மேப்கிங் சிறுவர் படை

மேப்கிங் சிறுவர் படை (Mafeking Cadet Corps) என்பது 1899-1900 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாம் போயர் போரின் போது மேப்கிங் நகரம் முற்றுகையிடப்படுவதற்கு 217 நாள்களுக்கு முன் லார்ட் எட்வர்ட் செசில் (Lord Edward Cecil) என்பவரால் அமைக்கப்பட்ட சிறுவர் படை ஆகும். பிரித்தானிய முதன்மை அமைச்சரின் மகனான செசில் ஊழியர்களுக்கான அதிகாரியாகவும் கோட்டை காவற்படையின் துணை கமாண்டராகவும் இருந்தார். அவர்களின் படை தன் ஆர்வமுடைய போரில் பங்கு கொள்ள போதிய வயது இல்லாத வெள்ளை இன சிறுவர்களை கொண்டதாக இருந்தது. அவர்கள் போர் படை வீரர்களுக்கு உதவியாகவும் தகவல்களை கொண்டு செல்பவர்களாகவும், மருத்துவமனையில் உதவி புரிபவர்களாகவும் இருந்தனர். இதனால் போர் வீரர்களின் ராணுவ வேலை எளிதானது.[1][2][3]

மேப்கிங் சிறுவர் படையுடன், அவர்களின் தலைவரான சார்ஜண்ட்-மேஜர் வார்னர் குட் இயர் வலதுபுறத்தில்.

சிறுவர் படையினர் காக்கி நிறச் சீருடையும் அகன்ற தொப்பியும் அணிந்திருந்தனர். ஸ்காட்லாந்து மேட்டு நிலத்தவரின் தொப்பி வகையை போன்று அது ஒரு புறம் மேல் தூக்கியவாறு அமைந்திருந்தது. நகர மக்கள் சிறுவர்களின் சீருடை அழகை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டனர். 13 வயது சார்ஜன்ட் மேஜர் வார்னர் குட் இயர் என்பவன் படை தலைவனாக இருந்தான்.[4]

மேப்கிங் சிறுவர் படையே பின்னாளில் சாரணர் படை (boy scouts) துவங்க ஊக்கமாக இருந்தது.[5]

படையின் பணிகள்

தொகு

செய்திகளை நகரத்திற்குள்ளும் கோட்டைக்கு வெளியே கொண்டு செல்வதும் அவர்களின் பணிகளுள் ஒன்றாக இருந்தது. சில சமயம் திறந்த வெளியில் பல மைல் தொலைவு செல்ல வேண்டி இருந்தது. துவக்கத்தில் அவர்கள் கழுதைகளை பயன்படுத்தினர். ஆனால் கோட்டை முற்றுகைக்கு பின் உணவு பற்றாக்குறையானது. எனவே கழுதைகள் உணவானது. அதன் பிறகு அவர்கள் மிதிவண்டிகளை பயன்படுத்தினர்.[4]

கண்காணிப்பது அவர்களின் மற்றொறு முக்கிய பணியாயிருந்தது. முக்கியமாக போயர் படை நகரத்தின் எப்பகுதிகளில் எல்லாம் தாக்கத் தயாராக இருக்கிறது என்பதை எச்சரித்தனர்.

நகரத்தில் 'மேப்கிங் புளு' என்ற ஸ்டாம்ப் அஞ்சல் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. அவற்றுள் ஒன்று படைத் தலைவன் 'வார்னர் குட் இயர்' மிதிவண்டியில் [1] அமர்ந்திருக்கும் படத்தை கொண்டு இருந்தது.

பிரித்தானிய பேரரசில் அப்போது மற்ற ஸ்டாம்ப்களுக்கு மத்தியில் இது வழக்கத்திற்கு மாறாக இருந்தது.

'ஃப்ரான்கி ப்ரவுன்' (Frankie Brown) என்ற 9 வயது சிறுவன் கோட்டை முற்றுகையின் போது கொல்லப் பட்டான். அவன் ஒரு படை வீரனாக இல்லாமல் இருந்தாலும் படை வீரனாக இறந்ததாகவே கருதப்பட்டான். படை வீரனாகும் குறைந்தபட்ச வயது 11 ஆக இருந்தது.

போர் முடிவின் போது தென் ஆப்பிரிக்க அரசியின் விருதினை மேப்கிங் நகரத்தை பாதுகாத்ததற்காக 24 சிறுவர் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

சாரணர்படைக்கான ஊக்கம்

தொகு

மேப்கிங் முற்றுகையின் போது பிரித்தானிய கமாண்டராக இருந்தவர் ராபர்ட் பேடன் பவுல். சிறுவர் படையினால் ஈர்க்கப்பட்ட அவர், 1908 ஆம் ஆண்டு அவர்களை பற்றி 'ஸ்கவுடிங் பார் பாய்ஸ்' (Scouting for Boys) என்ற தன் புத்தகத்தில் எழுதினார். படையிலிருந்த சிறுவன் ஒருவனுடனான் உரையாடலை அவர் பின்வருமாறு எழுதினார். ' நான் அவர்களில் ஒருவனிடம் சொன்னேன், எதிரிகள் சுடும் போது நீ வந்தால், பறந்துவரும் குண்டுகளினால் நீ தாக்கப் படக் கூடும் என்று. அதற்கு அவன், என்னால் மிதி வண்டியை வேகமாக செலுத்த முடியும் ஐயா, குண்டுகளால் என்னை தொட முடியாது என்று பதிலளித்தான்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Gardner, Brian (1966). Mafeking a Victorian legend. London: Cassell.
  2. Jeal, Tim (1989). Baden-Powell. London: Hutchinson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-170670-X.
  3. Pakenham, Thomas (1979). The Boer War. New York: Avon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-380-72001-9.
  4. 4.0 4.1 "African Seeds of Scouting".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. ""Johnny" Walker's Scouting Milestones Pages - The Mafeking Cadets". Archived from the original on 2011-06-14.
  6. Baden-Powell, Robert S.S. (1908). Scouting for boys. London: Horace Cox Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேப்கிங்_சிறுவர்_படை&oldid=3924390" இலிருந்து மீள்விக்கப்பட்டது