யூஜின் வூசுட்டர்

யூஜீன் வூசுட்டர் (Eugen Wüster, 10 அக்டோபர் 1898 - 29 மார்ச் 1977) என்பவர், ஆசுத்திரியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும், கலைச்சொல்லியலாளரும் ஆவார். கலைச்சொல்லியலில் இவரது முன்னோடி ஆய்வுகள், செயற்பாடுகள் என்பவை காரணமாக இவர் கலைச்சொல்லின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு.

யுஜின் வூஸ்டர்
Eugen Wüster
1967 இல் யூஜின் வூஸ்டர்
பிறப்புயூஜின் பெர்னார்ட் காசுப்பர் வூஸ்டர்
(1898-10-10)அக்டோபர் 10, 1898
வீசல்பர்க், ஆசுத்திரியா
இறப்புமார்ச்சு 29, 1977(1977-03-29) (அகவை 78)
வியன்னா, ஆசுதிரியா
பணிமின்பொறியியல்
தொழிற்துறையாளர்
கலைச்சொல்லியல்

வரலாறு

தொகு

யூஜீன் வூசுட்டர், 1898 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆசுத்திரியாவின் உள்ள வீசெல்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார். 15வது வயதில் செயற்கை மொழியான எசுப்பரான்டோ மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே, ஒரு எசுப்பரான்டோ மொழிபெயர்ப்பாளராகவும், இது தொடர்பான பல்வேறு கட்டுரைகளின் ஆசிரியராகவும் முன்னணிக்கு வந்தார். குறிப்பாக இவரது ஆர்வம் எசுப்பரான்டோ மொழியின் கலைச்சொற்கள், சொல்லாக்கம் ஆகிய துறைகளிலேயே இருந்தது. மின் பொறியியலில் கல்வி கற்று ஒரு மின் பொறியியலாளரான இவர், பின்னர் தனது தந்தையின் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1918 - 1920 காலப்பகுதியில், அவருக்கு 22 வயது ஆகுமுன்பே, புகழ் பெற்ற எசுப்பரான்டோ - செருமன் அகரமுதலியை உருவாக்கினார்.[1] இது எசுப்பரான்டோவின் தொடக்ககாலச் சொற்றொகுதியினதும், சமென்கோவின் பயன்பாட்டினதும் விரிவானதும், துல்லியமானதுமான ஆக்கமாக இன்றுவரை கருதப்பட்டு வருகிறது. இந்த அகரமுதலியை உருவாக்கியதனால் கிடைத்த அனுபவமே இவரது கலைச்சொல்லியல் ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைந்தது.[2] பன்னாட்டுத் தொழில்நுட்பத் தொடர்பாடல் குறித்த இவரது ஆய்வுகளின் பலனாக, 1936 ஆம் ஆண்டில், பன்னாட்டுத் தர அமைப்பின் கீழ், கலைச்சொல் தரப்படுத்தலுக்கான தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது. பன்னாட்டுக் கலைச்சொல் தரப்படுத்தல் கொள்கைகளை உருவாக்கியதுடன், நவீன தகவல் சமுதாயத்தின் அடிப்படைகளை உருவாக்குவதிலும் வூசுட்டர் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார்.

இவர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் கற்பித்திருக்கிறார். இப் பல்கலைக்கழகத்தில் உள்ள யூஜீன்-வூசுட்டர் ஆவணக் காப்பகத்துக்கும், ஆசுத்திரிய தேசிய நூலகத்தில் உள்ள எசுப்பரான்டோ அருங்காட்சியகம் மற்றும் திட்டமிட்ட மொழிகள் பிரிவுக்கும் அடிப்படையான நூல்களும் பிற ஆவணங்களும் வூசுட்டரால் வழங்கப்பட்டவை. கலைச்சொல்லியல் ஆய்வுகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்குவதற்கென "யூஜீன் வூசுட்டர் பரிசு" என்னும் பரிசு ஒன்றை வியன்னாப் பல்கலைக்கழகமும், வியன்னா நகரும் சேர்ந்து உருவாக்கியுள்ளன.

பணிகள்

தொகு

1938 ஆம் ஆண்டில் பன்னாட்டு மின்தொழில்நுட்பவியல் சொற்தொகுதியை உருவாக்கி வெளியிடுவதில் வூசுட்டர் முக்கிய பங்காற்றினார். இதன் அண்மைப் பதிப்பை இணையத்தில் பார்க்கமுடியும்.[3] உசாத்துணை நூற்பட்டியல் தொடர்பான பிரச்சினைகள், செருமன் மொழியின் ஒலிப்பமைப்புச் சீர்திருத்தம், உலகப் பதின்மமுறை வகைப்பாட்டு முறைமை, தகவலியல் போன்ற விடயங்களிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. வாள்கள் தொடர்பில் இவர் ஒரு வல்லுனர். இயந்திரக் கருவிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒரு மாதிரி அகரமுதலி ஒன்றையும் உருவாக்கினார்.[4] இதன் தற்போதைய பதிப்பும் இணையத்தில் உள்ளது.[5] 1971 ஆம் ஆண்டில் "இன்ஃபோடேர்ம்" என அழைக்கப்படும் பன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் மையம்[6] என்னும் நிறுவனத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவர் பல்வேறு தலைப்புக்களிலான பதிப்பில் வெளிவராத பல நூல்களையும் விட்டுச்சென்றுள்ளார்.

குறிப்புகள்

தொகு
  1. Enciklopedia Vortaro Esperanta-Germana
  2. Internationale Sprachnormung in der Technik, besonders in der Elektrotechnik (தொழில்நுட்பம், குறிப்பாக மின்னணுவியலில் பன்னாட்டு மொழித் தரப்படுத்தல்), பெர்லின் 1931
  3. Electropedia: The World's Online Electrotechnical Vocabulary
  4. The Machine Tool, London 1968
  5. The machine tool: an interlingual dictionary of basic concepts; comprising an alphabetical dictionary and a classified vocabulary with definitions and illustrations. Prepared under the auspices of the United Nations Economic Commission for Europe and under the direction of Eugen Wüster.
  6. Infoterm

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூஜின்_வூசுட்டர்&oldid=3857748" இலிருந்து மீள்விக்கப்பட்டது