மேக எதிரொளிப்புத்திறன்
மேக எதிரொளிப்புத்திறன் அல்லது முகில் எதிரொளிப்புத்திறன் (Cloud albedo) என்பது முகில் ஒன்றின் எதிரொளிப்புத் திறனின் அளவாகும். ஒரு முகிலின் எதிரொளிப்புத்திறன் மதிப்பு அதிகமாக இருந்தால் அந்த முகில் அதிகமான சூரிய ஒளியை எதிரொளிக்கிறது, அல்லது குறைவான கதிர்வீச்சு பரவுகிறது என்பது பொருளாகும்.
மேக எதிரொளிப்புத்திறன் குறைந்த அளவு 10 சதவிதம் முதல் அதிகபட்சம் 90 சதவீதம் வரை மாறுபடுகிறது. முகில்களில் உள்ள நீர்த்துளிகளின் அளவு, அதில் திரவவடிவிலுள்ள நீரின் அளவு மற்றும் பனிக்கட்டியின் உள்ளடக்கம், முகிலின் தடிமன் மற்றும் சூரியனின் உச்சிக்கோணம் ஆகியவற்றைப் பொறுத்து இம்மாறுபாடு அமைகிறது. மற்ற காரணிகள் யாவும் சமமாக இருக்கும்போது மேகத்தில் நீர்த்துளிகளின் அளவு குறைவாக இருந்தால், திரவவடிவ நீரின் உள்ளடக்கம் அதிகமாக இருக்கும். மேக எதிரொளிப்புத்திறனும் அதிகமாகவே இருக்கும்.
குறைந்த, தடிமனான அடுக்குத்திரள் முகில்கள் போன்றவை முதலில் உள்வரும் சூரியக்கதிர்களைப் பிரதிபலிக்கின்றன. இதனால் அதிக எதிரொளிப்புத் திறன் மதிப்பைக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் அதிக தடிமனில்லாத மென்முகில் வகை முகில்கள் அகச்சிவப்புக் கதிர்களை வெளியேறவிடாமல் தடுத்து சூரியக்கதிர்வீச்சை மேற்பரப்பிற்கு அனுப்புகின்றன. இதனால் குறைவான எதிரொளிப்புத் திறன் மதிப்பு இங்கு விளைகிறது. இத்திறன் பைங்குடில் விளைவுக்குப் பங்களிக்கிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "EO Library: Clouds & Radiation Fact Sheet". நாசா. பார்க்கப்பட்ட நாள் 2008-10-15.
- ↑ http://www.cgd.ucar.edu/cms/cchen/Latham_et_al_2008.pdf[தொடர்பிழந்த இணைப்பு]