மேடை ஒளியமைப்புக் கருவி
மேடை ஒளியமைப்புக் கருவிகள் என்பன நாடகம், நடனம் போன்ற நேரடியாக நிகழ்த்திக் காட்டும் நிகழ்ச்சிகளுக்கு ஒளி அமைப்பதற்காகப் பயன்படும் கருவிகளைக் குறிக்கும். இவை, தொலைக்காட்சிக் கலையகங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு ஒளியமைப்பதற்கும் பயன்படுகின்றன.[1][2][3]
ஒளியமைப்புக் கருவிகளின் கூறுகள்
தொகுபல்வேறு ஒளியமைப்புக் கருவிகள் தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காட்சியளித்தாலும், அவைகள் அனைத்தும் பின்வரும் பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன:
பெட்டி/கூடு/பேணி/உறை
தொகுஇவை, கருவியின் பிற கூறுகளை உள்ளே வைத்திருப்பதற்கும், ஒளி வேண்டாத திசைகளில் வெளிச் செல்வதைத் தடுப்பதற்குமான ஒரு உலோக அல்லது பிளாஸ்டிக்குக் கொள்கலன்களாகும். இது, வில்லை அல்லது ஒளிவெளிச் செல்லவதற்கான திறந்த பகுதி தவிர்ந்த, கருவியின் வெளிப்புறம் முழுவதையும் உள்ளடக்குகிறது. இவ் வெளிக்கூடு, வெப்பத்தைக் குறைப்பதற்கும், விளக்கின் செயல் திறனைக் கூட்டுவதற்குமான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்படலாம். பழைய கருவிகள், உருட்டிய அல்லது பொறியிலிட்ட உருக்கினால் அல்லது அலுமீனியத்தினால் ஆனவை. தற்காலத்தில் இக் கூடுகள் அச்சு வார்ப்பட உலோகங்களினால் செய்யப்படுகின்றன. அச்சு வார்ப்பட முறை, கூடுகளை ஒரே கூறாக, மலிவாகவும், நிறை குறைந்தனவாகவும் செய்வதற்கு வழிவகுத்துள்ளது. சில கருவிகளின் கூடுகள் பிளாஸ்டிக்கினாலும் செய்யப்படுவதுண்டு.
வில்லை அல்லது வாய்
தொகுஇது ஒளி வெளியேறுவதற்காக விடப்பட்டுள்ள வழியாகும். பல விளக்குகளில் வெளியேறும் ஒளிக் கதிரைக் கட்டுப்படுத்துவதற்கு வில்லைகளைப் பயன்படுத்துகின்றன. பரவளைவுத் தெறிப்பி விளக்குகள், ஓர விளக்குகள் என்பன வில்லைகளைக் கொண்டிருப்பதில்லை. தெறிப்பிகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. வில்லை, தெறிப்பி, மற்றும் பிற ஒளிக்கதிரைக் கட்டுப்படுத்தும் கூறுகள் ஒளியியற் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
தெறிப்பி
தொகுஇது வெளியேறும் ஒளியின் தரத்தையும் அதன் திசைசார் பண்புகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு நீள்வளையத் தெறிப்பியில் ஒளி மூலத்தை ஒரு குவியத்தில் அமைக்கும்போது, தெறிக்கும் ஒளி இரண்டாவது குவியப் புள்ளியில் குவியும். இது பொட்டொளியை உருவாக்குகிறது. பரவளைவுத் தெறிப்பியில் ஒளிமூலம் குவியத்தில் இருக்கும்போது, தெறிக்கும் ஒளிக் கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக வெளியேறுகின்றன. ஒளிக்கற்றைகளை வில்லைகளினூடாகச் செலுத்துவதற்காகத் தெறிப்பிகள் ஒளிமூலத்துக்குப் பின்னால் அல்லது அதனைச் சூழ அமைக்கப்படுகின்றன.
தாங்கு சட்டம்
தொகுபல கருவிகளில், விளக்கைத் தொங்கவிடுவதற்கு அல்லது அதனைத் தாங்குவதற்காக ப வடிவில் அமைந்த ஒரு தாங்கு சட்டம் பயன்படுகிறது, இது, ஒரு அச்சுப்பற்றிச் சுழலக்கூடியதாக விளக்கின் வெளிக்கூட்டின் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும். இத் தாங்கிகள், உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் அல்லது சட்டங்களில் பொருத்தப்படுவது வழக்கம். தரையிலும் இவை பொருத்தப்படுவது உண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Source Four LED". www.etcconnect.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
- ↑ - Types of Lantern - www.theatrecrafts.com! பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Parker, W. Oren (1990). Scene Design and Stage Lighting. Holt, Rinehart and Winston. p. 459. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-028777-4.