யூரியா பார்மால்டிகைடு
யூரியா-பார்மால்டிகைடு (Urea-formaldehyde), என அழைக்கப்படும் யூரியா-மீத்தேன்யால், ஒரு ஊடுருவும் தன்மையற்ற வெப்பத்தால் இறுகும் பிசின் அல்லது நெகிழி ஆகும். இதன் பொதுவான தொகுப்பு முறையின் வழித்தடம் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பு காரணமாக இதற்கு இப்பெயரிடப்பட்டது. [1] இது யூரியா மற்றும் பார்மால்டிகைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பசைகள், பொருட்களின் இறுதிக்கட்ட சீராக்கும் பணிகள், நடுத்தர அடர்வுடைய இழைப்பலகைகள், (MDF) துகள்களால் ஆக்கப்பட்ட பலகைகள் மற்றும் வார்ப்புப் பொருள்கள் போன்றவற்றில் இந்தப் பிசின்கள் பயன்படுகின்றன. யூரியா பார்மால்டிகைடு மற்றும் தொடர்புடைய அமினோ பிசின்கள் என்ற வெப்பத்தால் இறுகும் பிசின்களின் வகைப்பாட்டில் யூரியா-பார்மால்டிகைடு ரெசின்கள் உலகளவில் 80% உற்பத்தி செய்யப்படுகின்றன. தானியங்கி சக்கரங்களின் தண்டுகளுடன் இரப்பரை இணைப்பதற்கும், காகிதத்தின் இழுவலிமையை அதிகரிக்கவும், வார்ப்பு மின் சாதனங்கள், கொள்கலன்களுக்கான மூடிகள் தயாரிப்பதற்கும் அமினோ அமில பிசின்கள் பயன்படுகின்றன.[2]
பண்புகள்
தொகுயூரியா-பார்மால்டிகைடு பிசின் அதிக இழுவலிமை, நெகிழ்வு சார் குணகம், மற்றும் அதிகமான வெப்பத்தால் உருக்குலையும் வெப்பநிலை, குறைந்த நீர் உறிஞ்சு தன்மை, வார்ப்பு சுருக்கம், உயர் மேற்பரப்பு கடினத்தன்மை, உடையும் போது ஏற்படும் நீட்சி, கன அளவு தாங்கு தன்மை மற்றும் 1.55 என்ற ஒளிவிலகல் எண் என பல பண்புநலன்களைக் கொண்டுள்ளது.[3]
வேதியியல் கட்டமைப்பு
தொகுயூரியா-பார்மால்டிகைடு என்ற பலபடியின் வேதியியல் அமைப்பு, [(O)CNCH2]n என்ற மீண்டும் மீண்டும் வரும் அலகினைக் கொண்டுள்ளது. மாறாக மெலனின் -பார்மால்டிகைடு ரெசின்கள் NCH2OCH2N மீண்டும், மீண்டும் வரும் அலகுகளைக் கொண்டுள்ளன. பலபடியாக்கலின் நிலைகளைப் பொறுத்து சில கிளைத் தொடர்கள் ஏற்படலாம். பார்மால்டிகைடு மற்றும் யூரியா வினையின் ஆரம்ப நிலைகள் பிசு(ஐதராக்சிமெதில்)யூரியாவை உருவாக்கின.
உற்பத்தி
தொகுஆண்டுதோறும் தோராயமாக 1 மில்லியன் மெட்ரிக் டன் யூரியா-பார்மால்டிகைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் யூரியா-பார்மால்டிகைடின் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக வனப்பொருட்களுடன் சேர்த்து துகள் பலகைகள் தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் துகள் பலகைகளுக்கு (61%), நடுத்தர அடர்த்தி இழையட்டைகளுக்கு (27%), கடின ஒட்டு பலகைகளுக்கு (5%), மற்றும் தகடாக்கும் பிசினாக (7%) என்ற வகையில் பயன்படுகிறது.
பொதுவான பயன்கள்
தொகுயூரியா-பார்மால்டிகைடு எங்கும் பரவியிருக்கும் ஒரு பொருளாகும். இதற்கான உதாரணங்களில் அடங்குவன அலங்காரப் படலங்கள், (laminates), துணி வகைகள், காகிதம், உருக்காலைகளில் பயன்படும் மணல் வார்ப்புகள், சுருக்க எதிர்ப்பு துணிகள், பருத்தி கலவைகள், ரேயான், கார்டுராய், போன்றவை ஆகும். இது மேலும் மரப்பலகைகளை ஒட்டுவதற்கான பசைப்பொருளாகவும் பயன்படுகிறது. யூரியா பார்மால்டிகைடு மின்சாதனப் பொருட்களுக்கு உறை அமைப்பாக பயன்படுகிறது. (எ. கா., மேசை விளக்குகள்). திரைப்படங்களில் செயற்கை பனி உருவாக்க இதன் நுரை பயன்படுத்தப்படுகிறது.
விவசாய பயன்பாடு
தொகுயூரியா பார்மால்டிகைடு விவசாயத்தில் நைட்ரசன் உரங்களைக் கட்டுப்படுத்தி வெளியிடும் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. யூரியா பார்மால்டிகைடாது கார்பனீராக்சைடு மற்றும் அம்மோனியாவாக சிதைவுறு விகிதம் பெருமளவு மண்ணில் இயற்கையாக காணப்படும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளின் இந்த செயல்பாடு, அதன் காரணமாக வெளியிடப்படும் நைட்ரசன் வெளியிடப்படும் வீதம், வெப்பநிலை சார்ந்ததாகும். இத்தகைய நுண்ணுயிர் செயல்பாட்டிற்கு உகந்த வெப்பநிலை சுமார் 70-90 °F (சுமார் 20-30 °C) ஆகும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ Uses Of Formaldehyde
- ↑ H. Deim, G. Matthias, R. A. Wagner "Amino Resins" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry,2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a02_115.pub2
- ↑ Brady, George S.; Clauser, Henry R.; Vaccari, A. John (1997). Materials Handbook (14th ed.). New York, NY: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-007084-9.