மேஜர் ஓக் (Major Oak) என்பது இங்கிலாந்து நாட்டிங்ஹாம்சயர் (Nottinghamshire) பகுதியிலுள்ள எட்வின்ஸ்டவ் (Edwinstowe) என்ற கிராமத்தினருகே அமைந்துள்ள செர்வூட் காட்டின் (Sherwood Forest) மத்தியிலுள்ள ஒரு பழமை வாய்ந்த ஆங்கிலேய கருவாலி மரம் ஆகும். 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் இம்மரம் பிரித்தானியாவின் மிக விரும்பப்பட்ட மரம் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1]

விபரம் தொகு

மேஜர் ஓக் Quercus Robur என்ற வகையைச் சேர்ந்த மரமாகும். தமிழில் சிந்தூர மரம் என அழைக்கப்படுகிறது. மேஜர் ஓக் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மரத்தின் அடிப்பாகம் 33 அடி (10 மீட்டர்) சுற்றளவு கொண்டது. கிளைகள் 92 அடி (28 மீட்டர்) வரை விரிந்து பரந்துள்ளன. மரத்தின் அடிப்பாகம் கோறையாக, உள்ளே ஒரு அறை போல இருக்கிறது.[1]

வரலாறு தொகு

18ஆம் நூற்றாண்டில் இந்த மரம் காக்பென் மரம் (Cockpen tree) என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் காக் ஃபைட் (சேவல் சண்டை) பெருமளவில் நடந்தது. சேவல்களை அடைத்துவைக்க இந்த மரத்தின் கோறை பயன்படுத்தப் பட்டதால் அப்பெயர் ஏற்பட்டது. பின்னர், சேவல் சண்டைகள் தடை செய்யப்பட்டபின் இராணி மரம் என அழைக்கப்பட்டது.

1790 ஆம் ஆண்டில் மேஜர் ஹேமன் றூக் (Major Hayman Rooke) என்பவர் தனது பழம் பெருமை வாய்ந்தவை (Antiques) புத்தகத்தில் இந்த ஓக் மரத்தையும் சேர்த்ததனால் மேஜரின் ஓக் (Major's Oak) என அழைக்கப்பட்டு ஈற்றில் மேஜர் ஓக் என்றாகியது.[1]

ஐதீகம் தொகு

இந்த மரம் இவ்வளவு பெருமை பெறுவதற்கு ஒரு கதை தான் காரணம். ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு நாட்டிங்காம் என்றாலே றாபின் ஹூட் (Robin Hood) கதை நினைவுக்கு வரும். ராபின் ஹூட்டும் அவனது ஆட்களும் இந்த மரப்பொந்தையே தாங்கள் ஒளித்திருப்பதற்குப் பயன்படுத்தினார்கள் என ஒரு ஐதிகம் உண்டு.

இன்றைய நிலை தொகு

இந்த மரம் மிகவும் பிரபலமடைந்துவிட்டதால் 1908 ஆம் ஆண்டிலிருந்து இந்த மரம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. எட்வர்ட் அரசர் காலத்தில் உலோகச் சங்கிலிகளால் கிளைகள் பிணைக்கப்பட்டும் அடிமரத்தை ஈயத்தகடுகளால் சுற்றியும் பாதுகாத்தனர். 1970 களின் பிற்பகுதியில் அவற்றை நீக்கிவிட்டு பாரிய மரக் குற்றிகளால் பாரமான கிளைகளைத் தாங்கச் செய்தனர். தற்போது மரக் குற்றிகள் எடுக்கப்பட்டு அவற்றிற்குப் பதிலாக மெல்லிய உருக்கு கம்பங்கள் கிளைகளைத் தாங்குகின்றன. காலத்துக்குக் காலம் பராமரிப்பு வேலைகள் நடக்கின்றன.[1]

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Major Oak". Nottinghamshire County Council. Archived from the original on 2015-09-15. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேஜர்_ஓக்&oldid=3568923" இலிருந்து மீள்விக்கப்பட்டது