யமன் (பௌத்தம்)

யமன் பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு தர்மபாலர் ஆவார். இவர் நரகத்தின் அதிபதியாகவும் இறப்பவர்களுக்கு தீர்ப்பு அளிப்பவராகவும் இருக்கின்றார். பௌத்தர்கள் வணங்கும் யமனும் இந்து மதத்தில் வணங்கப்படும் யமனும் ஒரே தேவர்களாக இருப்பினும் இருவருக்குமான புராணக்கதைகள், கடமைகள், குணங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. பௌத்தம் பரவிய அனைத்து இடங்களிலும் இவருடைய வழிபாடு காணப்படுகின்றது.

திபெத்திய யமன்

தேரவாத பௌத்தத்தில் யமன் தொகு

யமன் பௌத்தத்தில் இறப்பின் கடவுளாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். மேலும் வெவ்வேறு நரகங்களை மேற்பார்வையிடுவதும் இவருடைய கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. இவருடைய பணி பாளி சூத்திரங்களில் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் மக்களின் பரவலான நம்பிக்கையில் பல்வேறு கருத்துகள் தெளிவாக இருப்பினும் அனைத்தும் பௌத்த சித்தாந்தத்திற்கு ஒத்த கருத்துகளாக இருப்பதில்லை.

பெற்றோர்கள்,துறவிகள்,புனிதமானவர்கள் மற்றும் பெரியவர்களை தவறாக நடத்தியவர்கள் இறப்புக்கு பிறகு யமனிடம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். பிறகு யமன் அவர்களிடன் தங்களுடைய தீய நடத்தையைக் குறித்து என்றாவது கருதியது உண்டா என கேட்பார். அதற்கு அவர்கள் அச்செயல்களின் கர்ம பலன்களை குறித்து ஆலோசனை செய்ததில்லை என மீண்டும் மீண்டும் தெரிவிப்பர். அதன் விளைவாக அவர்களுடைய தீய கருமங்கள் தீரும் வரை அவர்கள் நரகத்தில் இடப்படுகின்றனர்.

புத்தகோசர் என்ற தேரவாத அறிஞர் யமனை விமானபேதன்(विमानपेत) என அழைக்கின்றார். அதாவது அவர் ஒரு கலப்பு நிலையில் இருப்பவர். ஒரு சமயம் நற்கர்மங்களின் பலனையும் வேறு சமயம் தீய கர்மங்களின் பலனை அனுபவிப்பவர் என்பதை இந்த பெயர் காட்டுகிறது. எனினும் ஒரு அரசராக தர்மத்தை தவறாதவர் எனவும் புத்தகோசர் கூறுகிறார்.(இந்து மதத்தில் இவரை யம தர்ம ராஜன் என அழைப்பது ஒப்பு நோக்கத்தக்கது.)

தேரவாத பௌத்த மக்களுடைய நம்பிக்கையின் படி, யமன் முதுமையை,நோய்,இயற்கை சீற்றங்கள் முதலியவற்றை மனிதர்கள் தர்மத்தை பின்பற்றுவதற்காக எச்சரிக்கையாக அனுப்புகின்றார். மக்கள் இறந்த பின்னர் யமனே அவர்களுக்கு தீர்ப்பளித்து அவர்களுடைய கர்மத்தின் படி, அவர்களை மனித உலக்த்திலோ, சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ மறுபிறப்பு எய்தும் வண்ணம் செய்கிறார். சில சமயம் ஒவ்வொரு நரகத்துக்கும் ஒரு யமன் இருப்பதாக நம்பப்படுகிறது(இந்து மற்றும் பௌத்த நம்பிக்கைகளின் படி நரகங்களில் பலவகை உள்ளன. தீய கருமங்களுக்கு தகுந்தாற்போல் அந்தந்த நரகங்கள் தண்டனையாக வழங்கப்பெறுகின்றன).

சீன மற்றும் ஜப்பானிய பௌத்தத்தில் யமன் தொகு

 
தர்மபாலராக யமன்

சீனத்தில் யமனை யான் வாங் அல்லது யான்லுவோ என அழைக்கப்படுகின்றார். ஜப்பானில் இவரை என்மா எனவும் எம்மா எனவும் அழைக்கப்படுகின்றார்.

யமன் நரகத்தை ஆள்பவராக மட்டுமல்லாது நரகத்தில் இறந்தவர்களுக்கு தர்மத்தை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். அவர் எப்போது ஆண் வடிவிலேயே தோற்றம் அளிக்கிறார். தன்னுடன் ஒரு தூரிகை(சீன மற்றும் ஜப்பானிய மொழி பழங்காலத்தில் தூரிகையால் எழுதப்பட்டது), அனைத்து உயிர்களின் மரண தேதியையும் அடங்கிய புத்தகம் முதலியவற்றை வைத்துள்ளார். மேலும் காளை-முகன், குதிரை-முகன் என இருவர் இறந்தவர்களின் ஆன்மாக்களை ஒவ்வொன்றாக யமன் முன் கொண்டு வருகின்றனர். யமனும் அவர்களுடைய கர்மங்களுக்கு தகுந்தாற்போல் தீர்ப்பளிக்கிறார்.

யமன் என்பது தேவராக அல்லது பதவியாக(யம பதவி) கருதப்படுகிறது. பல நல்ல மனிதர்கள் யம பதவி அளிக்கப்பட்டதாக புராணக்கதைகள் உள்ளன,

திபெத்திய பௌத்தத்தில் யமன் தொகு

 
யமாந்த வஜ்ரபைரவர்

திபெத்தில் யமன் சம்சாரத்தை வழிநடுத்துபவராக கருதப்படுகிறார். எனினும் இவர் பயங்கரமாகவே சித்தரிப்படுகிறார். பவச்சக்கரத்தில் வாழ்வின் அனைத்து நிலைகளும் இவருடைய பயங்கரமான கரங்களுக்கு நடுவிலேயோ அல்லது இவருடைய தாடைகளுக்கு நடுவிலேயோ தான் சித்தரிக்கப்படுகிறது. யமனின் துணை யமி என கருதப்படுகிறார்.

மேலும் திபெத்திய பௌத்தத்தில் யமனை மரணத்தின் உருவகமாக கருதுகின்றனர். எனவே தான் மரணத்தை அழிப்பவர் என்ற பெயரில் மஞ்சுஸ்ரீயின் உக்கிர வடிவம் யமாந்தகர் என அழைக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  • Nanamoli, Bhikkhu & Bodhi,Bhikkhu (2001). The Middle Length Discourses of the Buddha: A Translation of the Majjhima Nikaya. Boston: Wisdom Publications. ISBN 0-86171-072-X.
  • Nyanaponika Thera & Bodhi, Bhikkhu (1999). Numerical Discourses of the Buddha: An Anthology of Suttas from the Anguttara Nikaya. Walnut Creek, CA: AltaMira Press. ISBN 0-7425-0405-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமன்_(பௌத்தம்)&oldid=3608223" இலிருந்து மீள்விக்கப்பட்டது