசைகள் (கீசொன் விசை, டிபை விளைவு, இலண்டன் கலைவு இடைவிசை)

இருமுனைவு-இருமுனைவுக் கவர்ச்சி விசை தொகு

சமச்சீரற்ற மூலக்கூறில் உள்ள அணுக்களிடையே உள்ள மின்னெதிர்த்தன்மை வித்தியாசம் காரணமாக இருமுனைவு-இருமுனைவுக் கவர்ச்சி விசை ஏற்படுகின்றது. இது குறிப்பிடத்தக்களவுக்கு முக்கியமான இடைவிசையாகும். இக்கவர்ச்சி விசை ஏற்படுவதற்கு மூலக்கூறு சமச்சீரற்றதாகவும், நேரடியாகப் பிணைக்கப்பட்ட அணுக்களிடையே மின்னெதிர்த்தன்மை வித்தியாசமும் இருத்தல் அவசியமாகும். இவ்வகைக் கவர்ச்சி இடைவிசை உள்ள சேர்வைகள் முனைவுச் சேர்வைகள் என அழைக்கப்படும். நீர், அமோனியா, ஐதரசன் குளோரைடு, ஐதரசன் புளோரைடு என்பன முனைவுச் சேர்வைகளாகும். இச்சேர்வைகளில் மின்னெதிர்த்தன்மை அதிகமான N, O, Cl, F ஆகிய அணுக்கள் மின்னெதிர்த்தன்மை குறைந்த ஐதரசனிடமிருந்து இலத்திரன்களை இழுப்பதால் (அயன் பிணைப்பு போன்று முழுமையாகக் கவர இயலாது) இலத்திரன்கள் மின்னெதிர்த்தன்மை கூடிய அணுவின் பக்கம் அதிக நேரத்தைச் செலவிடும்.

 

உதாரணமாக HCl இல் மின்னெதிர்த்தன்மை அதிகமான Cl பக்கம் சிறிய மறையேற்றமும், மின்னெதிர்த்தன்மை குறைந்த H பக்கம் சிறிய நேரேற்றமும் ஏற்படும். இதனால் HCl மூலக்கூறுகளிடையே இருமுனைவு-இருமுனைவுக் கவர்ச்சி விசை உருவாகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூற்று_இடைவிசை&oldid=2746002" இலிருந்து மீள்விக்கப்பட்டது