யாழ்ப்பாணத்து நாட்டுக் கூத்து

பல்வேறு பண்பாட்டினரிடையே நிலவி வந்ததைப் போலவே நாட்டுக்கூத்து, யாழ்ப்பாணத்துமக்களுடைய முக்கியமான பொழுது போக்குகளுள் ஒன்றாக விளங்கியது. ஒரு காலத்தில் பல நாடுகளிலும், கூத்தும் அதையொத்த கலை வடிவங்களும் வலிமைவாய்ந்த ஊடகங்களாக விளங்கியிருக்கின்றன. யாழ்ப்பாணமும் இதற்கு விதிவிலக்கல்ல. இவை பொழுது போக்குக்காக மட்டுமன்றி அறிவூட்டல், பிரச்சாரம் போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்பட்டன. இன்று பல்வேறு புதிய ஊடகங்களின், முக்கியமாகத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றின், அறிமுகமும், பல்வேறு புதிய வகை நாடக வகைகளின் அறிமுகமும் மரபுவழியான நாட்டுக் கூத்துகளின் செல்வாக்கைக் குறைத்துவிட்டன.


யாழ்ப்பாணத்துக் கூத்து மரபுகளின் அடிப்படைகள் பொதுவாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்தவையே. நாட்டுக்கூத்துகள் நாடகம், விலாசம் என இரண்டு வகையாக இருந்ததாகப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். நாடகங்கள் தமிழ் நாட்டில் பழமையான வடிவங்கள் என்றும், சோழர் காலத்தில் கோயில்களில் நாடகங்கள் நடிக்கப்பட்டன என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். விலாசம் என்னும் கூத்து வடிவம் விஜய நகரக் காலத்திலேயே எழுந்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. நாடகங்கள் தமிழ் மரபு சார்ந்தவையாக இருக்க, விலாசங்களில் வடநாட்டு அம்சங்கள் கலந்திருந்தன எனக் கூறும் அவர் பிற்காலத்தில் இவற்றுக்கிடையே அதிக வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.